என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் பெய்த மழையில் 132 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் கடந்த 2004–ஆம் ஆண்டு சுனாமியின் போது பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்காக தொண்டு நிறுவனங்கள் 371 சுனாமி வீடுகளை கட்டிக் கொடுத்தன. 2005–ம் ஆண்டு ஒவ்வொரு வீடும் 3–லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. அனைத்து வீடுகளிலும் மீனவர்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இந்நிலையிலி இந்த வீடுகளில் 132 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து குடியிருப்பதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. மேலும் உள்ள வீடுகளில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் முன்பக்கமும் வீட்டின் பல பாகமும் இடிந்து விழுந்து வருகிறது. நேற்று வேதாரண்யத்தில் பெய்த 6–செ.மீ மழையில் வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்த ராஜா என்பவர் வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்தது.

    கட்டி முடிக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆன நிலையில் வாழ்வதற்கு தகுதியற்ற நிலையிலுள்ள இந்த வீடுகளை உடனடியாக இடித்து விட்டு அரசு தரமான வீடுகளை கட்டித்தர வேண்டுமென இப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூரில் கல்லூரி மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூரை சேர்ந்தவர் முத்து மாணிக்கம். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு கவுசல்யா (வயது-18) என்ற மகள் உள்ளார். இவர் தகட்டூரில் உள்ள தனது அத்தை வசந்தி என்பவர் வீட்டில் தங்கி வேதாரண்யத்தில் செயல்படும் கல்லூரியில் பி.காம்.படித்து வந்தார்.

    முத்துமாணிக்கம் 2-வது மனைவியுடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கவுசல்யா நேற்று மாலை 3 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தபோது தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    கவுசல்யா எதற்காக தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக வாய்மேடு இன்ஸ்பெக்டர் சிவதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது தகட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் 5 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. கீழ்வேளூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றது. நாகை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை, நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    இதில் நாகை தொகுதியில் அ.தி.மு.க.. கூட்டணி கட்சியான மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளர் தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றார். கடந்த முறை இங்கு அ.தி.முக. வெற்றி பெற்றிருந்தது.

    கீழ்வேளூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மதிவாணன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நாகை மாலி இங்கு வெற்றி பெற்றிருந்தார்.

    வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி. ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறையும் இத்தொகுதியை அ.தி.மு.க.வே வென்றிருந்தது.

    மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. வேட்பாளர் அருட்செல்வன் இங்கு வெற்றி பெற்றிருந்தார்.

    சீர்காழி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாரதி வெற்றி பெற்றார். கடந்த முறை இங்கு அ.தி.மு.க. வேட்பாளர் சக்தி வெற்றி பெற்றிருந்தார்.

    பூம்புகார் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பவுன்ராஜ் வெற்றி பெற்றார். கடந்த முறையும் இவரே இங்கு வென்றிருந்தார்.

    நாகை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது. கீழ்வேளூர் தொகுதியில் மட்டும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், திருவாரூர் ஆகிய 4 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளது. இதில் நன்னிலம் தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றி உள்ளது. அத்தொகுதியில் அமைச்சர் காமராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

    திருவாரூர் தொகுதியில், தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மன்னார்குடியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜாவும், திருத்துறைப்பூண்டியில் தி.மு.க. வேட்பாளர் ஆடலரசனும் வென்றுள்ளனர்.

    கடந்த சட்ட மன்ற தேர்தலில் திருவாரூரில் தி.மு.க தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றார். அதேபோல் மன்னார்குடியிலும் டி.ஆர்.பி. ராஜா வென்று இருந்தார். திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த இந்திய கம்யூனிஸ்டு வெற்றி பெற்று இருந்தது. தற்போது அத் தொகுதியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதியில் தி.மு.க.வும், ஒரு தொகுதியில் அ.தி.மு.க.வும் வென்று உள்ளது.

    வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பாம்பன் – நாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்குமெனவும் இதனால் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் மழையினால் பாதிப்புகள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு, தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், புயல் பாதுகாப்பு மையங்களை தயார்நிலையில் வைக்கவும், பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி, ஊராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால், தற்போது, பைபர் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் 3–ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    டெல்டா மாவட்டத்தில் 3-வது நாளாக தொடர்மழை நாகை மாவட்டத்துக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக இருந்து வந்த நிலையில் கடந்த 4–ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் வெயில் பொதுமக்களை வாட்டி வந்தது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதை தொடர்ந்து டெல்டா மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுகிறது. ஒரத்தநாடு, சாலியமங்கலம் பகுதிகளில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர் வளர்ந்துள்ள நிலையில் தற்போது பெய்த மழையினால் சில இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, பூதலூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருகிறது.

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரியில் நேற்று மதியம் பலத்த மழை பெய்ததால் அங்கு வாக்குச்சாவடி அருகே இருந்த ஒரு தென்னைமரம் வேரோடு சாய்ந்து வாக்குச்சாவடி கூரையின் மீது விழுந்தது. இதில் ஓடுகள் உடைந்து விழுந்ததில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின் அவர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் 1 மணிநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

    திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. திருத்துறைப்பூண்டியில் நேற்று இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது. இன்றும் மழை பெய்து வருகிறது. திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்கிறது.

    நாகை மாவட்டத்துக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 3–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அங்கு கடல் சீற்றமாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, கொள்ளிடம், பொறையாறு, கீவளூர் உள்பட மாவட்டத்தின் பலபகுதிகளிலும் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


    கனமழையால் வாக்காளர்களை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது முதல் கனத்த மழை பெய்தது. இதனால் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. ஆனாலும் சிலர் மழையிலும் வாக்களித்து சென்றனர். மழை காரணமாக ரோடுகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக வேதாரண்யம் வித்யாலம் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு மந்தமாக இருந்தது. வாக்காளர்களை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருந்தனர்.

    வேதாரண்யம் தாயுமானவர் வித்யாலயம் பள்ளி வாக்குச்சாவடி முன் மழை நீர் தேங்கி நின்றது.அதில் நடந்து சென்று வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    சீர்காழி அருகே காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற புதுவை அரசு பஸ் மோதிய விபத்தில் பா.ஜனதா வேட்பாளர் காயம் அடைந்தார்
    சீர்காழி :

    சீர்காழி அருகே புத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் இளவழகன்(55). இவர் சீர்காழி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    இவர் நேற்று மதியம் சீர்காழி அருகே புத்தூர் மெயின் ரோட்டில் பிரசார வாகனத்தில் வந்தபோது காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற புதுவை அரசு பஸ் மோதியது.இதில் இளவழகன் மற்றும் வேனில் பயணம் செய்த தென்னலகுடி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ்(35) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை கட்சியினர் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில நிர்வாகி சின்னப்பண்ணை சீனிவாசன், மாவட்ட நிர்வாகிகள் குருமூர்த்தி, வெற்றிலை முருகன், அசோகன் உள்ளிட்ட ஏராளமானோர் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
    ×