என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இந்து சமய அறநிலையத் துறை கல் பதித்து வேலி அமைத்து இருக்கிறோம்.
    • பெரம்பலூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் கணக்கெடுத்து உள்ளோம்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் மற்றும் செல்லியம்மன் கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள இந்து சமய அமைப்புகள் மூலம் நடத்தப்படும் கோவில்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார். அந்த அடிப்படையில் பெரியசாமி, மலைச்சாமி என்னும் செல்லியம்மன் கோவிலில் 6 மாத காலமாக நடந்து வரும் பிரச்சினைகளை துறை ரீதியாக ஆய்வு செய்வதற்காக ஆணையாளர் குமரகுருபரன், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட கழக செயலாளர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய வந்திருக்கிறேன்.

    செல்லியம்மன் கோவிலில் ஏற்கனவே உடைத்து எறியப்பட்ட சிலைகள் அனைத்தையும் நிறுவும் பணி நடந்து வருகிறது. பக்தர்கள் சிரமம் இல்லாமல் வந்து செல்ல சாலை பணிகளை கலெக்டர் முழு வீச்சில் செய்து வருகிறார்.

    அதே போன்று 2014-ல் பாலாலயம் செய்யப்பட்ட மதுர காளியம்மன் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து ஆகஸ்டு மாதத்துக்குள் குடமுழுக்கு நடத்த அறிவுரை வழங்கி உள்ளோம். அனைத்து பணிகளும் ஓராண்டுக்குள் முடிவடையும்.

    பெரியசாமி கோவிலின் தொன்மை மாறாமல் புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும். மீண்டும் இங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறையுடன கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    யூடியூபர் ஒருவர் கோவில் திருப்பணி என்ற பெயரில் பல லட்சம் பணம் வசூல் செய்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துைறயை பொறுத்தமட்டில் அவர் முறையாக பணிகளை மேற்கொள்ளவில்லை. ஆனால் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தால் கருத்து பரிமாற்றம் ஏற்புடையதாக இருக்காது.

    தமிழகத்தில் திருக்கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க 38 வருவாய் மாவட்டங்களில் வட்டாட்சியர், சர்வேயர், உதவியாளர்கள் என 114 பணியிடங்கள் ஓராண்டுக்கு உருவாக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இந்து சமய அறநிலையத் துறை கல் பதித்து வேலி அமைத்து இருக்கிறோம்.

    கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பட்டா மாற்றம் செய்துள்ளதில் ஒத்துப்போகும் பட்டா, ஒத்துப்போகாத பட்டா என இருவகையாக பிரித்து பதிவேற்றம் செய்து வருகிறோம். இதில் ஒத்துப்போகாத பட்டா இருந்தால் கலெக்டர் மூலமாக மேல் முறையீடு செய்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் கணக்கெடுத்து உள்ளோம். அவை விரைவில் மீட்கப்படும். இதுவரை நிலுவையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கோவில் நிலங்கள் வாடகை, பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என்றார்.

    தமிழகத்தில் ஓராண்டில் எதுவும் நடக்கவில்லை, லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றிய கேள்விக்கு, 5 ஆண்டுகள் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. ஜனநாயகத்தின் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் ஆக்கப் பூர்வமான பணிகளை நோக்கி செல்கிறோம். மக்களின் வளர்ச்சி, மகிழ்ச்சி, நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி எங்களின் பயணம் இருக்கும்.

