என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    விராலிமலை ஊராட்சியில் ரூ. 8.9 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:-

    தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல் படுத்தி வருகிறது. அதனடிப் படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், கத்தலூர் ஊராட்சி, மு.மேலப் பட்டியில் பொது நிதியின் கீழ் ரூ.85000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கைப்பம்பு பணியையும், தனிநபர் இல்லக்கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.12000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 கழிவறைகள் கட்டுமானப்பணியையும், வாணத்திராயன்பட்டி ஊராட்சி, அத்திப்பள்ளம் மற்றும் ஜெயமங்கலத்தில் தலா ரூ.3.50 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்பட்ட 2 நீர்த்தேக்கத்தொட்டிகள் பணியையும் என மொத்தம் ரூ.8.09 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் அவ்வை யார்பட்டி, பேராம்பூர் ஆகிய பகுதிகளில் வேலிக்கருவை அகற்றும் பணிகள் பார்வையிட்டும், இராஜகிரி ஊராட்சி, முல்லையூர் அணைக்கட்டும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வின் போது ஊராட்சிகள் மற்றும் முல்லையூர் அணைக் கட்டில் உள்ள வேலிக்கருவை மரங்களை முற்றிலுமாக அகற் றவும், நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து பொதுமக்களுக்கு கூடுதல் குடிநீர் இணைப்புகள் வழங்கவும், தனிநபர் இல்லக்கழிவறைகளை தினமும் நீர் ஊற்றி உரிய முறையில் பயன்படுத்தவும், மேலும் நடைபெறும் பணி களை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு விரைவாக கட்டி முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.

    இந்த ஆய்வின் போது இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் வடிவேல் பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், செல்வராஜ், உதவிப் பொறியாளர் சித்திரவேல் உள்ளிட்ட அரசு அலு வலர்கள் பலர் உடனிருந்தனர்.

    அரிமளத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அரிமளம்:

    அரிமளம் ஒன்றியம் ஒனாங்குடி ஊராட்சி சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தமுத்து. இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா ( வயது 27). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றார்.ஆனால் வயிற்று வலி தீரவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மஞ்சுளா வீட்டில்தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சுளா பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக மஞ்சுளா தம்பி சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 24-ந்தேதி தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு, எரிவாயு சிலிண்டர் நிரப்ப பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப்பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த இக்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இக்குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் வருகிற 24-ந் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே, எரிவாயு இணைப்பு குறித்து தங்களது குறைகளை தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் நேரில் தெரிவிக்கலாம்.

    மேற்காணும் தகவலை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை திருமயம் அருகே அமைந்துள்ள மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சிவப்பு நாடா கழகம் சார்பில் தன்னார்வ ரத்ததான பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருமயம் அருகே அமைந்துள்ள மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சிவப்பு நாடா கழகம் சார்பில் தன்னார்வ ரத்ததான பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன் செல்லையா தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் துவக்க உரை நிகழ்த்தினார்.

    கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் ஜான் வரவேற்புரையாற்றினார். கல்லூரி இயக்குனர் பேராசிரியர் ஜெய்சன் மற்றும் கல்லூரி முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு விருந்தினர் திருமயம் அரசு ஆஸ்பத்திரி ஐ.சி.டி.சி. கவுன்சிலர் கவிதா தம் சிறப்புரையில் ரத்தானம் செய்வதன் மூலம் நாம் அடையும் நன்மைகளைப் பற்றி விளக்கினார். ரத்த தான பதிவு நிகழ்ச்சியில் 250 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.

    நிகழ்ச்சியின் நிறைவில் சிவப்பு நாடா கழக ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    பொன்னமராவதியில் இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதியில் இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கட்டுமானப்பொறியாளர்கள் சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமிற்கு கட்டுமானப்பொறியாளர்கள் சங்கத்தலைவர் வி.என்ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார்.

    அரிமா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.திருநாவுக்கரசு, மீனாட்சி மருத்துவமனை பி.ஆர்.ஓ. எஸ்.மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சங்க செயலர் சிவ அன்பு இளங்கோ வரவேற்றார். பொறியாளர் எம்.மனோகரன் முகாமினை தொடங்கி வைத்தார்.

    முகாமில் மீனாட்சி மி‌ஷன் மருத்துவக்குழுவினரால் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், இருதய நோய் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் எம்.ராமநாதன், பிஎல்ஆர்.நாகராஜன், சி.ஜெயராஜ், பிஎல்.பவளவண்ணன், டி.செந்தில், அரிமா சங்கத்தலைவர் ஆர்எம்.வெள்ளைச்சாமி, செயலர் என்.ஏ.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கறம்பக்குடி அருகே குடற்புழு மாத்திரை சாப்பிட்ட 24 மாணவ–மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி அருகே உள்ள ராங்கியம் விடுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 31 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் நேற்று 24 மாணவ–மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு பள்ளியில் மதிய உணவில் கீரை, முட்டை வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. அதனை மாணவ–மாணவிகள் சாப்பிட்டனர்.

