என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள சொக்கநாதப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் ஷாலினி (வயது 4). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற ஷாலினியை, அவரது தாத்தா கோவிந்தன் மாலையில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது தஞ்சாவூரில் இருந்து மதுரை நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற பால் வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக ஷாலினி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஷாலினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அவரது தாத்தா கோவிந்தன் கதறி அழுதார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் ஆதனக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த ஷாலினியை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஷாலினி பரிதாபமாக இறந்தாள்.
பின்னர் ஷாலினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பால்வேனை புதுக்கோட்டை இச்சடியில் வைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அதில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய பால் வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை அருகே பால்வேன் மோதி யூ.கே.ஜி. மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எம்.ஜி.ஆரின் 100-வது ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி புதுக்கோட்டையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்கள் மன்னர் கல்லூரியில் இருந்து, பழைய பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று எம்.ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க போலீசாரிடம் அனுமதி பெற்று இருந்தனர்.
அதன்படி நேற்று முன்னாள் எம்.பி. ராஜாபரமசிவம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தீபா ஆதரவாளர்கள் மன்னர் கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட தயார் நிலையில் இருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு போடப்பட்டு உள்ள கதவில் பூட்டுப்போட்டு பூட்டினர். பின்னர் அவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க வரும், தீபா ஆதரவாளர்களை தடுத்து நிறுத்துவதற்காக உருட்டு கட்டைகளுடன் காத்திருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் உருவானது.
மேலும் புதிய பஸ்நிலையம் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த தீபா ஆதரவு பதாகைகளையும், அ.தி.மு.க.வினர் அகற்றினர்.
தொடர்ந்து பதற்றம் நிலவியதால் அந்த பகுதியில் கடைகள் அனைத்தும் உடனடியாக அடைக்கப்பட்டன. தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அத்துடன் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
சட்டம், ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்படுவதை தடுக்கும் வகையில் புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு தலைமையிலான போலீசார் மன்னர் கல்லூரி முன்பு திரண்டு இருந்த தீபா ஆதரவாளர்களை சுற்றி வளைத்து தடுத்தனர். அப்போது போலீசார், சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு தீபா ஆதரவாளர்களை எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க தடை விதிக்கிறோம் என கூறினார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த தீபா ஆதரவாளர்கள் மன்னர் கல்லூரி முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி கார் உள்பட அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
அதன்பிறகு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 11 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஓரண்குடியை சேர்ந்த அய்யர் மகன் ரஜினி(வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஜோசப்(26), பழனிச்சாமி(25).
நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் கீரனூர் சென்று விட்டு ஓரண்குடிக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஜோசப் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.
அப்போது திருச்சி புறவழிச்சாலையை கடக்க முயன்ற போது கேரளாவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற பஸ் வந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ரஜினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பழனிசாமி மற்றும் ஜோசப் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பழனிசாமி மற்றும் ஜோசப்பை மீட்டு திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி இறந்தார்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதை முன்னிட்டு அங்குள்ள முனியன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட கோவில் காளை மந்தையில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அங்கு கொண்டு வரப்பட்ட பல காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
இது பற்றி தகவல் அறிந்த ராப்பூசல் கிராம நிர்வாக அதிகாரி முரளிசங்கர், இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ராப்பூசலை சேர்ந்த முனியாண்டி, செங்குட்டுவன், துரையன், ரவி, துரைக்கண்ணு, மாரியப்பன் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போட்டியை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஜல்லிக்கட்டு போட்டி கைவிடப்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் விராலிமலை அமலாங்குளம் பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு திடலில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சிலர் காளைகளை அலங்கரித்து அழைத்து சென்றனர். ஆனால் தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்தினர்.
திருநல்லூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முன்பாகவும் தடையை மீறி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. முன்னதாக காளைகளுக்கு பூஜைகள் செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இடையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசேன் (வயது 35), விவசாயி. இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவியும், சந்தியா, சுந்தியா என்ற மகள்களும், ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர்.
வெங்கடேசனுக்கு காவிரி பாசனப்பகுதியில் 1 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் ஆண்டுதோறும் நெல் பயிரிட்டு வந்தார். இந்த ஆண்டும் வழக்கம்போல் நெல் விதைத்தார். ஆனால் காவிரி ஆறு வறண்டதாலும், போதிய மழை இல்லாததாலும் நெற் பயிர் வாடியது.
தினமும் வயலுக்கு சென்று விட்டு சோகத்துடன் திரும்பும் அவரை மனைவி மற்றும் உறவினர்கள் தேற்றி வந்தனர். ஆனாலும் மிகுந்த விரக்தியில் வெங்கடேசன் இருந்து வந்தார்.
