என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கொடிய விஷமுடைய பாம்பு பிடிபட்டது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை நல்லத்துக்குடி பெருமாள் கோவில் வடக்கு வீதியில் வசித்து வருபவர்  சண்முகசுந்தரம் இவரது வீட்டின் பின்பக்க தோட்டத்தில் கொடிய விசம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு புகுந்து வெளியேற முடியாமல் கிடந்தது.

    இதனை கண்ட  வீட்டின் உரிமையாளர் சீர்காழி வனத்துறை அதிகாரி பாலசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக  வனத்துறை ஊழியர்களான கலைவாணன், முனியப்பன் வந்து பாம்பை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் பிடித்தனர். கொடிய விஷமுடைய கண்ணாடிவிரியன் வகையை சேர்ந்த பாம்பானது சுமார் 4அடி நீளமும் 3கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

    உடனடியாக அந்த பாம்பை பாதுகாப்பாக சாக்கில் கட்டி வனத்துறையினர் எடுத்து சென்றனர். வனத்துறையினர் பாம்பை பிடிப்பதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கைப்பார்த்தனர்.

    சீர்காழி அருகே விஷ வண்டுகள் கடித்து 8 பேர் காயம் அடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள அரசூர் தொல்காப்பியக்குடி கிராமத்தை சேர்ந்த சிலர் அங்குள்ள வயலில் விறகு வெட்டி கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களை அங்கு கூடு கட்டி இருந்த கதண்டுகள் (விஷ வண்டுகள்) கடித்தது. இதில் ராதா, சந்தோஷ்குமார், கலைச் செல்வி, சபீதா, அஜித்குமார், கலாவதி, லாவண்யா, ராஜஸ்ரீ ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர்.

    அவர்கள் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ராதா மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மயிலாடுதுறை அருகே வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை கவர தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் சரவணன் (30). வேனில் சென்று ரெடிமேடு துணிகள் விற்பனை செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை.

    அப்பகுதியை சேர்ந்த கண்ணையன் மகன் வீரகுமார். இவர் சமையல் காண்டிராக்ட் வேலை செய்து வருகிறார். இருவரும் உறவினர்கள். மாப்படுகை அண்ணா சிலை அருகே குடிபோதையில் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.இதனை அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டனர்.

    பின்னர் மாப்படுகை காவிரி ஆற்றுப் பாலம் அருகே சரவணன் மற்றும் சிலர் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது கையில் கத்தியுடன் அங்கு வந்த வீரகுமார் திடீரென சரவணனை குத்தி விட்டு ஓடி விட்டார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து சரவணனின் தந்தை பாலு மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார்.

    சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சம்பவ இடத்திற்கு மயிலாடுதுறை டி.எஸ்.பி. சரவணகுமார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். கொலையாளி வீரகுமார் மாப்படுகை அண்ணா சிலை அருகே பதுங்கி இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    அ.தி.மு.க. தி.மு.க.விடம் இருந்து மக்களுக்கு விடுதலை வாங்கி தரவே இங்கு வந்து இருக்கிறேன் என வேதாரண்யத்தில் பிரதமர் மோடி பேசினார்.
    வேதாரண்யம்:

    தமிழக சட்டசபைக்கு வருகிற 16-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் பிரசாரம் களை கட்டி உள்ளது. தமிழக தலைவர்கள் தங்கள் கட்சி, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். தேசிய தலைவர்களும் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 3 நாள் பிரசாரமாக இன்று மாலை நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கன்னித்தோப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த 18 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா, ஐ.ஜே.கே. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    அப்போது கூறியதாவது:-

    இந்தியா விடுதலையாகி சுமார் 70 வருடங்கள் ஆகிறது. இந்த 70 வருடங்களில் வேதராண்யத்திற்கு வந்த முதல் பிரதமர் நான்தான். இங்குள்ள மக்களின் உற்சாகத்தை பார்க்கும்போது அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர்கள் என்னையும், இங்கு பா.ஜனதா கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஆசிர்வதிக்க வந்துள்ளார்கள்.

    தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து தேர்தலை சந்தித்து வருகிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரண்டு கட்கிளுக்குத்தான் மாற்றி மாற்றி ஓட்டு போட்டுள்ளீர்கள். அவர்களிடம் இருந்து மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கத்தான் இங்கே வந்திருக்கிறேன்.

    பாரதம் முழுவதும் பா.ஜனதா அரசு இருந்து வருகிறது. எங்களிடன் ஒரே எண்ணம் வளர்ச்சி என்பது ஒன்று மட்டும்தான். எங்களின் எண்ணம் விவசாயிகள் வளர்சசி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, நல்ல சாலை, நல்ல மருத்துவமனை ஆகியவற்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதுதான் பா.ஜனதா அரசின் எண்ணம்.

    ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்வீர்களா? என்று கேட்ட மோடி, ‘‘நீங்கள் சொல்லுங்கள், உங்களது வீடு, கடைகள், மருத்துவமனைகள், கல்விக்கூடம் எதிலாவது 24 மணி நேரம் மின்சாரம் வருதா? என்று கேட்டார்.’’

    பா. ஜனதா ஆளும் மாநிலங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. உங்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கிறதா?. அதுவும் இல்லை.

    உங்களிடம் வளர்ச்சிக்காக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு வசிக்கும் மக்கள் பெரிய பெரிய வண்டி கேட்கவில்லை. ஆடம்பரம் கேட்கவில்லை. நல்ல வீடு, சுத்தமான குடிநீர் மின்சாரம், தரமான பள்ளிக்கூடம், நல்ல மருந்து இதுதான் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

    மீனவர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். என் தொகுதி மீனவர்களுக்கு இ-போட் ஏற்பாடு செய்துள்ளேன். இது சூரிய ஒளியில் ஓடும் படகாகும். இதன்மூலம் எனது தொகுதி மீனவர்கள் ஒரு நாளைக்கு ரூ. 500 மதிப்பிலான டீசலை மிச்சம் பிடிக்கிறார்கள்..

    இன்றைக்கு ஏழை மீனவர்களாக இருக்கட்டும், காய்கறி வியாபரிகளாக இருக்கட்டும், வியாபாரிகளாக இருக்கட்டும். இவர்களுக்கு வங்கிகள் லோன் கொடுக்குமா?. ஆனால், பா.ஜனதா தலைமையிலான அரசு கொண்டுவந்துள்ள முத்ரா வங்கி தி்ட்டம் ஏழைகளுக்கு கடன் வழங்குகிறது. 3 கோடி பேருக்கு 25 லட்சம் வரை கடன் பெற எனது அரசு செய்திருக்கிறது.

    இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஐந்துபேர் விடுதலைக்கு என்னுடைய முழு முயற்சிதான் காரணம் என்று கூறிய மோடி, தமிழகத்தில் ஊழல் அதிகமாகிவிட்டது. ஊழல் உள்ள மாநிலம் வளர்ச்சி பெற முடியாது என்றார்.
    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கன்னித்தோப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசுகிறார்.
    வேதாரண்யம்:

    தமிழக சட்டசபைக்கு வருகிற 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் பிரசாரம் களை கட்டி உள்ளது. தமிழக தலைவர்கள் தங்கள் கட்சி, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். தேசிய தலைவர்களும் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி கடந்த 6-ந் தமிழகம் வந்த அவர் அன்று மாலை ஓசூரிலும், இரவு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார்.

    அதன் பின்னர் 8-ந் தேதி கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். 3-வது கட்டமாக அவர் இன்று (புதன்கிழமை) நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கன்னித்தோப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 3.30 மணிக்கு தஞ்சையில் உள்ள விமான படை தளத்திற்கு வருகிறார். அங்கு கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்கிறார்கள். அதன் பின் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு வேதாரண்யம் தேத்தாக்குடி அல்நூர் பள்ளி எதிரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு வந்தடைகிறார்.

    அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு 4.25 மணிக்கு சென்றடைகிறார். பொதுக்கூட்டத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த 18 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா, ஐ.ஜே.கே. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    கூட்டத்தில் மத்திய மந்திரிகள் பொன். ராதாகிருஷ்ணன், பிரகாஷ் ஜவடேகர், தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவ், அகில இந்திய பிரசார இணை அமைப்பு யெலாளர் சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    பிரசாரத்தை முடித்து கொண்டு 5.10 மணிக்கு அங்கிருந்து கிளம்பும் மோடி மீண்டும் ஹெலிபேடு தளத்துக்கு வருகிறார். 5.20 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு 6.05 மணிக்கு தஞ்சை விமானப்படை தளம் வந்து தனி விமானம் மூலம் கொச்சி புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் வருகையையொட்டி வேதாரண்யம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மத்திய மண்டல ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன், மத்திய சிறப்பு பாதுகாப்பு படை ஏ.ஐ.ஜி. சுமித் சிந்தி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கடற்படை, விமானப்படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதமர் மோடி நாளை வேதாரண்யத்தில் பிரசாரம் செய்கிறார்.
    வேதாரண்யம்:

    பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) மாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் வருகிறார். அத்தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளருக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார்.

    அவர் பேசுவதற்காக தேத்தாக்குடி பகுதியில் உள்ள சோதனை சாவடி எதிரே பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

    பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தையும், ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தையும் மத்திய மண்டல ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன் ஆய்வு செய்தார். மத்திய சிறப்பு பாதுகாப்பு பிரிவு ஏ.ஐ.ஜி. ஸ்மித்சிந்தியும் பார்வையிட்டார்.

    ஹெலிபேடில் தஞ்சையிலிருந்து ஹெலிகாப்டர் வந்து இறங்கி ஒத்திகை பார்க்கப்பட்டது.

    மோடி வருகையை யொட்டி வேதாரண்யத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடலோர பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கண்காணிப்பு வளையத்துக்குள் முத்துப்பேட்டை கடல் பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. கடல் பகுதியில் அந்நிய படகுகள் நடமாட்டம் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் வருகை குறித்து தெரிவிக்க மீனவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலோர கிராமங்களில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் சின்னையன், சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    முத்துப்பேட்டை நகர் பகுதியில் தொடங்கி கடல் முகத்துவாரம் வரையிலும் படகு ரோந்துக்கும், கடல் முகத்துவாரத்தில் இருந்து கோடியக்கரை வரையிலும் படகு மூலமாக கண்காணிக்கவும் கடலோர காவல் படையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதுபோல் ஊர்க்காவல் படையினர் உதவியுடன் மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பும் படகுகள், கரையோரம் ஓய்வெடுக்கும் படகுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மற்றும் அதிகாரிகள் முத்துப்பேட்டை மற்றும் கோடியக்கரை கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
    வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் கரியாப்பட்டினம், செங்காந்தலை, மணக்காடு, கத்தரிப்புலம், கருப்பம்புலம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:–

    முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு பல்வேறு உதவிகளும், மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள், மடிக்கணினி, ஸ்கூல்பேக், இல்லத்தரசிகளுக்கு கிரைண்டர், மிக்ஸி, பேன், 20 கிலோ இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை என ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 யூனிட் வரை இலவச மின்சாரம், முதியோர் உதவித்தொகை 1000–த்திலிருந்து 1,500, பெண்களுக்கு 50 சதவீகிதம் மானிய விலையில் ஸ்கூட்டீ உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வழங்க உள்ளார் என்று பேசினார்.

    வேதாரண்யம் ஒன்றியச் செயலாளர் கிரிதரன், தொகுதிச் செயலாளர் சண்முகராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சிவானந்தம், இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஓளவை பாலசுப்பிரமணி, தலைமை கழகப் பேச்சாளர் வேதை.சிவசண்முகம், பாலைசெல்வராஜ், வாய்மை இனஞ்சேரன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர்.

    ×