என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மகாராஜபுரம் மேல்பாதி மெயின்ரோட்டை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் முத்துகுமரன்(வயது24). இவர் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் அதே ஊரை சேர்ந்த வீரப்பன் மகன் கஜேந்திரன் (22) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் இருவரும் நேற்று இரவு திருத்துறைப்பூண்டியில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது வேலூர் பாலம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலே முத்துகுமரன் இறந்தார். கஜேந்திரன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ், ராஜ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பயிர் காப்பீட்டு தொகை செலுத்த முடியாததால் மனமுடைந்த விவசாயி மயங்கி விழுந்து இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்புத் தேவர் என்கிற ராஜ்குமார் (65). விவசாயி.

    இவருக்கு சொந்தமாக 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் சம்பா பயிர் சாகுபடி செய்து இருந்தார். போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கியது.

    பயிர்களுக்கு காப்பீடு செய்தால் நிவாரணம் கிடைக்கும் என்று நினைத்த ராஜ்குமார் உறவினர்கள், நண்பர்களிடம் கடன் கேட்டு இருந்தார். ஆனால் யாரும் கடன் கொடுக்கவில்லை.

    இதனால் மன வேதனையில் இருந்தார். வீட்டில் இருந்த அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த விவசாயி ராஜ்குமாருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    டெல்டா பகுதியில் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற்கொலை , மயங்கி விழுந்து இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகை அருகே அரசு பஸ் வயலில் கவிழ்ந்து மாணவர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே உள்ள அந்தக்குடியில் இருந்து நாகைக்கு இன்று காலை அரசு டவுன் பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை மருங்கூரை சேர்ந்த ஸ்டாலின் ஓட்டி வந்தார். காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் இதில் பயணம் செய்தனர்.

    இந்த பஸ் பொரவச்சேரி என்ற இடத்தில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அருகில் இருந்த வயலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பொரவாச்சேரியை சேர்ந்த தமிழ் செல்வன் மகன் ஆகாஷ் (17) பலியானார். இவர் பிளஸ்- 2 மாணவர். நாகையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.காலை பள்ளிக்கு வரும் போது விபத்தில் சிக்கி பலியாகி விட்டார்.

    பயணிகள் 40 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் மாணவ- மாணவிகள் ஆவார்கள். அவர்கள் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம் அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் கத்தரிப்புலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கத்தரிப்புலம் தங்கம் (என்கிற) முனியப்பன் (61) என்பவரது வீட்டிற்கு அருகேயுள்ள தோப்பில் சிலர் காசு வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    இதைப்பார்தத போலீசார் அங்கு சென்று கத்தரிப்புலத்தைச் சேர்ந்த முனியப்பன் (61), சரண்ராஜ் (28), ரத்தீஷ் (38), தமிழ்செல்வம் (55) ஆகிய நால்வரையும் பிடித்து சூதாட்ட களத்தில் கிடந்த ரூ.200-ஐ பறிமுதல் செய்தும், வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    வேதாரண்யம் அருகே கார் மோதி வாலிபர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சப்பன். இவரது மகன் சேகர் (23). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரியாப்பட்டினம்- வேதாரண்யம் சாலையில் செண்பகராயநல்லூர் வளைவு அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வேதாரண்யம் பகுதியிலிருந்து வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சேகர் படுகாயமடைந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

    புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    சம்பா பயிர் கருகியதால் வயலில் சுருண்டு விழுந்து விவசாயி இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அழகிய நத்தத்தை சேர்ந்தவர் நடராஜன் (62). இவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 3 ஏக்கரில் சம்பா நடவும், 4 ஏக்கரில் நேரடி விதைப்பும் செய்திருந்தார்.

    காவிரியில் தண்ணீர் வராததால் நேரடி விதைப்பு முளைக்காமல் வீணாகி விட்டது. நடவு செய்த 3 ஏக்கரில் டீசல் என்ஜின் மூலம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார்.