இதற்கிடையே பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக அவரது மனைவி கலைச்செல்வி நேற்று முன்தினம் கரும்பு, மஞ்சள் மற்றும் புத்தாடைகள் வாங்கி வருமாறு கணவரிடம் கூறினார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத வெங்கடேசன் பயிர் கருகிய நிலையில் நமக்கு பொங்கல் கொண்டாட்டம் தேவையா? என்று கேட்டார்.
மேலும் கடைக்கு செல்லாமல் வீட்டில் தூங்க சென்ற வெங்கடேசனுக்கு அதி காலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். பொங்கல் தினத்தன்று காலை அவரது மனைவி கலைச்செல்வி சென்று பார்த்த போது கணவர் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந் தார். அவரது உடலைப் பார்த்து கதறி அழுதார்.
பொங்கல் நாளில் விவசாயி மாரடைப்பால் இறந்தது இடையாத்தூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. அறந்தாங்கி பகுதியில் நெற் பயிர் கருகியதால் இறந்த 3-வது விவசாயி வெங்கடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பி.எஸ்.எம் திருமண மண்டபத்தில் நபார்டு வங்கி, ஜி.வி.என் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய நிதிசார் கல்வி விழிப்புணர்வு மற்றும் ரொக்கமில்லா பணபரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம் மாவட்டகலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து பேசியதாவது:-
பொதுமக்களிடையே பணத்தாள் இல்லா பணப்பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசலில், விழிப்புணர்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு முகாமின் நோக்கம் பொதுமக்கள் அனைவரும் சிறுசேமிப்பின் முக்கியத்துவத்தினை உணர வேண்டும் என்பதே ஆகும். எந்த ஒரு குடும்பமும் வாழ்க்கை சுழற்சிக்கு ஏற்ப திட்டமிட்டு சேமிக்கிறதோ, அந்த குடும்பமே வளர்ச்சியை நோக்கி செல்லும்.
கிராம மக்கள் தனியார் நிதிநிறுவனங்களின் அதிகப்படியான வட்டி கிடைக்கும் என்று ஆசைப்படுவதை தவிர்க்க வேண்டும். ஏழை எளிய மக்கள், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் சேமிக்க வேண்டும். தங்களின் சேமிப்பை அடிப்படையாகக் கொண்டு, சரியான சிறு தொழில் திட்டத்துடன் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையிலுள்ள வங்கி மேலாளரை அணுகி சிறுகடன் பெறலாம்.
வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் பெற்ற சிறுகடனை, சரியான நேரத்தில் வங்கிக்கு திருப்பி செலுத்தும் போது, தங்களின் சிறுதொழிலை விரிவுபடுத்தும் வகையில் மேலும் வங்கிக்கடன் பெறலாம். மேலும், சரியாக கடனை திருப்பி செலுத்தும் நபர்களுக்கு, கூட்டுறவு சங்கங்கள் வட்டியில்லா பயிர்க்கடன்களை கொடுக்கிறது. கிராம மக்கள் பணம் கொடுத்து பொருட்கள் வாங்குவதற்கு பதிலாக, பணமில்லா பரிவர்த்தனை செய்திட பொதுமக்களாகிய நீங்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கணேஷ் பேசினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது தொடர்பாக அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டரும் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம் 7வது தேசிய வாக்காளர் தினத்தினை 25.01.2017 அன்று கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி 7வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 7வது தேசிய வாக்காளர் தின கருத்தான இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரம் அளித்தல் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பேனர்களை பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், பொதுமக்கள் கூடும் இடம் ஆகிய பல்வேறு இடங்களில் அலுவலர்கள் வைக்க வேண்டும்.
மாவட்ட தலைநகரில் தேசிய வாக்காளர் தின விழா ஊராட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சமதாய குழுக்கள், பத்திரிகையாளர்கள், என்.எஸ்.எஸ், என்.சி.சி ஆகிய பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்துவதுடன் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்க வேண்டும்.
மேலும் புதுக்கோட்டையில் நடைபெறும் தேசிய வாக்காளர் தின பேரணியை சிறப்பாக நடத்தும் வகையில் வருவாய்த்துறை, மகளிர்த்திட்டம், கல்வித்துறை, விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் தங்களது தொடர்பான பணிகளை ஒருங்கிணைந்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக புதுக்கோட்டை நாட்டுப்படகு மீனவர்கள் 2 பேரை யாழ்ப்பாணம் போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் உள்ளனர். அவர்கள் தினமும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மணமேல் குடி பகுதியை சேர்ந்த சக்தி வேல் (வயது 30) என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் அவரும், முனியகுமார் (28) என்பவரும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதற்கிடையே நடுக்கடலில் வைத்து அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களின் நாட்டுப்படகில் இறங்கி சோதனை போட்டனர். அப்போது அதில் 50 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கடற் படையினர் யாழ்ப்பாணம் காங்கேசன் துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக காங்கேசன்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகலில் மீனவர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக நாட்டுப்படகு மீனவர்கள் கைதாகி இருப்பது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பி.ஏ.57, கூட்டுறவு விற்பனை சங்க தலைமை அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.
