search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி, புதுக்கோட்டை, சேலம் மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் பலி
    X

    திருச்சி, புதுக்கோட்டை, சேலம் மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் பலி

    திருச்சி, புதுக்கோட்டை, சேலம் மாவட்டங்களில் மட்டும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 14 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது.

    திருச்சி, புதுக்கோட்டை, சேலம் மாவட்டங்களில் மட்டும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.

    திருச்சி திருவெறும்பூர் வரகனேரி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 61). இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நேற்று காலை பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆத்தங்கரை விடுதியை சேர்ந்த சுரேஷ்(32) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஏற்கனவே திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த பிரியதர்சினி (21), புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள சிரயம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜனனி (7) ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

    சேலம் அம்மாபேட்டை காந்தி மைதானம் ஆறுமுக தெருவை சேர்ந்தவர் சபரி நாதன். இவரது ஒன்றரை வயது மகன் சாய்ரக்‌ஷன்.

    இந்த சிறுவன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் பாதிக்கப்பட்டான். அவன் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

    அவனை பரிசோதித்த டாக்டர்கள் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர். ஒரு வாரம் சிகிச்சை அளித்தும் பலனின்றி சாய்ரக்‌ஷன் பரிதாபமாக இறந்தான்.

    திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த தனுஸ்ரீ (4), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா பரம்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் அய்யப்பன் (5), நாகப்பட்டினம் மாவட்டம் கோவில்பத்துவை சேர்ந்த 8 மாத கைக்குழந்தை அபினேஷ், திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 11 மாத கைக்குழந்தை விஷ்வா ஆகியோரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கணபதியை சேர்ந்த சிவசக்தி (வயது 35), காரமடையை சேர்ந்த ஜெயராமன் (67), பழனிசாமி (58) ஆகியோர் பன்றி காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் வங்கி அதிகாரிகள் 2 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை செல்வபுரத்தை சேர்ந்த சாய்ரா பானு (57) என்பவர் திடீரென மூச்சு திணறல், வயிற்று போக்கு , காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    அவரது ரத்தத்தை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவருக்கும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.

    ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் சிகிச்சை சிறப்பு பிரிவில் தனி அறையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வெங்கடாபுரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 40) சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டார். சிகிச்சைக்காக புதுவையில் உள்ள மகாத்மாகாந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகித்தனர். அவரிடம் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புதுவையில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வானதி ராயபுரத்தைச் சேர்ந்த ஒருவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். அவரது ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    Next Story
    ×