என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பழனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பழனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

    சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால்  நாகை மாவட்டத்தில் பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சீர்காழி (தனி) சட்டமன்ற தொகுதி மற்றும் மயிலாடுதுறை தொகுதிக்கு பொதுபார்வையாளராக டாக்டர் அகிலேஷ் மிஸ்ரா என்பவரும், செலவின பார்வையாளராக சித்தலிங்கப்பா, பூம்புகார் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக டாக்டர் பிரமோத்குமார் மெஹ்ரா, செலவின பார்வையாளராக ஸ்ரீராம் விஷ்னை, கீழ்வேளுர் (தனி) மற்றும் வேதாரண்யம் தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக பித்யூத் பட்டாச்சார்யா, செலவினப் பார்வையாளராக ஸ்ரீநாத் சதாநளா, காவல் பார்வையாளராக அருண்கே மிட்டல், ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் புகார்களை மேற்கண்ட தேர்தல் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கலாம். மேலும் சட்டமன்ற தொகுதி வாரியாக பறக்கும் படைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சீர்காழி தொகுதிக்கு செல்பேசி எண். 7598850471, மயிலாடுதுறை தொகுதிக்கு செல்பேசி எண்.7598852314, பூம்புகார் தொகுதிக்கு செல்பேசி எண்.7598853704, நாகப்பட்டினம் தொகுதிக்கு செல்பேசி எண். 7598857921, கீழ்வேளுர் தொகுதிக்கு செல்பேசி எண்.7598858092, வேதாரண்யம் தொகுதிக்கு செல்பேசி எண். 7598859184 ஆகிய எண்களுக்கு தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு நாளையொட்டி முன்னாள் எம்.பி குமரி அனந்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாகிரக 86ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அங்குள்ள நினைவு தூணில் காங்கிரஸ் கட்சியினர்,பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. குமரி அனந்தன் தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் வேதாரண்யம் வடக்குவீதியில் உள்ள உப்புசத்தியாகிரக நினைவு கட்டிடத்திலிருந்து ஊர்வலமாக அகஸ்தியன்பள்ளிக்கு சென்றனர். வேதாரண்யத்திலிருந்து 5 கிலோ மீட்டர் ஊர்வலமாக சென்ற காங்கிரசார் வழிநெடுகிலும் தேசப்பக்தி பாடல்களையும் வந்தே மாதரம் கோஷத்தையும் முழங்கி சென்றனர். பின்பு அகஸ்தியன்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூணுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    வேதாரண்யத்தில் 1930–ம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ராஜாஜி, சர்தார் வேதரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு ஆங்கில அரசுக்கெதிராக உப்பு அள்ளும் போராட்டத்தை நடத்தினர். அதன் 86ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் முன்னாள் எம்.பி. குமரி அனந்தன், பி.வி.ராஜேந்திரன் சர்தார் வேதரெத்தினத்தின் பேரன்கள் வேதரெத்தினம், கேடிலியப்பன் மற்றும் உப்பு சத்தியாகிரக நினைவு கமிட்டி பொதுச் செயலாளர் சக்தி.செல்வகணபதி துணைத் தலைவர் சண்முகவடிவேல் மற்றும் நூற்றுக்கணக்கானோர் வந்தே மாதரம் கோஷங்களை எழுப்பி உப்பு அள்ளும் நிகழ்ச்சியை நடத்தினர்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் நாகை மாவட்ட பொதுச்செயலாளர் சங்கரவடிவேலு மாவட்டசெயலாளர் போஸ், காங்கிரஸ் தொண்டர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். உப்பு சத்தியாகிரக பாதயாத்திரையில் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்திலிருந்து 5கிலோமீட்டர் உள்ள நினைவு தூண் வரை தொண்டர்களுடன் குமரி அனந்தன் நடந்து சென்றார்.

    பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமுல்படுத்துவேன் என்று கூறியுள்ளனர். அப்படி செய்யாவிட்டால் நான் உறுதியோடு நின்று போராட்டம் நடத்துவேன். எந்த மாதிரி போராட்டம் என்று அப்போது கட்சிகாரர்களோடு கலந்து ஆலோசித்து நடத்துவேன். சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப் படங்களை அந்தந்தப் பகுதியிலுள்ள பள்ளிகளிலாவது வைக்க வேண்டும்.

    அப்போதுதான் இளைய தலைமுறையினர் சுதந்திர போராட்ட வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். இதனை எனது வாழ்நாளின் மீதியுள்ள ஆயுட்காலப் பணியாக செய்வேன் என்றார்.

