என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,03,593 பேருக்கு பொங்கல் பரிசு: அமைச்சர் தகவல்
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,03,593 பேருக்கு பொங்கல் பரிசு: அமைச்சர் தகவல்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,03,593 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பி.ஏ.57, கூட்டுறவு விற்பனை சங்க தலைமை அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.

    தமிழக அரசு கூட்டுறவுத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதன்படி தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டையுடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்ப ங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகிய குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பினை பொங்கலுக்கு முன்னரே நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் திருமயம் பி.ஏ.57, கூட்டுறவு விற்பனை சங்க தலைமை அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் புதுக்கோட்டை நகராட்சி, எம்.எம்.16 நகர கூட்டுறவு பண்டகசாலை கடை எண்:4ல், 743 குடும்ப அட்டைதாரர்களுக்கும், அன்னவாசல், இலுப்பூர், மலைக்குடிப்பட்டி மற்றும் கீரனூர் ஆகிய இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரிபருப்பு, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்டத்திலுள்ள 1002 நியாயவிலைக்கடைகள் மூலம் 4,03,593 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது. எனவே, தமிழகஅரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதன் மூலம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×