என் மலர்
சிவகங்கை
சிவகங்கை நகர் ரெயில்வே காலனியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது19), கல்லூரி மாணவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பவானி என்பவரும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பவானிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்தன.
இதனை தொடர்ந்து நேற்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இதனை கேள்விப்பட்ட சரத்குமார், தனது நண்பர்கள் அழகு, சந்திரசேகர், அண்ணாத்துரை, அர்ஜூனன் மற்றும் 2 பேருடன் பவானி வீட்டிற்கு சென்று அவரது தந்தை முருகனிடம் பேசினார்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், அவரது மனைவி ராணி, உறவினர்கள் சரவணன், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து கம்பு மற்றும் கட்டைகளால் தாக்கியதாக சிவகங்கை நகர் போலீசில் சரத்குமார் புகார் செய்தார்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த சரத்குமார் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் சரத்குமார் தரப்பு தாக்கியதில் காயம் அடைந்ததாக முருகனின் உறவினரான நாகஜோதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மோகன் விசாரணை நடத்தி, இருதரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் முருகன், சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் அருகே நடைபயிற்சி மேற் கொண்டிருந்தவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.
திருப்பத்தூர் அருகே தம்பிபட்டியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் சண்முகம்.(42), மீன் விற்கும் தொழில் செய்து வந்த இவர், தம்பிபட்டியில் உள்ள நான்குவழிச்சாலை ரோட்டில் அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதியதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சண்முகம் இறந்தார்.
இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர் காவல் துறையினர் இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது20), ஆட்டோ டிரைவர். இவர் வீட்டில் புறா வளர்த்து வந்தார்.
இது தொடர்பாக அதே தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகு (30) என்பவருக்கும் கருப்ப சாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விரோதம் தொடர்பாக சிவகங்கையில் உள்ள மதுரை முக்கு பகுதியில் கருப்பசாமியை அழகு, கார்த்திக் (24), ரவி (24), விக்ரமன் (23) மற்றொரு கார்த்திக் (29) ஆகியோர் கம்பு மற்றும் கற்களால் தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த கருப்பசாமி, சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அழகு ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கருப்பசாமி மற்றும் போண்டா மணி ஆகியோர் தன்னை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து அழகு, கருப்பசாமி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். போண்டா மணியை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி:
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறினார்.
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளிடம் உள்ளது.
இப்போது கர்நாடகத்தில் என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். தமிழக மக்கள் கர்நாடகத்திலே கடுமையாக தாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் உடமைகள், உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது நீதிமன்றம் அளித்த தீர்ப்பே தவிர இருமாநில அரசுகளின் முடிவு அல்ல. நதிநீர் பங்கீட்டை பொறுத்தவரை கர்நாடகத்தின் அணைகளில் உள்ள தண்ணீரில் ஏறத்தாழ 57 சதவீதம் தண்ணீர் தமிழகத்திற்கு உண்டானது. அதில் கேரளாவுக்கு 4 சதவீதமும், புதுவைக்கு ஒரு சதவீதமும் பங்கு போக மீதி தமிழ்நாட்டிற்குதான். இதுவரை அவர்கள் தமிழகத்திற்கு 60 டி.எம்.சி. தண்ணீர் தந்திருக்க வேண்டும். 30-35 டி.எம்.சி.தான் தந்துள்ளார்கள். முழுமையாக தண்ணீரை தந்தால்தான் தஞ்சை பகுதியிலே விவசாயம் செய்ய முடிவும். அரசு போதிய தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும்.
நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடப்பதே நல்லது. எங்களுடைய வாழ்வாதார உரிமையை நாங்கள் விட்டு தரமாட்டோம். சட்டத்திற்கு உட்பட்டுதான் தண்ணீர் கேட்கிறோமோ தவிர மீறி அல்ல.
எனவே இரண்டு மாநில முதல்வர்களும் கலந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும். தவிர இதனால் அப்பாவி விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கக் கூடாது.