    அவரின் குறுக்கீடுகளை சிறுசிறு இடையூறுகளாகத்தான் கருதுகிறோமே தவிர, அதனை பெரிய அளவில் எடுத்துக்கொள் வது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், ஊராட்சிக்குழு உறுப்பினர் சி.ராஜேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • மாணவர்கள் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஆய்வு
    • உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்தும் அறிந்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில்மேஷ்ராம் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அவர்கள் உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்தும், அரசால் வழங்கப்பட்டுள்ள பொருட்கள் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து, உணவு பொருள் சேமிப்பு அறை, சமையல் செய்யும் அறை மற்றும் உணவருந்தும் கூடம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? எனவும், விடுதியில் குடிநீர், தங்கும் வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா? என்பது குறித்தும் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதையடுத்து, சிறப்பு தூர்வாரும் பணிகளில் ஒன்றான நாரணமங்கலம் முதல் வரகுபாடி ஏரி வரை உள்ள வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகள் முடிவுற்றுள்ள பகுதியினை பார்வையிட்டார். நாரணமங்கலம் முதல் வரகுபாடி வரையிலான 4 ஆயிரம் மீட்டர் நீளம் வரத்து வாய்க்கால் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதனால் வரகுபாடி ஏரியில் ஆயக்கட்டு 63.13 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு கிணறுகளில் நீர் செரியூட்டு மூலமும் பாசன வசதி மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. துார்வாரப்பட்டுள்ள வாய்க்கால்களின் கரைகளில் மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கும்,

    கால்நடைகளுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த பசுந்தீவனம் உற்பத்தி செய்திடவும், மண் அரிப்பை தடுக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமான துார்வாரப்பட்டுள்ள வாய்க்கால் கரைகளில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கொழுக்கட்டை புழு 3 பங்கும், ஒரு பங்கு முயல் மசால் கலந்த தீவன விதைகள் விதைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். 

    • பெரம்பலூரில் பெய்த மழைக்கு ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
    • வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் மழை பெய்தது. ஆனால் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் இடி-மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.

    மழை பெய்யும் போது சூறைக்காற்றும் வீசியது. இந்த மழைக்கு பெரம்பலூர் தாலுகா, கீழக்கணவாய் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன. ராமச்சந்திரன் குடும்பத்தினர் மழை பெய்யும் போது சுதாரித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அவர்கள் அரசின் நிவாரணம் கேட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெரம்பலூரில் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    • அரசு செவிலியர் பயிற்சிக்கல்லூரி அமைக்க வேண்டும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் கூட்டம் மாநில துணைத்தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவக்குமார், இணை செயலாளர் செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பெரம்பலூரில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் அதிகம் உள்ளன. மருத்துவத்துறையில் அதிக முன்னேற்றம் கண்டுவருவதால், பெண்களுக்கான உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு செவிலியர் பயிற்சிக்கல்லூரி அமைக்க வேண்டும்.

    தமிழக முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர்-கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட தலைநகரங்களை இணைக்கும் பெரம்பலூர்,

    வேப்பந்தட்டை, கைகளத்தூர், கூகையூர், கள்ளக்குறிச்சி சாலையை இருவழிச்சாலையாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் நகரில் வீடுகளுக்கு வினியோகம் செய்யும் காவிரி கொள்ளிட குடிநீரை முறையாக சுத்திகரித்து வழங்க வேண்டும். சேலத்தில் இருந்து பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டது
    • மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியின் மேற்பார்வையில் போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆரோக்கிய பிரகாசம், பாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், சஞ்சீவ்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

    முகாமில் பெறப்பட்ட 25 மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மணி கூறுகையில்,

    இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் எனவும், பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்."

    • மத்திய காப்பறைக்கு வாக்கு எந்திரங்கள் மாற்றி சீல் வைக்கப்பட்டது.
    • கலெக்டர் முன்னணியில் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021- இன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரு சட்டமன்ற தொகுதிக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள காப்பறையிலும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதிக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மத்திய காப்பறையிலும் வைத்து சீலிடப்பட்டிருந்தது.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக காப்பறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய காப்பறைக்கு மாற்றிடவும், பழுதடைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களுரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பிடுவதற்காகவும்

    பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள காப்பறை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக திறக்கப்பட்டது.

    அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மத்திய காப்பறையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக திறக்கப்பட்டு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக காப்பறையிலிருந்து கொண்டு வரப்பட்ட மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் மத்திய காப்பறையில் வைத்து மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சீலிடப்பட்டது.

