என் மலர்
பெரம்பலூர்
- விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் அமைச்சர்
- அமைச்சரின் செயலைக்கண்டு பொதுமக்கள் பாராட்டினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கு பெற்றார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகளுடன் அரியலூர் திரும்பிக் கொண்டிருந்தார்.
அவர் வரும் வழியில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் வரிசைப்பட்டி அருகே அரியலூர் வட்டம் வெள்ளூர் காலனியைச் சேர்ந்த வெள்ளமுத்து, (வயது-53),அவரது மனைவி பொன்னழகி (48) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து போது நிலைதடுமாறி கீழே விழுந்து படு காயமடைந்தனர்.
இதைக் கண்டதும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரும், அவருடன் வந்தவர்களும் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு படுகாயமடைந்த தம்பதியினருக்கு முதலுதவி செய்து 108ஆம்புலன்சுக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர்களை ஏற்றி அரியலூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்து நடந்த இடத்தில் வேடிக்கை பார்ப்பதற்காகக் கூடி நின்ற பொதுமக்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் எடுத்துக் கூறினார். போக்குவரத்து விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தால் இது போன்ற விபத்துக்களில் இருத்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் எடுத்துரைத்தார். அமைச்சரின் இந்த மனிதாபிமான செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன் அமைச்சரை பாராட்டிச் சென்றனர்.
- நிலப்பிரச்சினையை தீர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
- 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின் படி ஆலத்தூர் வட்ட வருவாய் துறை மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாமை ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடத்தினர்.
முகாமில் ஆலத்தூர் தாசில்தார் முத்துகுமார், மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முகமது அபுபக்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணாவதி மற்றும் போலீசார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து நிலம் தொடர்பான பிரச்சினைகள் அடங்கிய 11 மனுக்களை வாங்கினர். அதில் 10 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
- பஸ் நிலையம் பகுதியில் தரமான தார் சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் பகுதியை சுற்றிலும் உள்ள தார் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தார் சாலைகளுக்கு பதிலாக, புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வீட்டில் தனியாக இருந்த வங்கி ஊழியர் மனைவியிடம் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- கிருஷ்ணசாமி மர்மநபரை பிடிக்க முயன்றார். ஆனால் மர்மநபர் மொபட்டை விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தம்பை கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மனைவி சங்கீதா (வயது 36). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சாமிதுரை குன்னம் தாலுகா அகரம்சீகூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.
சாமிதுரை நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டார். சாமிதுரையின் மகன், மகள் சொந்த ஊரான தம்பைக்கு திருவிழாவிற்காக சென்று விட்டனர். இதனால் வீட்டில் சங்கீதா மட்டும் தனியாக இருந்து வந்தார்.
நேற்று இரவு 7.15 மணியளவில் சங்கீதா வீட்டில் துணிகளை அயன் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தடைபட்டது. இந்த நிலையில் வீட்டில் மர்மநபர் ஒருவர் நுழைந்தார். அவர் இருட்டில் மறைந்திருந்து சங்கீதாவின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றார்.
இதனை சுதாரித்துக்கொண்ட சங்கீதா திருடன், திருடன் என்று சத்தம் போட்டவாறு, வீட்டின் வெளியே ஓடி வந்தார். ஆனால் மர்மநபர் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். இதில் மர்மநபர் கையில் 7 பவுன் சங்கிலி சிக்கியது. சங்கீதா கையில் மீதி 2 பவுன் சங்கிலி இருந்தது.
சங்கீதாவின் அலறல் சத்தத்தை கேட்டு மாடியில் இருந்த வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணசாமி ஓடி வந்தார். அப்போது மர்மநபர் வந்திருந்த மொபட்டை எடுத்து கொண்டு தப்ப முயன்றார். இதனை கண்ட கிருஷ்ணசாமி மர்மநபரை பிடிக்க முயன்றார். ஆனால் மர்மநபர் மொபட்டை விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சுய வேலை வாய்ப்பு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
- சுய தொழில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்களுக்கான துரித உணவுகள் தயாரித்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருக்கின்றது .
மேலும் இப்பயிற்சியில் பானி பூரி, பேல் பூரி, பாவ் பாஜி, சமோசா, கச்சோரி, கோபி மஞ்சூரியன், ஆனியன் பக்கோடா, சிக்கன் & வெஜிடபிள் பிரைட் ரைஸ், வெஜிடபிள் புலாவ், நூடுல்ஸ் வகைகள், வெஜ் மோமோஸ் ஆகிய உணவு பொருள்கள் எப்படி செய்வது என்பது பற்றி விரிவாக கற்றுத்தரப்பட இருக்கின்றது.
பயிற்சியின் காலஅளவு 10 நாட்கள் பயிற்சி நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் மேலும் விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்பஅட்டை, ஆதார் கார்டு,
பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை வங்கி புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 16-ந் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்கண்ட அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்யவும்.
மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328-277896, 91 9488840328 என்ற எண்ணிலோ தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
- வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு
- 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்
பெரம்பலூர்:
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கடந்த 8.11.2011 அன்று வேலையிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வேலை உறுதித்திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கியுள்ளது.
இப்பணிக்கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்ட நிதியில் இருந்து ரூ.5 ஆயிரமும், கூடுதலாக கிராம ஊராட்சிப் பணிகளுக்காக ரூ.2 ஆயிரத்து 500-ம் என ஆக மொத்தம் ரூ.7 ஆயிரத்து 500 மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த தொகுப்பூதியம் வழங்கப்படும்.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் 8.11.2011 அன்று வேலையிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பித்து பணியில் சேருமாறு ஒன்றியங்களிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு,
தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன், தற்போது வழங்கப்படவுள்ள பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்ப கடிதத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்.
