என் மலர்
புதுக்கோட்டை
அரிமளம்:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சிரயம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விக்டர் அமல்ராஜ் இவருடைய மகள் ஜனனிக்கு (வயது 7) காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
டாக்டர்கள் பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் பன்றி காய்ச்சல் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜனனி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில் மருத்துவ இணை இயக்குனர்கள் பரணிதரன், கலைவாணி ஆகியோர் வழி காட்டுதல்படி அரிமளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துராஜா தலைமையில் அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாம் மூலம் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. பன்றி காய்ச்சல் ஒரு வகையான வைரஸ் மூலம் பரவுகிறது. மேலும் பன்றி காய்ச்சல் தொற்று ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு எதிர்ப்பு சக்தி மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. அரிமளம் பேரூராட்சி பகுதிகளில் தன் சுத்தம், கைகளை கழுவி சாப்பிடுதல், இருமும் போதும், தும்முபோதும் வாயில் கைகளை வைத்து கொண்டு இரும வேண்டும், வீட்டை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
இந்த சிறப்பு 7 மருத்துவ முகாம்களில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
மதுரை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வீரசேகரன் (வயது 48). மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது சொந்த வேலையின் காரணமாக காரில் மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். காரை சந்தானம் (23) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த கார் விராலிமலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக திருச்சியிலிருந்து மதுரை நோக்கி அரசு பஸ் சென்றது. நிலை தடுமாறிய அரசு பஸ் எதிர்பாராதவிதமாக வீரசேகரன் வந்த காரின் மீது பலமாக மோதியது.
இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. வீரசேகரன் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஓட்டி வந்த சந்தானம் படுகாயம் அடைந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தானத்தை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சம்பவம் குறித்து அறிந்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் சம்பவ இடத்திற்கு சென்று வீரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதை கண்டித்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கண்டன முழக்கங்களுடன் பேரணியாக வந்த அவர்கள் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மர்ர்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கவிவர்மன், இந்திய கம்ïனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் செங்கோடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செய லாளர் கலைமுரசு ஆகியோர் தலைமை வகித்தனர்.
சி.பி.எம் சார்பில் செல்வராஜ், பொன்னுச்சாமி, ஜியாவுதீன், நராயணன், சலோமி, அன்புமணவாளன், பாலசுப்பிரமணியன், விக்கி, நிரஞ்சனா, லட்சாதிபதி, தமிழரசன், சி.பி.ஐ. சார்பில் தர்மராஜன், மாதவன், ராசு, ராமச்சந்திரன், முருகானந்தம், சசி, திருநாவுக்கரசு, வி.சி.க. சா ர்பில் திலீபன், பாவாணன், திருமறவன், சின்னு, அழகு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விராலிமலை:
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநல்லூர் கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து பேராசிரியர் காதர் முஹைதீன், சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், சுகாதார பணிகள் இணை இயக்குநர் சம்சாத் பேகம், துணை இயக்குநர் (சு.ப) கலைவாணி, கூட்டுறவு தலைவர் ராமசாமி,
ஆத்மா கமிட்டி தலைவர் சாம்பசிவம், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் இளவரசி வசந்தன், நாட்டாமை அலாவுதீன், திருநல்லூர் கோயில் நிர்வாகி செந்தில் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் விழாவில் கலந்துகொண்டனர். முன்னதாக பொது சுகாதார துறை சார்பில் ஹரி விக்னேஷ் வரவேற்றார். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் கவி சக்கரவர்த்தி நன்றி கூறினார்.
பின்னர் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு அணைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் பொது மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்தனர். முகாமில் சர்க்கரை நோய் , ரத்த அழுத்தம், கர்பிணி பெண்களுக்கான ஸ்கேன், குழந்தை நலம், கண் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
முகாமில் மொத்தம் 815 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 51 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பார்க்கப்பட்டது. 25 பேருக்கு இ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டது மற்றும் 24 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் பல நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ குழு சார்பில் நிலவேம்பு கசாயம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை பரம்பூர் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்களுக்கு உடல் உறுப்பு தான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்லூரி முதல்வர் பரிமளாதேவி தலைமை வகித்தார்.
மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சம்சத் பேகம் முன்னிலை வகித்தார். இந்த கருத்திரங்கில் முதல்வர் பரிமளா தேவி பேசியதாவது:-
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. விபத்தில் யாராவது மூளைச்சாவு அடைந்தால் உறவினர்கள் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும். மூளைச்சாவு அடைந்தவரிடம் எடுக்கப்படும் இதயம், இதயவால்வு, ரத்த குழாய், நுரையீரல், கணையம், சிறுகுடல், தோல், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் மூலம் 12 பேருக்கு வாழ்வளிக்க முடியும். எனவே உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் வழிகாட்டுதலின்படி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் உடல் உறுப்பு மற்றும் திட்டம் குறித்த சிகிச்சை முறைகள் மற்றும் தகவல்களை ஏழை எளிய மக்களுக்கு விளக்கி கூறி பலனடைய செய்வதோடு உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து நத்தம்பண்ணையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல் நபராக தன்னுடைய அனைத்து உடல் உறுப்புகளையும் தானம் செய்வதற்கான விருப்ப விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முதல்வர் பரிமளா தேவியிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தான கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என காப்பீடு திட்ட அலுவலர்களுக்கு சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ் கூறினார், புதுக்கோட்டை மாவட்ட காப்பீடு திட்ட மாவட்ட அலுவலர் சுவாமிநாதன் விருப்ப மனுவில் கோரப்பட்டுள்ள தகவல்களை விவரித்து கூறினார். முன்னதாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் காப்பீடு திட்ட தொடர்பு அலுவலர் பாலமீனா வரவேற்றார். முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் முபாராக் நன்றி கூறினார்.