    நாகை மாவட்டத்தில் மே 1–ந்தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

    மே தினத்தை முன்னிட்டு மே 1–ந்தேதி தமிழ்நாடு மதுபான கடைகள் மற்றும் பார்கள் விதிகள் 2003 விதி 12–ன்படியும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) 1981 விதி 25 ஆகியவையின் கீழ் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் (பார்) உரிமம் பெற்றுள்ள ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் ஆகியவை உள்ளிட்ட அனைத்து மதுபானக் கடைகளும், மதுக் கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

    மேலும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வேதாரண்யம் அருகே குடிசை வீடு எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் செரையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சோமு (வயது 61). வீட்டில் சமையல் செய்யும் போது திடீரென தீப்பிடித்து கொட்டகையும், வீட்டின் ஒரு பகுதியும் எரிந்து சேதமானது.

    இதன் சேத மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது. வேதாரண்யம் தீயணைப்பு துறையிணர் வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    இந்தச் சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சீர்காழியில் இன்று ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 70 செல்போன்கள் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் சிக்கியது

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை துணை தாசில்தார் சித்ரா, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மதிகுமார், தலைமை காவலர்கள் சோமசுந்தரம், ராஜசேகரன் ஆகியோர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிலாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த மினிலாரி புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு செல்வதும், அட்டை பெட்டிகளில் விலை உயர்ந்த ஸ்மார்ட் செல்போன்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி மினிலாரியை ஓட்டி வந்த திருப்பனந்தாளை சேர்ந்த சுதாகரிடம் விசாரித்தபோது உரிய ஆவணம் இன்றி செல்போன்கள் எடுத்து செல்வது தெரிந்தது.

    இதையடுத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 70 செல்போன்களை பறிமுதல் செய்து சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழியிடம் அதனை பறக்கும்படை அலுவலர்கள் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காட்டிய பிறகு செல்போன்களை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தர்மபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நாயகி அம்மன் சமேத வைத்திய நாத சுவாமி கோவில் உள்ளது.

    சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தர்மபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நாயகி அம்மன் சமேத வைத்திய நாத சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் முத்துகுமார சுவாமி,நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபரான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர். செவ்வாய் பரிகார ஸ்தலமாக இது இருப்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் தரிசனம் செய்ய பக்தர்கள் வருகின்றனர்.

    இந்நிலையில் வைத்தீஸ்வரர் சுவாமியை குலதெய்வமாக வழிபடும் நகரத்தார்கள் எனும் நாட்டுகோட்டை செட்டியார் மக்கள் பல்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 2–ம் செவ்வாய்க்கிழமை இக்கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இன்று திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, காரைக்குடி போன்ற பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    சுவாமியை வேண்டி மஞ்சள் தடவிய சிறு குச்சியை கொண்டு வந்து கோவில் கொடி மரத்தில் வைத்து வழிபாடு செய்கின்றனர்.முன்னதாக கோவில் சித்தாமிர்தம் தீர்த்த குளத்தில் நீராடி வைத்தியநாதன், தையல்நாயகி, செல்வமுத்துகுமார சுவாமியை வணங்கி செல்கின்றனர்.

    மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சியை பிடிக்க முயல்கின்றனர் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்

    மயிலாடுதுறை :

    மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:–

    கடந்த 5 ஆண்டு காலமாக நடைபெறுகின்ற அ.தி.மு.க. ஆட்சியில் கோளாறுகளை இங்கே அனுபவத்தில் உணர்ந்தீர்கள். இவை எல்லாம் நீங்கி உண்மையான சுதந்திரத்தை உணர கூடிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், அந்த வாய்ப்பை உருவாக்க கூடியவர்கள் இளைஞர்கள் தான் என்பதை நான் தெரிவித்து கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்.

    இங்கே பேசியவர்கள் நான் 6வது முறையாக நான் வெற்றி பெற இருக்கிறேன் என்பதை எல்லாம் சொன்னார்கள். அதற்கு காரணம். என் மீது கொண்ட ஆசை, அக்கறையின் காரணமாகத்தான்.

    நமது மக்கள் வாழ வேண்டுமேயானால், தமிழ்நாடு வாழ வேண்டுமேயானால், தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அண்ணா போன்றவர்களிடம் பாடம் கற்றவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தால் தான் அவர்களால் ஒரு நல்ல நிலையை தமிழ்நாட்டில் உருவாக்க முடியும்.

