என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    நடுக்கடலில் மீன்பிடித்தபோது புதுக்கோட்டை-காரைக்கால் மீனவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து கடலோர காவல் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி (40), பாலா (28), சின்னப்பா (38), கணேசன் (35), பொன்ராஜ் (23), மணி (35), மற்றொரு கணேசன் (50), பாக்கியம் (38), மாணிக்கம் (35), சாகுல்ஹமீது (25) ஆகிய 4 பேரும் சென்று நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த இரும்பு விசைப்படகில் வந்த மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும், காரைக்கால் மாவட்ட மீனவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது காரைக்கால் மீனவர்கள் தங்களுடைய இரும்பு விசைப்படகால், கோட்டைப் பட்டினம் மீனவர்களுடைய விசைப்படகின் மீது மோதி உள்ளனர். இதில் 3 விசைப் படகுகளும் சேத மடைந்தன.

    இதையடுத்து கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சக மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்து உள்ளனர். இதையடுத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு சென்று, காரைக்கால் மீனவர்களின் விசைப்படகையும், அவர்களையும் சிறைபிடித்து கோட்டைப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

    மேலும் இது குறித்து கடலோர போலீஸ் குழுமத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீன் வளத்துறையினர் மற்றும் கடலோர போலீஸ் குழுமத்தினர் காரைக்கால் விசைப் படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் மணமேல்குடி அழைத்து சென்று விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற அனைத்து மீனவர்களும் மீன் பிடிக்காமல் கரை திரும்பினார்கள். இந்த சம்பவத்தால் மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது.

    அசம்பாவிதம் ஏதும் நடை பெறாமல் இருக்க கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு காமராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இதற்கு தீர்வு காண கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு செய்துள்ளனர். இது குறித்து அறிந்த மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர போலீஸ் குழுமத்தினர் காரைக்கால் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்களுக்கிடையே இன்று சமரச பேச்சுவார்த்தை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

    இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அறந்தாங்கி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன். மீனவர். இவரது மகள் அசுவதி (வயது 5) மீமீசல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசுவதிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உடல் மிகவும் மோசமடைந்த அசுவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை மீனவ கிராமங்களில் மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதற்கு மீன் கழிவுகள், கழிவுநீர் சுத்திகரிப்பு இன்மை போன்ற காரணங்களால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி மர்ம காய்ச்சலை பரவுகின்றன. எனவே அரசு மர்மகாய்ச்சலை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே ரெயிலில் அடிபட்டு 55 வயதுள்ள முதியவர் பலியானார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே மானாமதுரையில் இருந்து திருச்சி சென்ற பயனிகள் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே முதியவர் ஒருவர் பலியானார். 55 வயது மதிக்கத்தக்கவர். இவர் யார் என்ற விசயம் தெரியவில்லை. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பிரிசோதனை நடைபெற்றது.

    இது குறித்து திருச்சி ரெயில்வே சார்பு ஆய்வாளர் தனலெட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு காளை இறந்தது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்அருகே உள்ள மெய்வழிச்சாலையை சேர்ந்தவர் சாலை கனகராஜ். ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் ஜல்லிக்கட்டு காளை களை வளர்த்து வருகிறார். மாவட்டத்தில் எங்கு ஜல்லிக் கட்டு நடந்தாலும் அவரின் காளை பங்குபெறாமல் இருக்காது. அப்படி பங்கு பெற்றாலும் இவர் காளையை யாரும் தொட முடியாது என்ற அளவுக்கு பயிற்சி அளித்தார்.

    இவரது காளைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று டி.வி., பிரிட்ஜ், வாசிங்மிஷின், கட்டில், பீரோ, சைக்கிள், குடம் போன்ற பல பரிசுகளை வென்றுள்ளது.

    இதில் அறிவு என்ற பெயர் சூட்டப்பட்ட சுமார் 20 வயதான ஜல்லிக்கட்டு காளை கடந்த இரண்டு மாத காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதற்காக மாட்டின் உரிமையாளர் நாமக்கல்லில் இருந்து கால் நடை மருத்துவரை வரவழைத்து குளுகோஸ், மருந்து மாத்திரைகள் கொடுத்து அதற்கு மருத்துவம் பார்த்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் காளைக்கு தீனி போட செல்லும் பொழுது காளை மயங்கிய நிலையில் இருந்துள்ளது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் அதே நிலையிலேயே உயிர் இழந்தது.

    அறிவு காளைமாடு இறந்த தகவல் சுற்று வட்டார பகுதிகளில் பரவியது. இதை அறிந்து சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் மாலை, வேஷ்டி துண்டுகளுடன் வந்து காளைக்கு அஞ்சலி செலுத்தி வணங்கி சென்றனர்.

