என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில் சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட விளை நிலத்தில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இப்பகுதியில் விவசாயத் திற்கு போக மீதி உள்ள  உபரி நீர் வீரமாகாளியம்மன் கோவில் தெப்பக்குளம் வழியாக அருகன் குளத்தில் சென்று கலக்கிறது. இந்நிலையில் இந்தாண்டு போதிய மழை பெய்து நல்ல விளைச்சலைக் கண்ட போதும், கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  

    மேலும் வடிகால் வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் தேங்கிய தண்ணீர் வெளியேற வழியில்லாமல் குளம் போல் காட்சியளிக்கிறது. 

    எனவே விளை நிலத்தில் தேங்கிய தண் ணீரை வெளியேற்றிட, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் அல்லது மாற்று வழியில் தண்ணீரை வெளியேற்றிட வேண்டும் எனக்கூறி, அப்பகுதி பொதுமக்கள் 200க்கும் மேற் பட்டோர், அறந்தாங்கி& புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இச்சம்பவத்தை அறிந்த வட்டாட்சியர் காமராஜ்  உள்ளிட்ட துறை அதிகாரிகள் விரைந்து வந்து. மறியலில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே, சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படவுள்ளதாக கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் மகளிருக்கு மருத்துவ வசதி அளித்தல், சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உதவி செய்தல் மற்றும் மன ரீதியான ஆலோசனைகள் வழங்குவதற்காக மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    அதற்கான முதல் மையம் அக்டோபர் 2019 முதல் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு கீழ்க்காணும் விபரப்படியான பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை தட்டச்சு செய்து, 12.01.2022 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை என்னும் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

    குறிப்பிட்ட காலக்கெடுவிற்குபின் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04322 222270 எனும் தொலைபேசி மூலமாகவோ அணுகி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வழக்குப் பணியாளர் பணியிடம் 4,   சட்டப்படிப்பு, முதுநிலை சமூகப் பணி பெண் வன்கொடுமை தொடர்பாக 3 ஆண்டு பணிபுரிந்த முன் அனுபவம், மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.15,000 ஆகும்.

    பல்நோக்கு உதவியாளர் பணியிடம் 1,  மூன்றாண்டு முன் அனுபவமுள்ள நபர், மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.6,400 ஆகும்.

    பாதுகாவலர் பணியிடம் 1,  இரண்டாண்டு முன் அனுபவமுள்ள நபர்,  மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.10,000 ஆகும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    கறம்பக்குடி அருகே பொங்கல் பண்டிகையையொட்டி மண் பானைகள் மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    புதுக்கோட்டை:
    பொங்கல் திருநாள் தமிழ் கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவும் உழைப்பின் மேன் மையை உணர்த்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. நவீன மயமாகிப்போன இந்த காலத்திலும் மண் பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நடைமுறையில் உள்ளது.

    இதனால் பொங்கல் வந் தால் மண் பானை, மண் அடுப்புகளுக்கு தனி மவுசு ஏற்படுவது வழக்கம். புதுக் கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர், நரங்கிபட்டு, மைலக்கோன்பட்டி பகுதிகளில் மண்பாண்டங்கள் செய்யப்படுகின்றன.இப்பகுதியில் செய்யப்படும் மண்பாண்டங்களுக்கு வெளி மாநிலங்கள் வெளி மாவட்டத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது.

    தொடர் மழையினால் தொழில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை விட்டு உள்ளதால் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மண் பானைகள், மண் அடுப்புகள், சட்டிகள், ஜாடிகள் என பலவிதமான பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.
    பொங்கலுக்கு சில நாட்களே இருப்பதால் கறம்பக்குடி சந்தைகளில் மண் பானை  விற்பனை களை கட்டியுள்ளது. வெளியூர் வியாபாரிகளும் கறம்பக்குடி பகுதிகளுக்கு  வந்து நேரடியாக மண்பாண்டங்களை விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர்.

    இதுகுறித்து மழையூரை சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளி ஞான பண்டிதர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு, மழை வெள்ளம் என கடந்த இரண்டு வருடங்களாக மண்பாண்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இருப்பினும் பாரம்பரிய தொழிலை விட மனமின்றி கஷ்டமான நிலையிலும் மண்பாண்டங்களை தயாரித்து வருகிறோம். உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடையாது. 