    ஆனால் தினந்தோறும் டீசல் வாங்குவதற்கு போதிய பணம் இல்லை. இதனால் தண்ணீரின்றி ஒரு மாத பயிரும் கருகியது.

    இந்த நிலையில் வயலுக்கு சென்ற நடராஜன் பயிர்கள் கருகியதை கண்டு அதிர்ச்சியில் சுருண்டு விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் நடராஜன் இறந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இறந்த நடராஜனுக்கு மாலதி என்ற மனைவியும், பாலசுந்தரம் என்ற மகனும், அனுசுயா என்ற மகளும் உள்ளனர். நடராஜன் குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

    தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பயிர்கள் கருகியதால் இதுவரை தற்கொலை, மயங்கி விழுந்து சாவு என 17 விவசாயிகள் இறந்துள்ளனர்.

    வேதாரண்யம் அருகே சம்பா பயிர் கருகியதால் பெண் விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    தலைஞாயிறு:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு அடுத்துள்ள நீர் மூளை கிராமத்தை சேர்ந்தவர் செவந்து. இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி காத்தாயி. 2-வது மனைவி ஜெகதாம்பாள் (65). 3-வது மனைவி ஜானகி.

    செவந்துவும் அவரது முதல் மனைவி காத்தாயியும் இறந்து விட்டனர். ஜெகதாம்பாளுக்கு குழந்தை இல்லை. இதனால் ஜானகியின் மகன் ரமேஷ் வீட்டில் தங்கி இருந்தார்.

    ஜெகதாம்பாள் தனக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். தற்போது தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கியது.

    இது பற்றி அவர் புலம்பிக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    டெல்டா மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் இதுவரை தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணம் அடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 பெண் விவசாயிகள் அடங்குவர்.

    வேதாரண்யம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அய்யப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே தேத்தாகுடி தெற்கில் உள்ள ஒரு வியாபார நிறுவன குடோனுக்கு நாகையிலிருந்து மினி லாரியில் ஹார்லிக்ஸ் பெட்டிகள் வந்தது. அதை குடோன் அருகே நிறுத்தி லோடு மேன் நாகப்பட்டினம் மாங்கொட்டைசுவாமி சன்னதி தெருவைச் சேர்ந்த வேணுகோபால் (38) என்பவர் இறக்கி கொண்டிருந்தார்.

    அப்போது வேதாரண்யத்திலிருந்து அதிவேகமாக சென்ற வாகனம் மினி லாரியின் பின் கதவில் மோதியது. இதில் வேணுகோபால் படுகாயமடைந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவதாஸ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் லெனின் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இறந்த வேணுகோபால் சபரிமலை செல்ல மாலை அணிந்திருந்தார். மோதிய வாகனத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

    டெல்டா மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். விவசாயிகள் தற்கொலையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
    நாகப்பட்டினம்:

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின், நேற்று டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட 10 விவசாயிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தி.மு.க. சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

    இதேபோல், நாகை மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஜெயபால் வீட்டிற்கு சென்ற மு.க.ஸ்டாலின் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினரிடம் ரூ.1 லட்சம் நிதியுதவியும் வழங்கினார். பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் விவசாயப் பெருங்குடி மக்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்வது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. அப்படி இறந்திருக்கக்கூடிய விவசாயிகளின் குடும்பங்களை அரசின் சார்பில் யாரும் சந்தித்து உதவிகளை செய்யாமலும், ஆறுதல் தெரிவிக்காமலும் இருப்பது வேதனைக்குரியது. ஆகவே, தி.மு.க. சார்பில், தலைவர் கருணாநிதியின் ஆணையை ஏற்று, இறந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, அந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

    இப்படி இறந்து போயிருக்கக்கூடிய அந்த விவசாயிகள், உடல் நலிவுற்றதால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, அந்தந்த மாவட்ட உயர் அதிகாரிகள் தெரிவிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையை அந்த அதிகாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    ஏற்கனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய விவசாய நிலங்களை எல்லாம் பார்வையிட வருகை தந்த மத்திய குழுவினரை, அரசு அதிகாரிகள் சந்தித்து உரிய கோரிக்கையை முன்வைக்கவில்லை என்பதோடு, விவசாயிகள் அந்த குழுவினரிடம் தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளையே சொல்ல முடியாமல் போயிருக்கிறது. அதுமட்டுமல்ல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் இந்த அரசு உரிய முயற்சிகளை எடுக்கவில்லை.