அதேபோல் தமிழக முதல்வரும் அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி அனைவரின் எண்ணத்தையும் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் தட்டிக் கழிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
தமிழக அரசு இங்கு நடைபெறுவதை மத்திய அரசிடம் அழுத்தம் தந்து கூற வேண்டும். காவிரி பிரச்சினையில் தலையிடமாட்டோம் என்று பிரதமர் மோடி கூறுவது ஏற்புடையது அல்ல. இருவர் இறந்துள்ளார்கள். 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை எரித்துள்ளார்கள்.
ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் உடனடியாக உள்துறை அமைச்சர் மூலம் தலையிடுபவர்கள், காவிரி பிரச்சினையால் ஏன் தலையிடவில்லை.
மேலும் இன்னும் சில தினங்களில் எனது தலைமையில் தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் கூடி காவிரி நதிநீர் சம்பந்தமாக விவாதித்து முடிவு எடுக்க இருக்கிறோம். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு தமிழக காங்கிரஸ் என்றும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி, நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி, குமரேசன் மற்றும் பலர் இருந்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
காவிரி பிரச்சனை இப்போது தலை தூக்கியுள்ளது. காவிரி நீர் என்பது தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் அல்லாமல் தமிழகத்திற்கு பொதுவானது. காவிரி நீரால் தமிழத்தில் 19 மாவட்டங்கள் பயன் அடைந்து வருகின்றன.
இந்த பிரச்சனையில் அரசு அனைத்து கட்சிகளையும் அழைத்து பேசி ஒரே முடிவாக எடுக்க வேண்டும். காவிரி பிரச்சனையில் நாம் நமது உரிமையை கேட்கிறோம்.
தற்போது கர்நாடகத்தில் மொழி வெறியை தூண்டி தமிழ் இளைஞர்களை அடித்து துன்புறுத்துகின்றனர். இதை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை அந்த மாநில அரசு அளித்து சேதம் அடைந்த வாகனங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக முதல்வர் முதல் தலைமுறையை சார்ந்த ஒவ்வொறு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தினை அறிவித்துள்ளார். மாவட்ட தொழில் மையம் இத்திட்டம் சிறப்புற செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் புதிதாக நிலம் வாங்கி கட்டிடங்கள் கட்டிடவும் மற்றும் எந்திரங்கள் நிறுவிடவும் ரூ.5 லட்சம் முதல் ஒரு கோடி வரை திட்ட மதிப்பீட்டின்படி வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தொழில் தொடங்க தமிழக அரசின் மானியமாக 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை பெறலாம். மேலும் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு செலுத்தப்படும் வட்டியில் 3 சதவீதம் வட்டி மானியமாகவும் பெற்று கொள்ளலாம்.
அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வணிக வங்கிகள், காரைக்குடியில் செயல்படும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் பாண்டியன் கிராம வங்கி மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது.
கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஏற்கனவே மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் இந்த திட்டத்தின்கீழ் கடனுதவி பெற இயலாது.
விவசாயம், வாகனம், மாசு ஏற்படுத்தும் தொழில்கள் போன்ற ஒரு சில தொழில்கள் தவிர்த்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து அதன் நகலினை பதிவிறக்கும் செய்து உரிய இணைப்புகளுடன் பொதுமேலாளர் மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிவகங்கை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரத்திற்கு சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட நாமலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜா. இவரது மனைவி எழிலரசி. நேற்று இவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகிலேயே மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியே சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தான். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினான்.
வீடு திரும்பிய எழிலரசி கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலா மணி வழக்குப்பதிவு செய்து நகை திருடியவனை தேடி வருகின்றார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள புளியங்குடிபட்டியை சேர்ந்தவர் சிவகாமி (வயது46). இவரது மகள் கலைச்செல்வி (19). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி கல்லூரி செல்வதாக கூறி விட்டு சென்ற கலைச்செல்வி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.
