என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வை குறைகூறுவதில் எந்தவித முகாந்திரமும் இல்லை: திருநாவுக்கரசர்
    X

    தி.மு.க.வை குறைகூறுவதில் எந்தவித முகாந்திரமும் இல்லை: திருநாவுக்கரசர்

    அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனையில் தி.மு.க.வை குறைகூறுவதில் எந்தவித முகாந்திரமும் இல்லை என புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று புதுக்கோட்டை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளது காலதாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்கத்தக்கது.

    உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இதற்கு தாமதம் ஆகுமானால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தமிழகத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலை நிலவி வரும் போது ஆளுநர் தமிழகம் வராமல் இருப்பது மத்திய பாரதிய ஜனதா அரசின் நிர்ப்பந்தம் தான் காரணம். இதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற பல்வேறு சித்துவிளையாட்டுக்களை விளையாடி வருகிறது.

    தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி சசிகலாவை முதல்- அமைச்சராக தேர்ந்தெடுத்து உள்ளனர். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். ஆனால் ஆளுநரின் காலம் தாழ்ந்த நடவடிக்கையால் தமிழகத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன்பிறகாவது ஆளுநர் சசிகலாவை முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அல்லது தமிழக சட்டமன்றத்தை கூட்டி யாருக்கு அருதி பெரும்பான்மை இருக்கிறது என்பதை அறிந்து அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

    அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சனையில் தி.மு.க. உள்ளது என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதில் எந்தவித முகாந்திரமும் இல்லை. ஏற்க கூடியதும் கிடையாது. ஒரு போதும் இதுபோன்ற செயல்களில் தி.மு.க. ஈடுபடாது.

    அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். அந்த பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி தலையிட விரும்பவில்லை. அதற்கு அந்த கட்சிதான் பதில் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×