என் மலர்
செய்திகள்

பிள்ளையார்பட்டியில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருப்பத்தூர்:
குடவரை கோவில்களில் முக்கிய ஸ்தலமாக விளங்கும் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி பெருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக் கம்.
இந்த ஆண்டு கடந்த 27 -ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. காலை மூஷிக வாகனத்தில் வெள்ளி கேடகத்தில் சாமி திருவீதி உலாவும், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் தினமும் நடைபெற்று வந்தன.
நேற்று 9-ம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. இதை யொட்டி சுவாமி காலையில் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரின் முன்பு கைலாசநாதம் முழங்கப்பட்டது. 2 தேர்கள் உள்ள இத்திருத்தலத்தில் உற்சவர் ஒரு தேரிலும், சண்டிகேஸ்வரர் ஒரு தேரிலும் எழுந்தருளினர்.
சண்டிகேஸ்வரர் தேரினை பெண்கள் மட்டுமே இழுத்தனர். மூலவர் கற்பக விநாயகர் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சார்த்தப்படும் சந்தன காப்பு அலங்காரத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இதனால் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. திருவீதி உலாவின் போது துரை.பாரதிதாசன், தங்க மணி, குழுவினரின் நாதஸ்வர இன்னிசையும் நடைபெற்றது.
இன்று (திங்கள்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட் டது. அப்போது முதல் பக்தர்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இன்றைய சிறப்பு நிகழ்ச்சியான தீர்த்தவாரி விழா காலை நடைபெற்றது. கோவில் எதிரே உள்ள திருக்குளத்தில் நடைபெற்ற இந்த தீர்த்தவாரி உற்சவத்தில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமை யில் பல்வேறு அபிஷேகங்கள் சுவாமிக்கு செய்யப்பட்டன. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று மதியம் 12 மணியளவில் மூலவரான கற்பக விநாயகருக்கு உச்சிக் கால பூஜை நடைபெற்றது. அப்போது விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு 11 மணி அளவில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடைபெறுகிறது.
இன்று முழுவதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 2 லட்சம் பேர் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கோவிலுக்குள் அவர்கள் பாதுகாப்பாக செல்ல கம்புகள் மூலம் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் வசதிக்காக பிள்ளையார்பட்டி பகுதிகளில் கூடுதல் கழிப்பறைகள், குளியல் அறை வசதிகள் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இதேபோல் மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பூலாங்குறிச்சி ராமநாதன் செட்டியார், காரைக்குடி தண்ணீர்மலை செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.