    இறந்த காளை மாட்டிற்கு மனிதர்களுக்கு செய்யப்படுவதுபோல் சடங்குகள் செய்யப்பட்டு ஊர்வலமாக வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு மாட்டின் உரிமையாளர் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    இது குறித்து மாட்டின் உரிமையாளர் கூறுகையில், இந்த மாட்டிற்கு 20 வயது ஆகிறது, இந்த காளைக்கு அறிவு என்ற பெயர் வைத்து அழைத்தோம். இதை எங்கள் வீட்டில் ஒருவர் போல் வளர்த்து வந்தோம், இந்த காளை இதுவரை 1000-க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டில் கலந்துகொண்டுள்ளது.

    இதை இதுவரை யாரும் அடக்கியது இல்லை எனவும், இந்த காளை பல பரிசுகளை பெற்றுள்ளது எனவும் இந்த இழப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கண்ணீருடன் கூறினார்.

    இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தற்போது அனுமதி கிடைத்திருக்கும் நேரத்தில் ஜல்லிக்கட்டு காளை இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    எல்லை தாண்டி வந்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேர் இன்று படகுடன் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 162 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 224 விசைப்படகுகளிலும் மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் பல்வேறு பகுதிகளில் மீன் பிடித்தனர். இதில் ராமையன் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற ராமையன் (வயது 47), செல்லத்துரை (60), சேகர் (35), விவேகானந்தன் (25), சுப்பையா (40) ஆகிய 5 பேரும் நள்ளிரவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது. அவர்களை பார்த்ததும் புதுக்கோட்டை மீனவர்கள் உடனடியாக வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்த புறப்பட தயாரானார்கள்.

    ஆனால் அதற்குள் அவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் இது இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதி. பல முறை எச்சரித்தும் இங்கு வந்து ஏன் மீன்பிடிக்கிறீர்கள்? என்று கூறியுள்ளனர்.

    பின்னர் அவர்களின் விசைப்படகில் தாவிக்குதித்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை பறித்தனர். தொடர்ந்து மீனவர்கள் 5 பேரையும் கைது செய்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இன்று காலை அவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரியவரும்.

    மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மற்ற மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    புதுக்கோட்டை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுபட்டி அருகே உள்ள நந்தன வயலைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 30). ஆட்டோ ஓட்டுனர்.

    இவர் சம்பவத்தன்று மேட்டுபட்டியிலிருந்து புதுக்கோட்டைக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேட்டுப்பட்டியை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்து நிலை தடுமாறி ஆட்டோ மீது மோதியது.

    இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. ஆட்டோ பின்னால் வந்து கொண்டிருந்த மினி லாரி ஆட்டோ மீது மோதாமல் இருக்க திரும்பியதில் லாரி கரையோரத்தில் உள்ள கால்வாயில் இறங்கியது. ஆட்டோவை ஓட்டி வந்த பன்னீர் செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருச்சி, புதுக்கோட்டை, சேலம் மாவட்டங்களில் மட்டும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 14 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது.

    திருச்சி, புதுக்கோட்டை, சேலம் மாவட்டங்களில் மட்டும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.

    திருச்சி திருவெறும்பூர் வரகனேரி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 61). இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நேற்று காலை பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆத்தங்கரை விடுதியை சேர்ந்த சுரேஷ்(32) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஏற்கனவே திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த பிரியதர்சினி (21), புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள சிரயம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜனனி (7) ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

    சேலம் அம்மாபேட்டை காந்தி மைதானம் ஆறுமுக தெருவை சேர்ந்தவர் சபரி நாதன். இவரது ஒன்றரை வயது மகன் சாய்ரக்‌ஷன்.

    இந்த சிறுவன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் பாதிக்கப்பட்டான். அவன் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

    அவனை பரிசோதித்த டாக்டர்கள் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர். ஒரு வாரம் சிகிச்சை அளித்தும் பலனின்றி சாய்ரக்‌ஷன் பரிதாபமாக இறந்தான்.

    திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த தனுஸ்ரீ (4), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா பரம்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் அய்யப்பன் (5), நாகப்பட்டினம் மாவட்டம் கோவில்பத்துவை சேர்ந்த 8 மாத கைக்குழந்தை அபினேஷ், திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 11 மாத கைக்குழந்தை விஷ்வா ஆகியோரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கணபதியை சேர்ந்த சிவசக்தி (வயது 35), காரமடையை சேர்ந்த ஜெயராமன் (67), பழனிசாமி (58) ஆகியோர் பன்றி காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் வங்கி அதிகாரிகள் 2 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை செல்வபுரத்தை சேர்ந்த சாய்ரா பானு (57) என்பவர் திடீரென மூச்சு திணறல், வயிற்று போக்கு , காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    அவரது ரத்தத்தை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவருக்கும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.

    ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் சிகிச்சை சிறப்பு பிரிவில் தனி அறையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வெங்கடாபுரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 40) சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டார். சிகிச்சைக்காக புதுவையில் உள்ள மகாத்மாகாந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகித்தனர். அவரிடம் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புதுவையில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வானதி ராயபுரத்தைச் சேர்ந்த ஒருவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். அவரது ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் உள்ள தொழு நோய் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் உள்ள துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் அலுவலகம் சார்பாக காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு உலக தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதில் காந்தியடிகள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொழுநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். மருத்துவமனையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
    ஜல்லிக்கட்டு வன்முறைக்கு தி.மு.க.வே காரணம் என புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் பங்கேற்றார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை பெற்ற பீட்டா அமைப்பை இந்தியாவுக்குள் நுழைய அனுமதித்தது காங்கிரஸ் மந்திரி சபையில் இருந்த தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசாதான்.

    பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த சிறப்பு சட்டத்தில் ஜனாதிபதி ஒப்புதல் இல்லாததால் ஜல்லிக்கட்டு நடத்த தடை பெறப்பட்டது.

    இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் மாணவர்கள் போராட்டம் தொடங்கியது. போராட்டம் தொடங்கிய 3 நாட்களுக்கு பிறகு மு.க. ஸ்டாலின் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்றார்.

    ஆனால் அரசியல் கட்சிகளின் ஆதரவு வேண்டாம் என்று மாணவர்கள் அவரை திருப்பி அனுப்பினர். அதன் பிறகுதான் தி.மு.க. தூண்டுதலின் பேரில் இந்த போராட்டத்தில் ஒருசிலர் ஊடுருவினர்.

    கருணாநிதி, மு.க.ஸ்டாலினுடன் இருப்பவர்கள் மாணவர்களின் போராட்டத்துக்குள் புகுந்தனர். மாணவர்கள் போராட்டத்தை வைத்து தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கி ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் ரெயில் மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை தி.மு.க. நடத்தியது.

    அறவழியில் நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறைக்கு தி.மு.க.தான் காரணம். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

    மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பி வன்முறையை தூண்டிய மு.க.ஸ்டாலின் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வன்முறைக்கு காரணமானவர்கள் மீதும் வி‌ஷமிகள் மீதும் தவறு செய்த போலீசார் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டம் நிரந்தரமானது. இதை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அறந்தாங்கி அருகே பள்ளியில் மாணவன் மர்மமான முறையில் இறந்தான். இது குறித்து நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆவுடையார்கோவில்:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 12). இவன் பிள்ளைவயலில் உள்ள டாக்டர்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை வழக்கம்போல் மணிகண்டன் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றான்.

    இந்நிலையில் மதியம் மணிகண்டன் பள்ளி வகுப்பறைக்குள் வாயில் ரத்தம் வழிந்தபடி மயங்கி கிடந்தான். இதைக்கண்ட ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் மாணவன் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவன் உடலை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து மணிகண்டனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையறிந்த மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மணிகண்டனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் மாணவன் மணிகண்டனின் சாவில் மர்மம் உள்ளது என்றும், இதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, மாணவனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன், தாசில்தார் பரணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மணிகண்டன் சாவு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

    இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி மாணவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. மேலும் இரவு நேரங்களில் கடும் பனி கொட்டி வந்தது. வெயிலின் தாக்கத்தால் ஆங்காங்கே சாலையோரங்களில் இளநீர், கறும்புச்சாறு ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது.

    மேலும் வாகன ஓட்டுனர்கள் முகத்தை மூடியவாறு சென்று வந்தனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலையும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், நாகுடி, ஆயிங்குடி பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

    ஆதனக்கோட்டை-4, பெருநல்லூர்-6, புதுக்கோட்டை-2, ஆலங்குடி-3, அறந்தாங்கி-5, ஆயிங்குடி-17, நாகுடி-25, மீமிசல்-3, ஆவுடையார்கோவில் 37, கந்தர்வகோட்டை-5, இலுப்பூர்-2, அன்னவாசல்-3, கறம்பக்குடி-17, மழையூர்-8, உடையாளிப்பட்டி-6, கீரனூர்-4, மணமேல்குடி-5, கீழாநிலை-11, திருமயம்-2, அரிமளம்-5 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
    புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தில் மாவட்ட அ.தி.மு.க.மாணவரணி சார்பாக வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தில் மாவட்ட அ.தி.மு.க.மாணவரணி சார்பாக வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் பிகே.வைரமுத்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி,

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், தொழில்அதிபர் எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் பாண்டியன், நகரச் செய லாளர் பாஸ்கர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×