    • சின்ன வெங்காயத்தை மத்திய அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தப்பட்டது.
    • மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அரியலூர் மாவட்ட தலைவர் விஸ்வநாதன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் நீலகண்டன்,

    பொருளாளர் மணி ஆகியோர் பேசினர். கூட்டத்தில், போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணி மாநாட்டை திருச்சியில் உழவர் பெருந்தலைவர் பிறந்த தினமான 5-ந்தேதி நடத்துவது. அதில் பெரம்பலூர்,

    அரியலூர் மாவட்டங்களில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொள்வது. மேட்டூர்-சரபங்கா, மணிமுத்தாறு-அய்யாறு இணைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில் தா.பேட்டை, கீரம்பூர் ஏரிகளில் தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்திட முந்தைய அரசால் திட்ட மதிப்பீடு தயார் செய்து கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை செயல்படுத்திட தமிழக அரசை கேட்டுக்கொள்வது.

    மாநிலம் முழுவதும் ஏரி, குளம், வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாகுபாடின்றி அகற்ற வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தின் நீர்வளத்தை பெருக்கும் நோக்கில் ரூ.110 கோடி மதிப்பிலான கொட்டரை நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

    சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவிற்கு ரூ.30 ஆக நிர்ணயம் செய்து நாபெட் மூலம் மத்திய அரசு கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 2020-21 ஆண்டு அரவை பருவத்திற்கு, சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புவெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவைத்தொகை, ஊக்கத்தொகையை வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவி திட்டத்தை எளிமைப்படுத்தி, ஆதார் அட்டை அடிப்படையிலேயே தொடர்ந்து நிதி வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் களரம்பட்டி துரைராஜன், சிறுகுடல் செல்லகருப்பு, சுந்தரராஜன், விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பூசாரி உயிரிழந்தார்.
    • சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 40). இவர் பெரம்பலூரை அடுத்த கோனோரிபாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூசாரியாக இருந்து வந்தார். மாரிமுத்துவின் நண்பர் அதே ஊரை சேர்ந்த விஜயகுமார்(25).

    சம்பவத்தன்று இரவு விஜயகுமாரும், மாரிமுத்துவும் ஒரே மோட்டார் சைக்கிளில் பெரம்பலூருக்கு வந்தனர். மோட்டார் சைக்கிளை விஜயகுமார் ஓட்ட, பின்னால் மாரிமுத்து அமர்ந்திருந்தார். காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடை எதிரே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த விஜயகுமார் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • பெரம்பலூர் நகராட்சி ஆணையர் மீது குற்றச்சாட்டு - விசாரணை குழு முன் குமரி மன்னன் ஆஜராகாததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த குமரிமன்னனை ராணிபேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்தும், நெல்லை மாவட்டம், அம்பை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த பார்கவியை பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்தும் கடந்த மே மாதம் 19ம்தேதி நகராட்சி நிர்வாக இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து குமரிமன்னன் கடந்த 31ம்தேதி பெரம்பலூர் நகராட்சி ஆணையர் பணியில் இருந்து விடுவித்து சென்றார்.

    இந்நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் பார்கவியை தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதனால் பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பொறியாளர் மனோகர் கூடுதலாக பொறுப்பு வகிப்பார் என கடந்த 6ம்தேதி நகராட்சி நிர்வாக இயக்குனரகம் உத்தரவிட்டது. இதன்பேரில் பொறியாளர் மனோகர் பெரம்பலூர் நகராட்சி ஆணையராக (பொ) பொறுப்பேற்றார். குமரி மன்னன் வாலாஜபேட்டை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பெரம்பலூரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நகராட்சி ஆணையர் குமரிமன்னன் மீது எழுந்த கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து நேற்று முன்தினம் (13ம்தேதி) நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டார். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்தில் குமரி மன்னன் பெரம்பலூரிலேயே தங்கியிருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெறாமல் குமரிமன்னன் பெரம்பலூரை விட்டு எங்கேயும் செல்லக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