    இதனைத்தொடர்ந்து பள்ளி முடிந்து 24 மாணவ–மாணவிகளும் வீடு திரும்பினர். இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிய மாணவ–மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக கறம்பக்குடி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ஆம்புலன்சுகள் சென்று, பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகளை ஏற்றி கொண்டு கறம்பக்குடி மற்றும் பட்டுகோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

    தற்போது கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் ராங்கியம் விடுதி கிராமத்தை சேர்ந்த சூரியமூர்த்தி மகள் செல்வபாரதி (வயது 6), தமிழ்செல்வன் மகன் பவன் (8), ராஜப்பாவின் மகள்கள் அபியா (6), ஆர்த்தி (7), ஆறுமுகம் மகள்கள் ஆசைபிரியா (9), அபிநயா (6) உள்பட 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ராங்கியம் விடுதி கிராமத்தை சேர்ந்த ஆசா (11), முருகுபாண்டியன் மகள் பாரதி (10), திவாகரன் மகள் அபர்னா (10), பாலசுப்பிரமணியன் மகன் விஜய் (9), நம்பிராஜன் மகள் பிரியதர்ஷினி (8) உள்பட 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 24 மாணவ–மாணவிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    பரபரப்பு

    இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஒவ்வாமை ஏற்பட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து மாணவ–மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்ட குடற்புழு மாத்திரையை சாப்பிட்ட மாணவ–மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அறிந்து பெற்றோர்களும், பொதுமக்களும் கறம்பக்குடி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    கந்தர்வக்கோட்டையில் இந்திய கம்யூளிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்களை விளக்கி பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    கந்தர்வக் கோட்டை:

    கந்தர்வக்கோட்டையில் இந்திய கம்யூளிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்களை விளக்கி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உ.அரசப்பன் தலைமை தாங்கினார்.

    வறட்சி நிவாரணம் மற்றும் இறந்து போன விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும். ஏரி குளங்களை தூர்வாரவும். 100 நாள் வேலை திட்டத்தில் காலதாமதம் செய்யாமல் கூலி வழங்கவும. வலியுறுத்தி நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் ஒன்றியப் பொறுப்பாளர்கள் தங்கையன்,அம்பி காபதி,பெருமாள், நாகராஜன்.மாவட்டக்குழ அம்பலராசு,ராஜேந்திரன், மற்றும் கலியபெருமாள், புஷ்பம்,விமலா,காட்டுராஜா,கண்ணையன், ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் 11-ந் தேதி நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ஆம் வாரத்தில் சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1மணி வரை அந்தக் கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைகள், நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் பொருட்டு தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    பிப்ரவரி -2017-ஆம் மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் 2-வது சனிக்கிழமை(11.02.2017) அன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொடர்புடைய கூட்டுறவுச் சங்க தனி அலுவலர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரால், துணை ஆட்சியர் நிலையில் நியமிக்கப்படும் அலுவலர் ஒருவர் பார்வையாளராக இருப்பார்.

    புதுக்கோட்டை வட்டம் மாத்தூர் கிராமம், ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலம் திருமயம் வட்டம் கோட்டையூர் கிராமம், குளத்தூர் வட்டம் பேராம்பூர் கிராமம், இலுப்பூர் வட்டம் புதூர் கிராமம், கந்தர்வகோட்டை வட்டம் பகட்டுவான்பட்டி கிராமம், அறந்தாங்கி வட்டம் மேற்பனைக்காடு கிராமம், ஆவுடையார்கோவில் வட்டம் கரூர் கிராமம், மணமேல்குடி வட்டம் ஆவுடையார்பட்டினம் கிராமம், பொன்னமராவதி வட்டம் மரவாமதுரை கிராமம், கறம்பக்குடி வட்டம் காட்டாத்தி கிராமம், விராலிமலை வட்டம் பொய்யாமணி கிராமம்.

    மேற்படி கூட்டத்தில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி பயன் பெறலாம்.

    மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
    அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனையில் தி.மு.க.வை குறைகூறுவதில் எந்தவித முகாந்திரமும் இல்லை என புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று புதுக்கோட்டை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளது காலதாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்கத்தக்கது.

    உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இதற்கு தாமதம் ஆகுமானால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தமிழகத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலை நிலவி வரும் போது ஆளுநர் தமிழகம் வராமல் இருப்பது மத்திய பாரதிய ஜனதா அரசின் நிர்ப்பந்தம் தான் காரணம். இதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற பல்வேறு சித்துவிளையாட்டுக்களை விளையாடி வருகிறது.

    தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி சசிகலாவை முதல்- அமைச்சராக தேர்ந்தெடுத்து உள்ளனர். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். ஆனால் ஆளுநரின் காலம் தாழ்ந்த நடவடிக்கையால் தமிழகத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன்பிறகாவது ஆளுநர் சசிகலாவை முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அல்லது தமிழக சட்டமன்றத்தை கூட்டி யாருக்கு அருதி பெரும்பான்மை இருக்கிறது என்பதை அறிந்து அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

    அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சனையில் தி.மு.க. உள்ளது என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதில் எந்தவித முகாந்திரமும் இல்லை. ஏற்க கூடியதும் கிடையாது. ஒரு போதும் இதுபோன்ற செயல்களில் தி.மு.க. ஈடுபடாது.

    அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். அந்த பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி தலையிட விரும்பவில்லை. அதற்கு அந்த கட்சிதான் பதில் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கட்சிக்கும், ஆட்சிக்கும் இடையே நடந்து வரும் வேறுபாடுகளை பார்த்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என புதுக்கோட்டையில் ஜி.கே.வாசன் பேசினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று த.மா.கா. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூறி வந்த நிலையில் தற்போது காலதாமதமாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நீதி விசாரணை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. விசாரணை முடிவில் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம் வெளிச்சத்திற்கு வரும்.

    சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டததற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியது அவரது தனிப்பட்ட வி‌ஷயம். ஜெயலலிதாவை நம்பித்தான் தமிழக மக்கள் வாக்களித்தனர்.

    தற்போது கட்சிக்கும், ஆட்சிக்கும் இடையே நடந்து வரும் வேறுபாடுகளை பார்த்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகத்தில் உறுதித்தன்மை இல்லாததால் நிர்வாகம் தேங்கி நிற்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை நிரந்தர முதல்வரோ, நிரந்தர கவர்னரோ இல்லாத அவல நிலை தொடர்கிறது. இதற்கு காரணம் பா.ஜ.க. தான்.

    அ.தி.மு.க.வின் தற்போதைய குழப்பங்கள் குறித்து த.மா.கா. எந்தவித கருத்தும் கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் கூகூர் சண்முகம், மாநில செயலாளர்கள் லேணா சரவணன், தமிழரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவின்படி புதுக் கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அகற்றப்பட்டன.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகளின் பின்புறம் காந்தி பூங்கா உள்ளது. காந்தி பூங்காவை விரிவாக்கம் செய்வதற்காக அந்த கடைகளை இடித்து அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து கடைகளை இடித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டது.

    இதற்கு அந்த பகுதியில் கடை வைத்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, காந்தி பூங்காவை விரிவாக்கம் செய்ய அங்குள்ள கடைகளை நகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றலாம் எனவும், அங்குள்ளவர்களுக்கு வேறு இடத்தில் கடைகளை ஒதுக்கி தரலாம் என்றும் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின்படி நேற்று புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளை பொக்ளின் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியை நகராட்சி ஆணையர்(பொறுப்பு) சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையொட்டி புதுக்கோட்டை டவுன் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    விராலிமலை அருகே திருநல்லூரில் வருகிற 11-ந்தேதி பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரம் நடைபெற்று வருகின்றன.
    விராலிமலை:

    தமிழகத்தில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா திருநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஜல்லிக்கட்டுக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொள்ளும்.

    ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும் திரளான பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் மிகப்பெரிய திரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்ததையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ராப்பூசல் கிராமத்தில் முதன் முதலாக கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

    இதையடுத்து புகழ்பெற்ற திருநல்லூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குறிப்பிட்ட தேதியான தை மாதம் 29-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகமும், கிராம முக்கியஸ்தர்களும் ஆலோசித்து செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகளை தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக ஜல்லிக்கட்டு திடலை தயார் படுத்தும் பணியும், பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    திருநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் ஜல்லிக்கட்டு திடலை ஆர்.டி.ஓ. வடிவேல் பிரபு, டி.எஸ்.பி. தமிழ்செல்வன், இலுப்பூர் தாசில்தார் தமிழ்மணி உள்ளிட்ட அதிகாரிகள் 3-ந்தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் பதிவு செய்யும் பணி நேற்று (5- ந்தேதி) தொடங்கப்பட்டது. முதல் நாளன்றே 200 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் காளைகள் வரை கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல மாடுபிடி வீரர்கள் பதிவும் தொடங்கியுள்ளது குறிப்பிடப்படுகிறது.

    சில ஆண்டுகளாக நீதிமன்ற தடையால் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு அரசு அனுமதியுடன் நடைபெற இருப்பதால் திருநல்லூர் கிராமமும், இலுப்பூர் சுற்று வட்டார கிராமங்களும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
    ×