என் மலர்
செய்திகள்

காரை முந்திச்செல்ல முயன்றபோது விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டிட தொழிலாளி பலி
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ரமேஷ் (வயது29), கட்டிட தொழிலாளி.
இவர், இன்று (வியாழக்கிழமை) காலை ஊரில் இருந்து வேலைக்காக சிவகங்கைக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளில் சென்ற ரமேஷ், பையூர் விலக்கு பகுதியில் முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரமேஷ் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை ஆஸ்பத்திரி கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது
ஆனால் ஆம்புலன்சு வர தாமதமானதால், சரக்கு ஆட்டோ மூலம் அவரை ஆஸ்பத்திரி கொண்டு செல்ல முயன்றனர். அந்த நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்துவிட, ரமேசை அதில் ஏற்றினர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
பலியான ரமேசுக்கு புவனேசுவரி (22) என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