    பெரம்பலூர் நகராட்சியில் குமரிமன்னன் ஆணையராக பணிபுரிந்த காலத்தில் அவரால் கையாளப்பட்ட நகரமைப்பு பிரிவு கோப்புகள், வருவாய் பிரிவு சொத்து வரி விதித்தல் மற்றும் இதர கோப்புகள், பொது சுகாதாரப்பிரிவில் தனியார் மயம், கொள்முதல் சம்பந்தப்பட்ட கோப்புகள் மற்றும் பொறியியல் பிரிவு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு செய்து குறைபாடுகள் அல்லது முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதாக என்பதை கண்டறிந்து 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்கும்பொருட்டு 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி விசாரணை குழு தலைவராக வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், உறுப்பினர்களாக மறைமலைநகர் நகராட்சி ஆணையர் லட்சுமி, வால்பாறை நகராட்சி ஆணையர் பாலு, காஞ்சிபுரம் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கணேசன், மறைமலைநகர் நகராட்சி நகரமைப்பு அலுவலர் தாமோதரன், திருவேற்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பெர்ட் அருள்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விசாரணை குழுவினர் நேற்று (14ம்தேதி) பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர். விசாரணை குழு முன் குமரி மன்னன் ஆஜராகாததால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வடமாநில தொழிலாளர்களை கணக்கெடுத்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பெரம்பலூர் மாவட்டத்தில் வடமாநிலத்தவர்களுக்கு உள்நுழைவு சீட்டு முறையினை அமல்படுத்த வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பையாவிடம் கொடுத்தனர்.

    அந்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநிலத்தவர்களை கணக்கெடுத்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை குறைத்து ஒப்பந்த பணிகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.

    கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வடமாநிலத்தவர்களுக்கு உள்நுழைவு சீட்டு முறையினை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காவல் கண்காணிப்பு குழு அமைத்து வடமாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

    • விவசாயிகளுக்கு முன்னரிமை அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    • மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் முன்னிலை வகித்தார். மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை வகித்தார்.

    இதில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக விவசாய பம்ப் செட் ஓடவில்லை, இதனால் விவசாயநிலத்திற்கு தண்ணீர் விட முடியவில்லை, ஆகையால் புதிதாக அதிக மின் அழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைத்து மின் விநியோகம் வழங்கவேண்டும்,

    மக்கள் நலன் கருதி மின் அலுவலகம் அமைக்கவேண்டும், மின்தடை சரி செய்யவேண்டும், முறையாக மின் விநியோகம் செய்யவேண்டும், காலதாமமின்றி மின் இணைப்பு வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின்நுகர்வோர்கள் மனு அளித்தனர். அம்மனுவினை சம்மந்தபட்ட மின் அலுவலர்களிடம் அளித்து போர்க்கால அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என மேற்பார்வை பொறியாளர் அம்பிகா உத்தரவிட்டார்.

    பின்னர் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா பேசுகையில், மின்நுகர்வோர்களின் புகார்கள் மீது கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் குறைகளை தீர்வு செய்யவேண்டும், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள பொதுமக்களுக்கு மின் இணைப்பு வழங்க துரிதமாக செயல்படவேண்டும்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பினை முன்னுரிமை அடிப்படையில் காலதாமதமின்றி வழங்கவேண்டும். இயற்கை சீற்றங்கள், பேரிடரால் ஏற்படும் மின் தடை, மின் கம்பம் விழுதல், பழுது ஏற்படுதல் போன்ற குறைபாடுகளை அவசரநிலையில் களையவேண்டும் என மின் உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.

    • குன்னம் அருகே மருவத்தூர் கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ேகாவில் புதிதாக கட்டப்பட்டது.
    • விஸ்வரூப தரிசனம், கும்ப திருவாராதனம், சுப்பிரமணியர் அர்ச்சனை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் கடம் புறப்பாடும், விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மருவத்தூர் கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ேகாவில் புதிதாக கட்டப்பட்டது. இந்த கோவிலில் விநாயகர், நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளியுள்ளன.

    இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 12-ந் தேதி கோ பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, புண்ணியாக வாசனமும், அதனைத் தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், எந்திர பிரதிஷ்டையும் நடைபெற்றது.

    நேற்று காலை விஸ்வரூப தரிசனம், கும்ப திருவாராதனம், சுப்பிரமணியர் அர்ச்சனை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் கடம் புறப்பாடும், விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    விழாவில் மருவத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×