இதுகுறித்து சிவகாமி கல்லல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப் பதிவு செய்து கலைச் செல்வியை தேடி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் இடையமேலூரைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது23). இவருக்கு அமுதா (20) என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக அன்பரசு-அமுதாவுக்கு தொடர் காய்ச்சல், இருமல், உடல் வலி ஆகியவை இருந்து வந்துள்ளது. 2 பேரும் இடையமேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். ஆனால் காய்ச்சல் குறையவில்லை.
இதையடுத்து இருவரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்களின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில் இருவருக்கும் டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அன்பரசு-அமுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களது குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை.
இதே ஊரைச் சேர்ந்தவர் முருகன் மகன் அண்ணாத்துரை (25). இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்து வந்ததையடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கும் காய்ச்சல் குறையவில்லை.
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அண்ணாத்துரைக்கும் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவகங்கையை சேர்ந்த பழனிவேலு என்பவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு காய்ச்சல் குறைந்ததால் தற்போது வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர் நோன்பு பொட்டல் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 30).
நேற்று மாலை இவர், தனது மகனுடன் காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தாயாரைப் பார்ப்பதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பீ.பீ. நகர் என்ற இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வாலிபர்களில் ஒருவன் மகாலட்சுமி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக் கொண்டான். இதில் நிலைகுலைந்த அவர், சத்தம் போடுவதற்குள் 2 வாலிபர்களும் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
நகையை பறிகொடுத்த மகாலட்சுமி, இதுகுறித்து காரைக்குடி டவுன் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து நகை பறித்த வாலிபர்களை தேடி வருகிறார்.
சிவகங்கை:
சிவகங்கை மாணிக்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது19), மாணவர். இவரது நண்பர் சாஸ்திரி தெருவை சேர்ந்த வாணிகருப்பு (25). கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலமுருகன், ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அவருடன் வாணிகருப்பும் சென்றார்.
அதன் பிறகு ஏ.டி.எம். கார்டை பாலமுருகன் வீட்டில் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவரது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், ஏ.டி.எம். கார்டை தேடியபோது அது மாயமாகி இருந்தது.
தொடர்ந்து விசாரித்த போது கணக்கில் இருந்து 3 தவணைகளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் எடுத்து மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்த பாலமுருகன், நண்பர் வாணிகருப்பு மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் அடைக்கலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பத்தூர்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பத்தூர் பாரதி ரோட்டில் 24 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலையை பக்தர்கள் பூஜை செய்து, நேற்று செட்டிதெரு, நகை கடை பஜார் வழியாக எடுத்து வந்தனர்.
செட்டிதெருவில் உள்ள மசூதி அருகில் ஊர்வலம் வந்து கொண்டிருந்தபோது, திருப்பத்தூர் அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இதாயத் (வயது 26) என்பவர் அங்கு செல்போன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது ஊர்வலத்தில் சென்றவர்களில் சிலர் தகராறில் ஈடுபட்டு, இதாயத்தை அடித்து உதைத்தனர். படுகாயம் அடைந்த இதாயத் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த இதாயத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 25-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதே ஊர்வலத்தில் திருப்பத்தூர் ஜார்ஜ்பேட்டையை சேர்ந்த உதயகுமார் (22) என்ற வாலிபரும் தாக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்தும், இதாயத் தாக்கப்பட்டது குறித்தும் திருப்பத்தூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதாயத் தாக்கப்பட்டது தொடர்பாக பாரதி ரோட்டை சேர்ந்த தாமோதரன் மகன் ஜீவா என்கிற சுந்தர்ராஜன் (35), தியாகராஜன் மகன் ஜெகதீசன் (26) சுப்பிரமணிய சாமி கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் சுரேஷ் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல உதயகுமார் தாக்கப்பட்டது தொடர்பாக ஜார்ஜ்பேட்டையை சேர்ந்த ஜோதிவேல் மகன் நவீன் குமார் (22), பாரதிநகரை சேர்ந்த சீனிவாசன் (23) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் நவீன்குமார் கைது செய்யப்பட்டார். சீனிவாசன் தி.மு.க. நகர் மன்ற உறுப்பினரான சரவணன் என்பவரது மகன் ஆவார். அவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.






