என் மலர்
நீங்கள் தேடியது "KUMARIMANNAN DID NOT APPEAR BEFORE THE ENQUIRY"
- பெரம்பலூர் நகராட்சி ஆணையர் மீது குற்றச்சாட்டு - விசாரணை குழு முன் குமரி மன்னன் ஆஜராகாததால் பரபரப்பு ஏற்பட்டது.
- பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த குமரிமன்னனை ராணிபேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்தும், நெல்லை மாவட்டம், அம்பை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த பார்கவியை பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்தும் கடந்த மே மாதம் 19ம்தேதி நகராட்சி நிர்வாக இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து குமரிமன்னன் கடந்த 31ம்தேதி பெரம்பலூர் நகராட்சி ஆணையர் பணியில் இருந்து விடுவித்து சென்றார்.
இந்நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் பார்கவியை தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதனால் பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பொறியாளர் மனோகர் கூடுதலாக பொறுப்பு வகிப்பார் என கடந்த 6ம்தேதி நகராட்சி நிர்வாக இயக்குனரகம் உத்தரவிட்டது. இதன்பேரில் பொறியாளர் மனோகர் பெரம்பலூர் நகராட்சி ஆணையராக (பொ) பொறுப்பேற்றார். குமரி மன்னன் வாலாஜபேட்டை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரம்பலூரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நகராட்சி ஆணையர் குமரிமன்னன் மீது எழுந்த கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து நேற்று முன்தினம் (13ம்தேதி) நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டார். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்தில் குமரி மன்னன் பெரம்பலூரிலேயே தங்கியிருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெறாமல் குமரிமன்னன் பெரம்பலூரை விட்டு எங்கேயும் செல்லக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
பெரம்பலூர் நகராட்சியில் குமரிமன்னன் ஆணையராக பணிபுரிந்த காலத்தில் அவரால் கையாளப்பட்ட நகரமைப்பு பிரிவு கோப்புகள், வருவாய் பிரிவு சொத்து வரி விதித்தல் மற்றும் இதர கோப்புகள், பொது சுகாதாரப்பிரிவில் தனியார் மயம், கொள்முதல் சம்பந்தப்பட்ட கோப்புகள் மற்றும் பொறியியல் பிரிவு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு செய்து குறைபாடுகள் அல்லது முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதாக என்பதை கண்டறிந்து 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்கும்பொருட்டு 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி விசாரணை குழு தலைவராக வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், உறுப்பினர்களாக மறைமலைநகர் நகராட்சி ஆணையர் லட்சுமி, வால்பாறை நகராட்சி ஆணையர் பாலு, காஞ்சிபுரம் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கணேசன், மறைமலைநகர் நகராட்சி நகரமைப்பு அலுவலர் தாமோதரன், திருவேற்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பெர்ட் அருள்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விசாரணை குழுவினர் நேற்று (14ம்தேதி) பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர். விசாரணை குழு முன் குமரி மன்னன் ஆஜராகாததால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