    தி.மு.க. ஒரு அரசியல் கட்சி என்று சொல்வதை விட சமுதாயம் இயக்கம் என்று சொல்வதுதான் பொருந்தும். தி.மு.க.வின் கொள்கை. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு எல்லோரும் நண்பர்கள் தான் என்ற நிலையில் இருக்கும் இயக்கம். தி.மு.க. எல்லோரையும் அரவணைத்து செல்லும் இயக்கம். இளைஞர் சமுதாயத்தால் நாட்டை வாழ வைக்க முடியும். அந்த பெரும் பொறுப்பை இளைஞர்கள் ஏற்று கொள்ள வேண்டும்.

    ஓட்டுக்கு பணம் செலவு செய்து ஆட்சியை பிடிக்க முயல்கின்றனர். தி.மு.க.வை அழித்துவிட சதிசெய்தால் அது நடக்காது. வரும்வழியில் விவசாயிகள் பெருமளவில் கூடிய கூட்டத்தை பார்த்தேன். விவசாயிகளுக்கு என்ன தேவை என்ன என்பதை உணர்ந்து அவர்களுக்கு செய்ய தயாராக இருக்கிறோம்.

    தி.மு.க. ஆட்சி இன்றைக்கு நடைபெறவில்லை. அண்ணாவின் பெயரால் ஒரு ஆட்சி இங்கே நடைபெறுகிறது. அண்ணா சமாதான பிரியர். அண்ணா எதையும் தாங்கும் இதயம் படைத்தவர். அந்த அண்ணா பெயரில் நடைபெறும் ஆட்சி எந்த முறையில் நடைபெறுகிறது என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் இன்னொரு பெரிய பிரச்சினை மதுவிலக்கு. அந்த மதுவிலக்கு பிரச்சினையை பொறுத்தவரை தி.மு.க. உறுதியாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் முதலில் நான் போடும் கையெழுத்து மதுவிலக்கு கையெழுத்தாக தான் இருக்கும். மது அருந்தும் காரணத்தால் இளைஞர்கள் வீணாகி போகிறார்கள்.

    எத்தனை வாலிபர்களின் உயிரை மது குடித்து இருக்கிறது. பெண்களின் கற்புக்கு மதுவினால் சோதனை ஏற்பட்டுள்ளது. இதை களையதான் மது வேண்டாம் என்று காந்தியடிகள் சொன்ன கொள்கையை ஏற்று 1971–ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு கொண்டு வந்தோம்.

    மதுவிலக்கு கொண்டு வந்தீர்கள். மறுபடியும் மதுவை வியாபாரம் செய்தீர்களே அது என்ன நியாயம் என்று கேட்கிறார்கள். மதுவிலக்கை ஓராண்டு ஒத்தி வைத்தது உண்மை. அப்படி ஒத்தி வைக்கப்பட்ட மதுவிலக்கை 1974–ம் ஆண்டு அமலுக்கு கொண்டு வந்து மதுவிலக்கை அமல்படுத்தினோம்.

    இனியாரும் இனிமேல் கடைகளிலேயே மது விற்கக்கூடாது என்று சட்டத்தை கொண்டுவந்து மதுவிலக்கு திட்டத்தை 1974–ம் ஆண்டு தீவிரமாக்கியது தி.மு.கஅதற்கு பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலே கடைக்கு கடை சாராயம், பிராந்தி என்ற முறையில் மது பெருக ஆரம்பித்தது. அரசே மதுவிற்பனையில் ஈடுபட்டது.

    ஆனால் இன்றைக்கு படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்கிறார்கள். அது என்ன படிப்படியாக என்று எனக்கு புரியவில்லை. அதை நாங்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை.

    ஒரே அடியாக மதுவிலக்கு. யாரும் மது அருந்த கூடாது. மது அருந்துவதை விட விஷத்தை அருந்தலாமே என்று சொல்லும் அளவுக்கு மதுபழக்கத்தினால் மக்கள் கெட்டுபோய்விட்டார்கள். அதை மறப்போம். அதை தடுப்போம். மதுவை ஒழிப் போம் என்று என்னுடைய முழக்கத்தை ஆதரித்து கைதட்டும் இளைஞர்களை பார்க்கிறேன்.

    இனி தமிழ்நாட்டிலேயே தி.மு.க. ஆட்சி ஏற்பட்டால் உடனடியாக முதலில் நான் போடும் கையெழுத்து மது விலக்கு திட்டம் தான். அதற்கு இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும். நான் மதுவிலக்கில் தீவிரமாக இருப்பேன். மதுவை ஒழிப்போம். மதியை வளர்ப்போம். மனதை பண்படுத்துவோம். அடக்கத்தை கற்போம். தி.மு.க.வை ஒரு சமுதாய இயக்கமாக ஏற்போம். தமிழகத்தை வளப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ. 1 கோடியே 48 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம் ;

    ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ. 1 கோடியே 48 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து காரைக்காலுக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ் இன்று காலை 7 மணியளவில் நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள ஆலங்குடி வந்தது.

