என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலையில் போராட்டம் நடத்திய தீபா ஆதரவாளர்கள்.
    X
    விராலிமலையில் போராட்டம் நடத்திய தீபா ஆதரவாளர்கள்.

    தீபா பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்: அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆதரவாளர்கள் போராட்டம்

    புதுக்கோட்டை அருகே தீபா பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டதை கண்டித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் காமராஜ்நகர், கடைவீதி, செக்போஸ்ட் உள்பட பல இடங்களில் தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், அதே போல் தீபா பேரவை சார்பில் தீபாவை ஆதரித்தும் சில தனியார் நிறுவனங்கள் சார்பிலும் தொண்டர்கள் சார்பிலும் பல இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் விராலிமலை யூனியன் கமி‌ஷனர் சுப்பிரமணியன் தலைமையில் தாசில்தார் சதீஷ், துணை கமி‌ஷனர் ராதா மற்றும் போலீசார் முன்னிலையில் பஞ்சாயத்து பணியாளர்கள் காமராஜ் நகரில் வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவன பிளக்ஸ் பேனர்களை அகற்றினர். பின்னர் மணமேட்டுப்பட்டிரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் வழியில் இருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றி விட்டு கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த தி.மு.க. பிளக்ஸ் பேனரை அகற்ற வந்தனர்.

    இதையறிந்த தி.மு.க.வினர் அங்கு திரண்டு பேனரை அகற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல் தீபா பேரவையை சேர்ந்த அ.தி.மு.க.வினரும் திரண்டு வந்து , தீபா ஆதரவு பேனரை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க முறைப்படி அனுமதி பெற்றால் அகற்றமாட்டோம் என்று உறுதியளித்தனர்.

    இதற்கிடையே செக் போஸ்ட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தீபா பேரவை பிளக்ஸ் போர்டுகளை அகற்றப்போவதாக தகவல் பரவியதால் அங்கும் தீபா ஆதரவாளர்கள் திரண்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

    கரூர் மாவட்டம் கொசூரில் எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் இணை செயலாளர் கொன்னாச்சி தலைமையில் தீபா ஆதரவாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் தீபா தலைமையில் அணிவகுப்பது, ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ரத்த சொந்தமான தீபாவை ஆதரிக்காவிட்டால் அடிமட்ட தொண்டர்கள் எப்போதும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை ஆதரிக்க மாட்டோம். தீபாவை தவிர யாரையும் எதற்காகவும் ஆதரிக்க மாட்டோம். கரூரில் நாளை 11-ந்தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 3 பஞ்சாயத்து மக்கள் 25 வாகனங்களில் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
    Next Story
    ×