என் மலர்
செய்திகள்

முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்க வாய்ப்பு: சிவகங்கை கலெக்டர் தகவல்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக முதல்வர் முதல் தலைமுறையை சார்ந்த ஒவ்வொறு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தினை அறிவித்துள்ளார். மாவட்ட தொழில் மையம் இத்திட்டம் சிறப்புற செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் புதிதாக நிலம் வாங்கி கட்டிடங்கள் கட்டிடவும் மற்றும் எந்திரங்கள் நிறுவிடவும் ரூ.5 லட்சம் முதல் ஒரு கோடி வரை திட்ட மதிப்பீட்டின்படி வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தொழில் தொடங்க தமிழக அரசின் மானியமாக 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை பெறலாம். மேலும் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு செலுத்தப்படும் வட்டியில் 3 சதவீதம் வட்டி மானியமாகவும் பெற்று கொள்ளலாம்.
அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வணிக வங்கிகள், காரைக்குடியில் செயல்படும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் பாண்டியன் கிராம வங்கி மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது.
கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஏற்கனவே மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் இந்த திட்டத்தின்கீழ் கடனுதவி பெற இயலாது.
விவசாயம், வாகனம், மாசு ஏற்படுத்தும் தொழில்கள் போன்ற ஒரு சில தொழில்கள் தவிர்த்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து அதன் நகலினை பதிவிறக்கும் செய்து உரிய இணைப்புகளுடன் பொதுமேலாளர் மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிவகங்கை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரத்திற்கு சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