    அப்போது வேதாரண்யம் தொகுதி தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் பஸ்சை மறித்து சோதனை செய்தனர். அங்கிருந்த பையை சோதனை செய்த போது அதில் ரூ. 1 கோடியே 48 லட்சம் இருந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    இந்த பணத்தை அதே பஸ்சில் பயணம் செய்த மதுரை வெள்ளி மலையை சேர்ந்த மான்ராஜ் கொண்டு வந்தது தெரிய வந்தது. அவர் தனது மனைவியுடன் வந்து இருந்தார். பணத்தை யாருக்கு கொண்டு சென்றார்? ஹவாலா பணமா? என்பது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆம்னி பஸ்சில் ரூ. 1½ கோடி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி அருகே குடிப்பழக்கம் தகராறில் மனைவி மீது தீ வைத்து கொளுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே புதுப்பட்டினம் மடவாமேடு சாலையை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி விஜி என்கிற விஜயலட்சுமி (வயது28).

    ராமலிங்கம் பைப் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாம். இந்நிலையில் சம்பவத்தன்று ராமலிங்கத்தின் தம்பி அவரது சட்டை பையில் வைத்திருந்த பணத்தை காணாமல் தேடியுள்ளார். இதைப்பார்த்த விஜி, தனது கணவரிடம் நீங்கள் பணத்தை எடுத்து சென்று குடித்து விட்டீர்களா? என்று கேட்டாராம்.

    இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கம் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து மனைவி மீது ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது.

    இதில் உடலில் பலத்த தீக்காயமடைந்த விஜியை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மின் கம்பத்தில் ஆம்னி பஸ் மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி போலீசார் விசாரணை

    குத்தாலம்:

    சென்னையில் இருந்து பேராவூரணிக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது.

    இன்று அதிகாலை 3 மணியளவில் மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் நெய்குப்பை என்ற இwwடத்தில் வளைவில் வேகமாக வந்து திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

    இதில் மின் கம்பம் 2 துண்டானது. அதன் பின்னரும் கட்டுப்பாட்டுக்குள் வராமல் அருகில் உள்ள குளத்தின் ஓரத்தில் சிக்கி நின்றது.

    விபத்தில் மன்னார்குடியை சேர்ந்த விஜய் ஆண்டனி மகள்கள் ஜான்சி மீனா (4), சாதனா சுபஸ்ரீ (3 மாதம்) மற்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த நாடிமுத்து ஆகிய 3 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.

    29 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் வினோத் என்பவர் கால் துண்டானது. காயம் அடைந்தவர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த 8 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    டிரைவர் தூக்ககலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப சென்ற வாகனத்தில் ரூ. 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை :

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியம் கடை வீதியில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரியான தனி தாசில்தார் சாந்தி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்பும் வாகனம் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 1 கோடி இருந்தது.

    இது குறித்து விசாரித்த போது கும்பகோணம் ஸ்டேட் வங்கியில் இருந்து மயிலாடுதுறையில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்புவதற்காக எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது.

    ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 1 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை மயிலாடுதுறை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.உரிய ஆவணத்தை அளித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தாசில்தார் தெரிவித்தார்.

    விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு நாகை கோர்ட்டு உத்தரவு

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). இவருக்கு திருமணமாகி வசந்தி (28) என்ற மனைவியும் சக்திசகானா (4) என்ற பெண் குழந்தையும் மகிமித்ரன் என்ற மகனும் உள்ளனர்.

    இவரது தாய் குமுதவள்ளி (60). தந்தை ரெத்தினம் (65). முருகானந்தம் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். 24.11.14 அன்று கரியாப்பட்டிணத்திலிருந்து வேதாரண்யம் நோக்கி தன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    இவர் வேதாரண்யம் நகராட்சி பகுதி திருவாசகுளம் அருகே வந்தபோது வேதாரண்யத்திலிருந்து கரியாப்பட்டிணம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டது.இதில் முருகானந்தம் படுகாயம் அடைந்தார். இவரை உடனடியாக மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமணையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் முருகானந்தம் இறந்து வட்டதாக தெரிவித்தனர்.

    விபத்தில் இறந்த முருகானந்தம் மனைவி வசந்தி மற்றும் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி வேதாரண்யம் வக்கீல் கே.வி.ராசேந்திரன் மூலம் நாகை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சிவகுமார் முருகானந்தம் குடும்பத்துக்கு நாகை நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

    ×