    தொழில் கூடம் இல்லாததால் மழை காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.நலிவடைந்து வரும் எங்களது தொழிலை அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினால் எங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த ஆண்டு அதிக அளவில் மண்பாண்டங்கள் விற்பனையாவது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.
    புதுக்கோட்டையில் இரவு நேர ஊரடங்களை சரியாக கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
    புதுக்கோட்டை: 
    தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    புதுக்கோட்டை நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் போலீசார் புதிய பேருந்து நிலையம், பழைய பேரூந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் ஒலிபெருக்கி மூலம் இரவு நேர ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்தனர். 

    முதல் நாள் என்பதால் சிலரை போலிசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இனிவரும் நாட்களில் ஊரடங்கை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    எனவே பொதுமக்கள் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், அதன் மூலம் கொரோனா பெருந்தொற்றை தடுக்க உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 5 பவுன் நகை மற்றும் ரூ.9 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    புதுக்கோட்டை:
    புதுக்கோட்டை நகர் மச்சுவாடி டிரைவர் காலணி நான்காம் வீதியை சேர்ந்தவர் சோலையப்பன் மனைவி ராஜலட்சுமி (வயது 58). 

    இவர் கடந்த 31&ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று அவர் சென்னையில் இருந்து மீண்டும் புதுக்கோட்டை திரும்பினார்.

    வீட்டிற்கு சென்றபோது, அவரது வீட்டின் முன்பக்க கிரில் கேட்டின் பூட்டு மற்றும் உள்ளே இருந்த மரக்கதவும் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பீதியுடன் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் தனி அறையில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் 9 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்தார்.
    வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்திருந்த யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

    இதுகுறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கனேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை:
    புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுலவராக பணிபுரிந்தவர் சுப்பிரமணி (வயது 56). இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொண்ட மாணிக்கம்பட்டி ஆகும். 

    மாற்றுத்திறனாளியான இவர் மூன்று சக்கர சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்து செல்வது வழக்கம். இவர் பணி ஓய்வு அடைந்தும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் தங்கியிருந்தார். 

    இந்தநிலையில் நேற்று அலுவலக காவலாளி முருகன் 7 மணிக்கு வந்து பார்த்தபோது சுப்பிரமணி அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சங்கரன் மற்றும் குமாரவேலனுக்கு தகவல் தரப்பட்டது.

    புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்&இன்ஸ்பெக்டர் ராஜகோபலன் வந்து பார்த்தபோது சுப்பிரமணி ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. உடனடியாக அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி போலீசார் அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக சுப்பிரமணி மனைவி சரோஜினி (52) கொடுத்த புகாரின்பேரில் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி அருகே கொள்ளை போன வீட்டின் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 559 பவுன் நகைகளை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
    புதுக்கோட்டை:
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபாலப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜாபர்சாதிக், இவர் புருனை நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். 

    இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி இவரது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் 750 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து மீமிசல் காவல் துறையினருக்கும், வீட்டின் உரிமையாளர் ஜாபர்சாதிக்கிற்கும் தகவல் கொடுத்தனர். 

    தகவலின் அடிப்படையில் மீமிசல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தீரன் என்ற மோப்ப நாய் உதவியுடன்  காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

    அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் நேரில் ஆய்வு மேற்கொண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் முடுக்கி விட்டார்.

    தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள், அப்பகுதியைச் சேர்ந்த தனித்தனி நபர்கள் மற்றும் பழைய குற்றவாளிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்நிலையில் கடந்த திசம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று காலை உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில்  கொள்ளை போன வீட்டின் பின்பக்கத்தில் உள்ள கிணற்றில் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். 

    அப்போது கிணற்றின் மேற்புறத்தில் மூடப்பட்டிருந்த கம்பிக் கதவு லேசாக திறந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார் கிணற்றிலிருந்த தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். அப்போது காணாமல் போன நகை மூட்டையாக கட்டி உள்ளே கிடந்தது தெரிய வந்தது.

    அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துணைக்கண்காணிப்பாளர் தினேஷ்குமார், நகை மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் நகையை எடை போட்டதில் 559 சவரன் நகை இருப்பது தெரிய வந்துள்ளது. 

