என் மலர்
செய்திகள்

நாகை அருகே அரசு பஸ் வயலில் கவிழ்ந்து மாணவர் பலி: 40 பேர் படுகாயம்
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள அந்தக்குடியில் இருந்து நாகைக்கு இன்று காலை அரசு டவுன் பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை மருங்கூரை சேர்ந்த ஸ்டாலின் ஓட்டி வந்தார். காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் இதில் பயணம் செய்தனர்.
இந்த பஸ் பொரவச்சேரி என்ற இடத்தில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அருகில் இருந்த வயலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பொரவாச்சேரியை சேர்ந்த தமிழ் செல்வன் மகன் ஆகாஷ் (17) பலியானார். இவர் பிளஸ்- 2 மாணவர். நாகையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.காலை பள்ளிக்கு வரும் போது விபத்தில் சிக்கி பலியாகி விட்டார்.
பயணிகள் 40 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் மாணவ- மாணவிகள் ஆவார்கள். அவர்கள் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.