விராலிமலை:
விராலிமலை துணை மின் நிலையத்தில் நாளை (25-ந்தேதி) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் மின்சாரம் இருக்காது.
இது தொடர்பாக உதவி மின்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
விராலிமலை நகர்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கோமங்களம், கல்குடி, பொருவாய், அத்திப்பள்ளம், நம்பம்பட்டி, ராஜாளிப்பட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, செட்டியபட்டி, தேன்கன்யூர், கொடும்பாளுர், மாதராபட்டி, ராமகவுண்டம்பட்டி, விராலூர், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்குடிப்பட்டி, கோத்திராப்பட்டி, கட்டகுடி, பாப்பாவயல், முருகேசன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனைடயலாம். மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே லெணா விலக்கில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இம்முகாமில் பிரதீப்குமார் தனது மனைவி மேகலாவுடன்(வயது 27) வசித்து வந்தார்.
கூலி வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணம் நடந்து 5 வருடங்கள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீப்குமார் தினமும் குடித்து விட்டு வந்து
வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மேகலா விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் இருந்த மேகலாவை திருமயம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்த பின் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேகலா பரிதாபமாக இறந்து விட்டார். நமணசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள நெற்குப்பையைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மனைவி பாண்டிச்செல்வி(வயது24).இவர் தங்களது மாடுகள் பிடித்து வரும் போது தடுமாறி அவர்களது விவசாயக்கினற்றில் விழுந்துள்ளார். இவரைக்காப்பாற்ற கணவர் மாணிக்கம் (29) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த பாண்டி(35),ரவிக்குமார்(35) ஆகியோர் கினற்றில் குதித்துள்ளனர். ஆனால் 4பேரும் கிணற்றில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்துக்கொடிருந்துள்ளனர்.
உடனே பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து பொறுப்பு நிலைய அலுவலர் மெய்யநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று 60அடி ஆழமுள்ள கிணற்றில் 10அடி தண்ணீரில் கயிறு கட்டி இறங்கி 4 பேரையும் மீட்டுள்ளனர்.
இதில் பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மற்ற மூவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நெற்குப்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராப்பூசலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். போட்டி நடைபெறுவதையொட்டி நேற்று மாலை முதல் அதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் செய்யப்பட்டது. வாடிவாசல் சீரமைப்பு மற்றும் போட்டி நடைபெறும் பகுதியை சுற்றி தடுப்பு கட்டைகள் மற்றும் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டது.
இன்று காலை போட்டி தொடங்கியதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
இன்றைய போட்டியின்போது காளை மாடுகள் முட்டித் தள்ளியதில் காயமடைந்த இருவர் ஜல்லிக்கட்டு திடலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மதுரை நகரில் உள்ள ஜெய்ஹிந்த் நகரில் ஜல்லிக்கட்டை ஆதரித்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் பங்கேற்ற சந்திர மோகன்(48) என்பவர் நீர்சத்து குறைபாடு காரணமாக இன்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்திலிருந்து ஊர்வலமாக வந்த அங்கன்வாடி ஊழியர்கள் அண்ணாசிலை அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இந்திராணி தலைமை வகித்தார். கோரிக்கைளை விளக்கி மாவட்டச் செயலாளர் பச்சையம்மாள் பேசினார்.
போராட்டத்தை ஆதரித்து சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் முகமதலிஜின்னா, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன், செயலாளர் ரெங்கசாமி, துணைத் தலைவர் கோவிந்தசாமி, வருவாயத்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் நாகராஜன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சத்தி உள்ளிட்டோர் பேசினர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு முன்பாக 20 சதவிகிதம் ஊதியத்தை இடைக் கால நிவாரணமாக வழங்க வேண்டும். பணிநிறைவின் போது வாங்கும் சம்பளத்தில் 50 சதவிகிதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். பணிக் கொடையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மினி மைய பணியாளர் மற்றும் தகுதியான உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வில் செல்லும் மேற்பார்வையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண் டும். அங்கன்வாடிப் பணியாளர்களை பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. செலவினத் தொகைகளை மாதம்தோறும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர் பயன் பெறும் வகையில் சுயதொழில் மற்றும் சுயமுன்னேற்றம் தொடர்பான கருத்தரங்கு முன்னாள் படைவீரர் நலத்துறை புதுக்கோட்டை சார்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு நாள் கருத்தரங்கு வருகிற 24-ந்தேதி (செவ்வாய் கிழமை) காலை 9.45 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
மேலும், விபரங்களுக்கு மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் ராணுவத்தினர் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள அணுகவும்:
உதவி இயக்குநர், மாவட்ட முன்னாள் படைவீரர் நலன், கல்யாணராமபுரம் 1வது வீதி, திருக்கோகர்ணம் -அஞ்சல், புதுக்கோட்டை-622002 தொ.பே.எண்: 04322-221593 கருத்தரங்க அமைப்பாளர்: இத் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.






