search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் தனியாக இருந்த வங்கி ஊழியர் மனைவியிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
    X

    வீட்டில் தனியாக இருந்த வங்கி ஊழியர் மனைவியிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

    • வீட்டில் தனியாக இருந்த வங்கி ஊழியர் மனைவியிடம் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • கிருஷ்ணசாமி மர்மநபரை பிடிக்க முயன்றார். ஆனால் மர்மநபர் மொபட்டை விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தம்பை கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மனைவி சங்கீதா (வயது 36). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சாமிதுரை குன்னம் தாலுகா அகரம்சீகூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.

    சாமிதுரை நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டார். சாமிதுரையின் மகன், மகள் சொந்த ஊரான தம்பைக்கு திருவிழாவிற்காக சென்று விட்டனர். இதனால் வீட்டில் சங்கீதா மட்டும் தனியாக இருந்து வந்தார்.

    நேற்று இரவு 7.15 மணியளவில் சங்கீதா வீட்டில் துணிகளை அயன் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தடைபட்டது. இந்த நிலையில் வீட்டில் மர்மநபர் ஒருவர் நுழைந்தார். அவர் இருட்டில் மறைந்திருந்து சங்கீதாவின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றார்.

    இதனை சுதாரித்துக்கொண்ட சங்கீதா திருடன், திருடன் என்று சத்தம் போட்டவாறு, வீட்டின் வெளியே ஓடி வந்தார். ஆனால் மர்மநபர் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். இதில் மர்மநபர் கையில் 7 பவுன் சங்கிலி சிக்கியது. சங்கீதா கையில் மீதி 2 பவுன் சங்கிலி இருந்தது.

    சங்கீதாவின் அலறல் சத்தத்தை கேட்டு மாடியில் இருந்த வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணசாமி ஓடி வந்தார். அப்போது மர்மநபர் வந்திருந்த மொபட்டை எடுத்து கொண்டு தப்ப முயன்றார். இதனை கண்ட கிருஷ்ணசாமி மர்மநபரை பிடிக்க முயன்றார். ஆனால் மர்மநபர் மொபட்டை விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×