என் மலர்
செய்திகள்

நெற்பயிர் கருகியதால் அறந்தாங்கி விவசாயி மாரடைப்பால் பலி
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இடையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசேன் (வயது 35), விவசாயி. இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவியும், சந்தியா, சுந்தியா என்ற மகள்களும், ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர்.
வெங்கடேசனுக்கு காவிரி பாசனப்பகுதியில் 1 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் ஆண்டுதோறும் நெல் பயிரிட்டு வந்தார். இந்த ஆண்டும் வழக்கம்போல் நெல் விதைத்தார். ஆனால் காவிரி ஆறு வறண்டதாலும், போதிய மழை இல்லாததாலும் நெற் பயிர் வாடியது.
தினமும் வயலுக்கு சென்று விட்டு சோகத்துடன் திரும்பும் அவரை மனைவி மற்றும் உறவினர்கள் தேற்றி வந்தனர். ஆனாலும் மிகுந்த விரக்தியில் வெங்கடேசன் இருந்து வந்தார்.
இதற்கிடையே பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக அவரது மனைவி கலைச்செல்வி நேற்று முன்தினம் கரும்பு, மஞ்சள் மற்றும் புத்தாடைகள் வாங்கி வருமாறு கணவரிடம் கூறினார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத வெங்கடேசன் பயிர் கருகிய நிலையில் நமக்கு பொங்கல் கொண்டாட்டம் தேவையா? என்று கேட்டார்.
மேலும் கடைக்கு செல்லாமல் வீட்டில் தூங்க சென்ற வெங்கடேசனுக்கு அதி காலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். பொங்கல் தினத்தன்று காலை அவரது மனைவி கலைச்செல்வி சென்று பார்த்த போது கணவர் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந் தார். அவரது உடலைப் பார்த்து கதறி அழுதார்.
பொங்கல் நாளில் விவசாயி மாரடைப்பால் இறந்தது இடையாத்தூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. அறந்தாங்கி பகுதியில் நெற் பயிர் கருகியதால் இறந்த 3-வது விவசாயி வெங்கடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.






