என் மலர்
செய்திகள்

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி விபத்தில் பலி
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், கந்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கரு.பாக்கியம் (வயது51). சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணைச் செயலாளரான இவர், அரசு கூடுதல் வக்கீலாகவும் பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை கரு.பாக்கியம், தனது நண்பரான வக்கீல் முத்துக்குமாருடன் (41) சுந்தரநடப்பு கிராமத்தில் நடந்த கோவில் திரு விழாவில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் இரவு 11 மணி அளவில் இருவரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். முத்துக்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
சிவகங்கை அருகே சாமியார்பட்டி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.
அந்த இடத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி சாலையோர கிணற்றில் பாய்ந்தது. இதில் முத்துக்குமார் கிணற்றில் இருந்து வந்து மேலே வந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தண்ணீர் உள்ள கிணற்றின் சகதியில் சிக்கி கரு.பாக்கியம் இறந்து விட்டார்.
அக்கம்பக்கத்தினர் 3 மணிநேரம் போராடி உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான கரு.பாக்கியத்துக்கு மனைவி மற்றும் மகனும், மகளும் உள்ளனர். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. கரு.முருகானந்தத்தின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.






