என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    சிவகங்கையில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

    மாற்றுத்திறனாளி ஆசிரியரை வேறு இடத்திற்கு மாறுதல் செய்ததை கண்டித்து சிவகங்கையில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களின் இடமாறுதலுக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் திருப்புவனம் ஒன்றியம் கலுவன்குளம் நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பாரதிதாசன் என்பவரை பணி நிரவலில் சிவகங்கை ஒன்றியத்திற்கு இடமாறுதல் செய்தார்களாம். மாற்றப்பட்ட பாரதிதாசன் மாற்றுதிறனாளி ஆவார். மாற்றுத்திறனாளி ஆசிரியரை மாறுதல் செய்யக்கூடாது என்று அரசாணை விதிமுறை உள்ளதாம்.

    இந்த விதிமுறையை மீறி பாரதிதாசன் மாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை அதே இடத்தில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்துணைத்தலைவர் ஜோசப்ரோஸ் தலைமையில் மாவட்ட தலைவர் தாமஸ்அமலநாதன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் உள்பட அந்த அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் நேற்று சிவகங்கையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:– தற்போது அரசு பிறப்பித்த ஆணையில் பணிநிரவல் செய்யும்போது கண்பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை பணிநிரவல் மற்றும் மாறுதல் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் அதையும் மீறி மாற்றுத்திறனாளி ஆசிரியர் பாரதிதாசனை அவர் பணி செய்யும் இடத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிவகங்கை ஒன்றியம் தமறாக்கி வடக்கு நடுநிலைப்பள்ளிக்கு கடந்த 13–ந்தேதி மாறுதல் செய்துள்ளனர். அவருக்கு பணிமாறுதலுக்கான ஆணை வழங்கப்படாத நிலையிலேயே அவர் பணிபுரிந்த பணிக்கு வேறு ஒரு ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். எனவே மாற்றுத்திறனாளி ஆசிரியர் பாரதிதாசனை அதே இடத்தில் பணிபுரிய அனுமதிக்கும் வரை நாங்கள் காத்திருப்பு போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார், முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல்முருகன், மாவட்ட கல்வி அதிகாரி பார்த்தசாரதி ஆகியோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேசி சமரசம் செய்தனர். அதன்பின்னர் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
    Next Story
    ×