search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக விலைக்கு சிலிண்டர் விற்ற தனியார் கியாஸ் ஏஜென்சிக்கு அபராதம் விதிப்பு-நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
    X

    அதிக விலைக்கு சிலிண்டர் விற்ற தனியார் கியாஸ் ஏஜென்சிக்கு அபராதம் விதிப்பு-நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

    • அதிக விலைக்கு சிலிண்டர் விற்ற தனியார் கியாஸ் ஏஜென்சிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு விட்டது.
    • கேஸ் கம்பெனியின் அதிக வசூல், குறித்து வாடிக்கையாளர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் கடந்த ஆண்டு 2019 மே 6-ந் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் ரீபிள் கேட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்தார். கேஸ் ஏஜன்சியினர் சசிகலா பெயரில் ரசீது போட்டு கட்டணம் ரூ.746 என பதிவு செய்துள்ளனர்.

    மே 11-ந் தேதி கேஸ் கம்பெனியினர் சமையல் கேஸ் சிலிண்டரை சசிகலாவின் வீட்டிற்கு கொண்டு வந்து விநியோக புத்தகத்தை வாங்கி கையெழுத்திட்டு, கேஸ் சிலிண்டருக்கு ரூ.800 கட்டணம் கேட்டுள்ளனர். வாடிக்கையாளர் சசிகலா ரசீதில் ரூ.746 என்று தான் உள்ளது. அதை மட்டுமே தருவேன் என்று கூறவே, பணியாளர் ரூ.800 கொடுத்தால் தான் சிலிண்டர் தரமுடியும், இல்லையெனில் நான் திருப்பி எடுத்துப் போகிறேன் என்று கூறிவிட்டு சிலிண்டரை எடுத்துச் சென்றுவிட்டார்.

    கேஸ் கம்பெனியின் இத்தகைய அதிக வசூல், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி சேவைக்குறைபாடு மற்றும் நேர்மையற்ற வணிக முறையாகும் என சசிகாலா நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் முத்துக்குமார், ரத்தினசாமி ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

    விசாரணை முடிவில், வாடிக்கையாளருக்கு பில் விலையிலேயே கேஸ் சிலிண்டரை விநியோகம் செய்ய கோர்ட் உத்திரவிட்டது. மேலும், சசிகலாக்கு கேஸ் ஏஜென்சி ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மனஉளைச்சல் இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கின் செலவுத் தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் நல நிதிக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை 2 மாதத்தில் நிறைவேற்றா விட்டால் சசிகலாக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பராயன் கோர்ட்டில் ஆஜராகி வாதிட்டார்.

    Next Story
    ×