    அதனால் தான் தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி சில தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் வழங்கிட வேண்டும். அவர்கள் வங்கிகளில் பெற்றிருக்கக்கூடிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும்.

    குறிப்பாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி, தீர்மான நகலை நானே நேரடியாக கொண்டு சென்று, முதல்-அமைச்சரின் முழு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். ஆனால், அதன் மீது எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை என்பது உள்ளபடியே வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

    எனவே, இனியாவது இந்த அரசு விழித்துக்கொண்டு, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- இறந்த விவசாயிகள் எல்லாம் சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்களே?

    பதில்:- அரசு அதிகாரிகள் இன்றைய ஆட்சியின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இப்படி செய்து கொண்டுள்ளனர். இது இறந்த விவசாயிகளின் இறப்பையே கொச்சைப்படுத்துவதாக உள்ளது. ஆகவே, இனியாவது அதையெல்லாம் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

    கேள்வி:- ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினை எதிர்த்து பாராளுமன்றத்தை முடக்க வேண்டும் என்று சிலர் சொல்வது குறித்து தி.மு.க. என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது?.

    பதில்:- ஏற்கனவே எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூடி, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சில போராட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ரூ.500,1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்புச் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து மயிலாடுதுறையில் தி.மு.க.வினர் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

    மயிலாடுதுறை:

    ரூ.500,1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்புச் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கும் மாநில அரசைக் கண்டித்தும் மயிலாடுதுறையில் தி.மு.க.வினர் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

    இந்நிழ்ச்சிக்கு, கட்சியின் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் நிவேதா எம்.முருகன் தலைமை வகித்தார். நகர செயலாளர் என்.குண்டாமணி(எ)செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    கிட்டப்பா அங்காடி முன்பு மனிதச் சங்கிலிப் போராட்டம் தொடங்கி மணி கூண்டிலிருந்து கூறைநாடு வரை நீடித்தது. நிகழ்ச்சியில், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் எம்.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.ஜெக.வீரபாண்டியன், ஆர்.அருள் செல்வன், குத்தாலம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் பணியின்போது போதையில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கண்ணதாசன் (54). இவர் கடந்த 17-ந் தேதி இரவு பணியில் இருந்தார். அவருடன் 2 ஊர்காவல் படையினரும் பணியில் இருந்துள்ளனர். அப்போது கண்ணதாசன் மது குடித்துவிட்டு பணியிலிருந்த 2 ஊர் காவல் படையினரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    தகவலறிந்த வேதாரண்யம் சரக டி.எஸ்.பி. பாலு அறிவுரையின்படி குடிபோதையிலிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ அறிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு டி.எஸ்.பி. அனுப்பி வைத்தார். அதில் கண்ணதாசன் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவிட்டார். இந்த அதிரடி நடவடிக்கை போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குத்தாலம் அருகே கணவர் திடீரென மாயமானது குறித்து அரவது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    குத்தாலம்:

    குத்தாலம் அருகே பேராவூரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் மகன் சுந்தர் (வயது24). அதே தெருவை சேர்ந்தவர் சிவப்ரியா(20). இருவரும் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு குத்தாலத்தில் உள்ள இஸ்மாயில் காலனியில் குடியிருந்து வந்தனர். இந்லையில் கடந்த 12-ந்தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற சுந்தர் பின்னர் வீடு திரும்பவில்லையாம்.

    கணவரை எங்கு தேடியும் கிடைக்காததால் சிவப்ரியா இதுகுறித்து குத்தாலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சுந்தரை தேடிவருகிறார்.

    ×