என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நகைகளை கோர்ட்டில் ஒப்படைக்க போலீசார் எடுத்து சென்ற காட்சி.
கிணற்றில் மீட்கப்பட்ட நகைகள் கோர்ட்டில் ஒப்படைப்பு
அறந்தாங்கி அருகே கொள்ளை போன வீட்டின் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 559 பவுன் நகைகளை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபாலப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜாபர்சாதிக், இவர் புருனை நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி இவரது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் 750 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து மீமிசல் காவல் துறையினருக்கும், வீட்டின் உரிமையாளர் ஜாபர்சாதிக்கிற்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் மீமிசல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தீரன் என்ற மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் நேரில் ஆய்வு மேற்கொண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் முடுக்கி விட்டார்.
தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள், அப்பகுதியைச் சேர்ந்த தனித்தனி நபர்கள் மற்றும் பழைய குற்றவாளிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த திசம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று காலை உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொள்ளை போன வீட்டின் பின்பக்கத்தில் உள்ள கிணற்றில் காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது கிணற்றின் மேற்புறத்தில் மூடப்பட்டிருந்த கம்பிக் கதவு லேசாக திறந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார் கிணற்றிலிருந்த தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். அப்போது காணாமல் போன நகை மூட்டையாக கட்டி உள்ளே கிடந்தது தெரிய வந்தது.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துணைக்கண்காணிப்பாளர் தினேஷ்குமார், நகை மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் நகையை எடை போட்டதில் 559 சவரன் நகை இருப்பது தெரிய வந்துள்ளது.
நகையை கைப்பற்றிய காவல் துறையினர் கானாமல் போன நகை எவ்வாறு கிணற்றுக்குள் வந்தது, மீதி 191 சவரன் நகை எங்குள்ளது என்ற பல்வேறு கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட 559 சவரன் நகைகளை காவல்த்துறையினர் அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அங்கு நீதிபதி சசின் முன்னிலையில் நகைகள் சரிபார்க்கப்பட்டு பின்பு புதுக்கோட்டை அரசு கருவூலத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து காவல் துறையினர் குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