    நகையை கைப்பற்றிய காவல் துறையினர் கானாமல் போன நகை எவ்வாறு கிணற்றுக்குள் வந்தது, மீதி 191 சவரன் நகை எங்குள்ளது என்ற பல்வேறு கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    மேலும் கைப்பற்றப்பட்ட 559 சவரன் நகைகளை காவல்த்துறையினர் அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அங்கு நீதிபதி சசின் முன்னிலையில் நகைகள் சரிபார்க்கப்பட்டு பின்பு புதுக்கோட்டை அரசு கருவூலத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து காவல் துறையினர் குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கணினி முறையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கியது.
    புதுக்கோட்டை:
    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்த லில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி வழி உள்ளாட்சி   அமைப்புகள் வாரியாக ஒதுக்கீடு செய்யும் முதல் கட்டப்பணி மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:& 
    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர்வரும் சாதாரணத்  தேர்தல் பயன்பாட்டிற்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யும் முதல் கட்டப்பணி நடத்தப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 121 வாக்குச்சாவடிகளுக்கு 146 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், இரண்டு நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 159 வாக்குச்சாவடிகளுக்கு 191 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் என மொத்தம் 337 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதுபோக 324 கட்டுப்பாட்டு கருவிகளும், 869 வாக்குப்பதிவு கருவிகளும் உபரியாக இருப்பில் உள்ளன. 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 9.12.2021 அன்று வெளியிடப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலின்படி 1,15,277 ஆண் வாக்காளர்களும், 1,22,576 பெண் வாக்காளர்களும், 20 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,37,873 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
    ஆலங்குடி கருக்காக்குறிச்சி வடக்கு தெரு பகுதியில் மழை நீரில் மிதந்து வந்த ஆண் சிசு உடல் மீட்கப்பட்டது.
    புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கருக்காக்குறிச்சி வடக்கு தெரு ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள கூமத்தி வாரியில், தொப்புள் கொடியுடன் ஆண் சிசு, பிறந்த சில மணி நேரத்தில் வீசப்பட்ட நிலையில், மழை நீரில் மிதந்து வந்து சடலமாக தேங்கி நின்றது.
    இதனை அப்பகுதியை சேர்ந்த ரவி என்பவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வடகாடு காவல் நிலையத்திற்கு இதுபற்றி தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    பின்னர் இச்சம்பவம் குறித்து, கிராம நிர்வாக அலுவலர் அம்பிகாவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை தண்ணீரில் வீசி சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது.
    புதுக்கோட்டை:

    தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க ஏதுவாக எதிர்வரும் 08.01.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அமைந்துள்ள தனி வட்டாட்சியர்கள் (குடிமைப்பொருள் வழங்கல்) மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இது தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களில் திருநங்கைகள் புகைப்படம், ஆதார் அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும் ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரம் தொடர்பான சான்று வழங்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

    விண்ணப்ப ஆவணங்கள்  சிறப்பு முகாமிலேயே இணையதள முகவரியில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பதிவேற்றம் செய்யப்படும். 

    எனவே இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள புதிய மின்னணு குடும்ப அட்டை கோரும் திருநங்கைகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
    புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பதினொன்றாம் வகுப்பு  முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ, மாணவிகளிடமிருந்து                         2021&22 ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 15.01.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  
    தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை கோரி மாணவ,    மாணவிகளிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்க வேண்டும் எனவும் தகுதியுள்ள   சிறுபான்மையின மாணவ, மாணவியரின் விண்ணப்பத் தினை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும், தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. 
    பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் கல்வி நிலையங்கள் மூலம் சரிபார்ப்பு செய்து அனுப்ப கடைசி தேதி 15.01.2022 மற்றும் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் கல்வி நிலையங்கள் மூலம் சரிபார்ப்பு செய்து அனுப்ப கடைசி தேதி 31.01.2022 என கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  
    எனவே தொடர்புடைய கல்வி நிலையங்கள் உரிய காலத்திற்குள் சரிபார்ப்பு                      செய்து மாவட்ட கல்வி உதவித்தொகை அலுவலருக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியரக கூடுதல் கட்டிடத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13,63,126 பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
    புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022 இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கவிதா ராமு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
    அதனை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி  பெற்றுக்கொண்டார். பின்னர் கலெக்டர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2022&க்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,70,877 ஆண் வாக்காளர்கள்,  6,92,178 பெண் வாக்காளர்கள் மற்றும் 71 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 13,63,126 வாக்காளர்கள் 2022 ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
    2022 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் (01.11.2021&ன்படி) மொத்தம் 13,51,878 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 01.11.2021 முதல் 30.11.2021 வரை நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது 8,906 ஆண் வாக்காளர்கள், 11,333 பெண் வாக்காளர்கள் மற்றும் 7 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 20,246 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
    01.11.2021 முதல் 30.11.2021 வரை நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது 4,476 ஆண் வாக்காளர்கள், 4,519 பெண் வாக்காளர்கள் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 8,998 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
    சிறப்பு முறை சுருக்க திருத்தம் 2022&ன்போது 24,057 இளம் வாக்காளர்கள் (18&19 வயதுடையவர்கள்) வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,559 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்கைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 856 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 941 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
    ×