என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு, கிடா தலைமேடு சன்னதி தெருவை சேர்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி செல்லமாள்(வயது 76) இவர்களது மகன் ராமலிங்கம்(48). சுப்பிரமணிக்கும் அவரது மகன் ராவிங்கத்துக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று ராமலிங்கம், செல்லம்மாளிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டார். இது பற்றி மணல்மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணல்மேடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக மணல்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சொத்துக்காக பெற்ற தாயை கத்தியால் குத்தி கொன்ற ராமலிங்கத்தை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யம் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யத்தை சுற்றியுள்ள ஆதனூர், பண்ணவயல், பண்ணால், ஆயக்காரன்புலம், ஆயக்காரன்புலம் 1ம் சேத்தி, 2ம் சேத்தி, வாட்டாக்குடி, மகாராஜபுரம், துளசியாபுரம், சாக்கை, கள்ளிமேடு, தாமரைக்குளம், வெள்ளப்பல்லம், வானவன்மகாதேவி, நடார்குளம் ஆகிய கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது:–

    தி.மு.க. ஆட்சியில் இருண்டு கிடந்த தமிழகத்தை ஒளிஏற்றி வைத்தவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா. மாணவ, மாணவிகளின் கல்வியில் அக்கறை செலுத்தி அவர்களுக்கு தேவையான மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி ஊக்குவித்தார்.இல்லத்தரசிகளுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை வழங்கினார். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறார். அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை.

    வேதாரண்யம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்து உங்களுக்கு பணியாற்ற உத்தரவிடுங்கள்.

    நான் எப்போதும் உங்களோடு உங்களாக இருப்பேன். நீங்கள் எந்த நேரமும் என்னை சந்தித்து உங்களது குறைகளை சொல்லலாம். நீங்கள் அழைத்தவுடன் உடனே வரக்கூடியவன் நான் என உருக்கமாக பேசினார்.

    பிரசாரத்தின் போது தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் அவை.பாலசுப்பிரமணியம், தலைமைக்கழக பேச்சாளர்கள் வேதை.சிவசண்முகம், பாலை.செல்வராஜ், வாய்மை இளஞ்சேகரன், தொகுதி செயலாளர் சண்முகராஜ், வேதை, ஒன்றிய செயலாளர் கிரிதரன், துணை செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவானந்தம், இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை சின்னகடை வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை சின்னகடை வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:–

    கடந்த 50 ஆண்டு காலமாக தி.மு.க., அ.தி.மு.க இருகட்சிகளும் தமிழகத்தை ஆட்சி செய்து மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அண்ணா தொடங்கிய கட்சியில் புகுந்த கருநாகம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில் புகுந்த கருநாகம் ஜெயலலிதா. இவர்களை மீண்டும் ஆட்சி செய்ய விடலாமா? அதற்காக தான் தற்போது அமைந்துள்ள மக்கள் நலக்கூட்டணி மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.

    புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் புதிய பஸ்நிலையம் கட்டி மக்களின் பயன் பாட்டிற்கு வழங்குவோம். மக்கள் நலக்கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சீர்காழி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.

    சீர்காழி:

    சீர்காழி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஒரே தலைவர் கலைஞர்தான். விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கலைஞர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். முதல்- அமைச்சர் ஆனதும் அவர் போடும் முதல் கையெழுத்து விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான கையெழுத்துதான்.

    மக்களையும், மக்களுக்கான பிரச்சனைகளையும் நேரடியாக சந்தித்து அவர்களது பிரச்சனைகளை உடனே தீர்த்து வைக்கும் ஒரே இயக்கம் தி.மு.க.தான்.

    தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா என்றாவது மக்களை சந்தித்து உண்டா, பிரச்சனைகளை தீர்த்ததுண்டா அப்படிப்பட்ட முதல்வர் தமிழ்நாட்டுக்கு தேவையா? கடந்த 5 ஆண்டுகளில் மதுவிலக்கை கொண்டுவராத ஜெயலலிதா தற்போது கலைஞர் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை கொண்டு வருவேன் என கூறியவுடன். ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவேன் என கூறிவருவது நியாயமா?

    இலவசமாக கொடுக்கப்பட்ட மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவை பல இடங்களில் வேலை செய்யவில்லை. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லையென்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

    மின்வெட்டினால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை வாய்ப்பை இலந்துள்ளனர். இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை மீட்க ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அவர்களிடம் இருந்து இலங்கை அரசு கைபற்றிய படகுகளை திருப்பி பெற்றுதரவும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும். மீன்பிடி தடைகாலத்தின் போது மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்படும். கொள்ளிடம், பாலாறு, வெண்ணாறு ஆகியவற்றில் தடுப்பணைகள் கட்டப்படும்.

    கடலோர கிராமங்களில் கடல்நீர் உட்புகாதவாறு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அவர் வேதாரண்யம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவ:–

    மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் காய்கனிகள் குளிர்பதனத்துடன் கூடிய குடோன் அமைக்கப்படும், நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும், அதே போல் ரிங்ரோடு பணி உடனடியாக துவங்கி முடிக்கப்படும்.

    ஜெயலலிதா விவசாயிகளுக்கு ஒன்று கூட செய்யவில்லை தொழிற்சாலை ஒன்று கூட இல்லை. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு 20–வது இடத்திற்க்கு சென்றுவிட்டது. சட்டம் ஓழுங்கு சரியில்லை பாதுகாப்பற்ற நிலைஉள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்கபடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கீழ்வேளூர் அருகே வாகன சோதனையில் பஸ்சில் வந்த மரவியாபாரியிடம் ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 16–ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. அதைதொடர்ந்து நாகை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதி முறைகளை கண்காணிக்கும் வகையில் 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நாகை மாவட்டம், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி பறக்கும்படை அதிகாரிகள் அகரகடம்பனூர் பஸ் நிறுத்தம் அருகே வாகனசோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திருவாரூரில் இருந்து நாகை நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி பயணிகளின் பைகளை சோதனை செய்தனர். அப்போது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மரவியாபாரியான வேலுசாமி என்பவரது பையை சோதனை செய்ததில் ரூ.2 லட்சம் இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் மரவியாபாரத்திற்காக ரூ.2 லட்சத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால் பணத்திற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து கீழ்வேளூர் கருவூலத்தில் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.

    நாகை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தை அடுத்த நாகூர் போலீஸ் சரகம் வடங்குடி கண்ணமங்கலத்தை சேர்ந்த சேக்தாவூது என்பவரின் மகன் ஜெகபர்சாதிக் (வயது 26). பிளஸ்–2 படித்துவிட்டு மேற்படிப்பு படிக்க வசதியில்லாததால் அங்குள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவருக்கு மோட்டார் சைக்கில் ஓட்ட தெரியாது. தன்னால் மேற்படிப்பும் படிக்க முடியவில்லை, மோட்டார் சைக்கிளும் ஓட்ட தெரியவில்லை என மனமுடைந்து வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×