தமிழக அரசு கூட்டுறவுத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதன்படி தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டையுடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்ப ங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகிய குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பினை பொங்கலுக்கு முன்னரே நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் திருமயம் பி.ஏ.57, கூட்டுறவு விற்பனை சங்க தலைமை அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை நகராட்சி, எம்.எம்.16 நகர கூட்டுறவு பண்டகசாலை கடை எண்:4ல், 743 குடும்ப அட்டைதாரர்களுக்கும், அன்னவாசல், இலுப்பூர், மலைக்குடிப்பட்டி மற்றும் கீரனூர் ஆகிய இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரிபருப்பு, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்திலுள்ள 1002 நியாயவிலைக்கடைகள் மூலம் 4,03,593 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது. எனவே, தமிழகஅரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதன் மூலம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் காமராஜ்நகர், கடைவீதி, செக்போஸ்ட் உள்பட பல இடங்களில் தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், அதே போல் தீபா பேரவை சார்பில் தீபாவை ஆதரித்தும் சில தனியார் நிறுவனங்கள் சார்பிலும் தொண்டர்கள் சார்பிலும் பல இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விராலிமலை யூனியன் கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையில் தாசில்தார் சதீஷ், துணை கமிஷனர் ராதா மற்றும் போலீசார் முன்னிலையில் பஞ்சாயத்து பணியாளர்கள் காமராஜ் நகரில் வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவன பிளக்ஸ் பேனர்களை அகற்றினர். பின்னர் மணமேட்டுப்பட்டிரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் வழியில் இருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றி விட்டு கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த தி.மு.க. பிளக்ஸ் பேனரை அகற்ற வந்தனர்.
இதையறிந்த தி.மு.க.வினர் அங்கு திரண்டு பேனரை அகற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல் தீபா பேரவையை சேர்ந்த அ.தி.மு.க.வினரும் திரண்டு வந்து , தீபா ஆதரவு பேனரை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க முறைப்படி அனுமதி பெற்றால் அகற்றமாட்டோம் என்று உறுதியளித்தனர்.
இதற்கிடையே செக் போஸ்ட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தீபா பேரவை பிளக்ஸ் போர்டுகளை அகற்றப்போவதாக தகவல் பரவியதால் அங்கும் தீபா ஆதரவாளர்கள் திரண்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
கரூர் மாவட்டம் கொசூரில் எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் இணை செயலாளர் கொன்னாச்சி தலைமையில் தீபா ஆதரவாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் தீபா தலைமையில் அணிவகுப்பது, ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ரத்த சொந்தமான தீபாவை ஆதரிக்காவிட்டால் அடிமட்ட தொண்டர்கள் எப்போதும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை ஆதரிக்க மாட்டோம். தீபாவை தவிர யாரையும் எதற்காகவும் ஆதரிக்க மாட்டோம். கரூரில் நாளை 11-ந்தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 3 பஞ்சாயத்து மக்கள் 25 வாகனங்களில் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அண்ணாமலை, அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான குழுவினர் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்கவிடுதி, ஏத்தநாடு, அகவயல், ஆவுடையார்கோவில், பரமந்தூர், அமரடக்கி, பரிவீரமங்கலம் பூவலூர், பாண்டிபத்திரம், கரூர், திருப்புனவாசல், சிவந்தாங்காடு, நானாக்குடி, அறந்தாங்கி, பெருங்காடு, ஏகப்பெரும களூர், திருவரங்குளம், குறுந்தடிவயல், கே.வி.கோட்டை, பழைய கந்தர்வக்கோட்டை, நெய்குடிப்பட்டி, குளத்தூர், விராலிமலை, நீர்பழனி ஆகிய இடங்களில் உள்ள வயல் வெளிகளில் கருகிய சம்பா நெல் பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் மழையில்லாமல் கருகிய நெற்பயிர்களை எடுத்து வந்து ஆய்வு குழுவினரிடம் காண்பித்தனர்.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இதில் வறட்சியால் பயிர் கருகியதால் வயல்வெளிகள் 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் நிலை கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கணேஷ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் வைரமுத்து, எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை ஆறுமுகம், மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, புதுக்கோட்டை உதவி கலெக்டர் அம்ரீத், இணை இயக்குனர் (வேளாண்மை) அண்ணாமலை, வருவாய் கோட்டாட்சியர்கள் வடிவேல்பிரபு, ரம்யாதேவி, கூட்டுறவு சங்க தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
கந்தர்வக்கோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வாணன். (வயது 45) அதே பகுதியில் அரிசி மண்டி வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை தமிழ்வாணன் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வயலை பார்ப்பதற்காக சென்றுள்ளார.
அப்போது புதுக்கோட்டை சாலையை கடக்க முயற்சி செய்தார். அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது பலமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்வாணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்த புதுக்கோட்டை டி.எஸ்.பி. பாலகுரு மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவரை கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