அவ்வாறு பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிப்பவர்களது விருப்ப கடிதம் பரிசீலிக்கப்பட்டு வருகிற 1-ந்தேதி முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. எனவே, குறித்த காலத்தில் விண்ணப்பித்து இப்பணி வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- மாயோன் ரத யாத்திரை நேற்று பெரம்பலூருக்கு வந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
- பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
பெரம்பலூர்:
தமிழர்களின் ஆன்மீக அறிவியலை கொண்டாடும் வகையில் சிலை கடத்தல், புதையல் வேட்டை பற்றி மாயோன் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்காக பெருமாள் சிலையுடன் கூடிய ரத யாத்திரை தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறது. இந்த ரதயாத்திரை கடந்த 5ம்தேதி சென்னையில் தொடங்கியது.
இந்த ரத யாத்திரை நேற்று பெரம்பலூருக்கு வந்தது. ரத யாத்திரைக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த ரதயாத்திரையின் நோக்கம் ஒரு நேர் மறை எண்ணத்தை பரப்புவது, அனைவரையும் நேசி, யாரையும் வெறுக்காதே என்ற கருத்தை மக்களை ஏற்க செய்வது என்கின்றனர் ரதயாத்திரை அமைப்பு குழுவினர்.
- வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் பணிகள்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நாரணமங்கலம் ஊராட்சியில் ரூ.8.98 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், ரூ.6.33 லட்சம் மதிப்பீட்டில் நாரணமங்கலம் முதல் காரை பிரிவு ரோடு வரை 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை புதுப்பிக்கும் பணியினையும்,
ரூ.8.43 லட்சம் மதிப்பீட்டில் மருதடி மலை முதல் கல்லுக்கட்டி ஏரி வரை 1.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை புதுப்பிக்கும் பணியினையும், ரூ.9.48 லட்சம் மதிப்பீட்டில் சிறுவாச்சூர் வரை பிரிவு வாய்க்கால் புதுப்பித்தல் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
- வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் பரிசு வழங்கினார்
- 12 அணிகள் பங்கேற்று திறமைகளை வெளிபடுத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன் சார்பில், மாவட்ட அளவில் ஆண்களுக்கான வாலிபால் போட்டி பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. போட்டியினை காலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தொடங்கி வைத்தார்.
போட்டியில் மாவட்டத்தில் இருந்து 12 அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். போட்டியில் முதல் இடத்தை சு.ஆடுதுறை எவரெஸ்ட் வாலிபால் அணியும், 2-ம் இடத்தை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வாலிபால் அணியும், 3-ம் இடத்தை கொளக்காநத்தம் டி.ஜி.பி. வாலிபால் அணியும் பிடித்தனர்.
பின்னர் மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.8 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.6 ஆயிரமும் பரிசுத் தொகையும், மேலும் அந்த அணிகளுக்கு பரிசு கோப்பையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.
4-ம் இடம் பிடித்த மாஸ் பெரம்பலூர் வாலிபால் அணிக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் மயிலாடுதுறையில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
- கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.
- கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திருவிளக்குறிச்சி ராஜாமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சங்கீதா (வயது 18). இவர் திருச்சி மாவட்டம், குமுளூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 4-ந் தேதி காலையில் வழக்கம் போல் சங்கீதா கல்லூரிக்கு சென்றார். பின்னர் மாலையில் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் சங்கீதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து சங்கர் இது தொடர்பாக பாடாலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடி வருகின்றனர்.
- சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம், ராஜபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் பிரவீன் (25). இவா், கடந்த 10 நாள்களாக பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள வினோத் என்பவரது வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி காலை நான்குச் சாலை சந்திப்பு அருகே நடந்து சென்றபோது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரவீன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூரில் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூங்கி கொண்டிருந்த அரவிந்துக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாம்
பெரம்பலூர்:
தர்மபுரியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அரவிந்த்(வயது 21). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பு 3-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் அவர் தன்னுடன் பயிலும் 2 நண்பர்களுடன் பெரம்பலூர் ரோஜா நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் தூங்கசென்ற அரவிந்த், காலை நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லையாம். இதனால் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் அரவிந்தை எழுப்பியுள்ளனர். அப்போது அரவிந்துக்கு நாடி துடிப்பு குறைவாக இருந்ததால்,
அவர்கள் அரவிந்தை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அரவிந்த் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அரவிந்த் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்றனர்
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த அரவிந்துக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதாம். அப்போது அவருடன் தூங்கிக்கொண்டிருந்த நண்பர் ஒருவர் அரவிந்தை எழுப்பி கேட்டதற்கு,
அதற்கு அவர் தனக்கு ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு மீண்டும் தூங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் காலையில் மயக்க நிலையில் எழுந்திருக்காமல் இருந்துள்ளார். நாடி துடிப்பு குறைந்து அரவிந்த் உயிரிழந்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அரவிந்த் கடந்த மாதம் தன்னுடன் பயிலும் மாணவி ஒருவருடன் இரவில் வல்லாபுரம் அருகே சென்றபோது, மர்மகும்பல் அரவிந்திடம் செல்போனையும், அந்த மாணவியிடம் 1½ பவுன் நகையையும், செல்போனையும் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தற்போது அரவிந்த் இறந்ததற்கான காரணம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரவிந்த் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அரவிந்தின் உடலை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அக்கல்லூரி மாணவ-மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






