என் மலர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை, டிச.6-
நாகை மாவட்டம் மயிலாடுதுறை லால்பகதூர் நகரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 65) அ.தி.மு.க. தொண்டர். இவர் நேற்று மதியம் டி.வி செய்தியை பார்த்து கொண்டு இருந்தார். அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலை கேட்டதும் அவர் மிகுந்த வேதனை அடைந்தார்.
சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். சிவப்பிரகாரத்தின் மகன் செந்தமிழன் அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று மாலை மரணமடைந்தார் என்ற தகவல் பரவியதால் மயிலாடுதுறையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் கடைவீதி வெறிச்சோடியது. பஸ்கள் அனைத்து திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
பலர் அருகில் உள்ள தங்களது ஊருக்கு நடந்தே சென்றனர். நீண்ட தூரபயண மேற்கொள்ள வேண்டிய பயணிகள் தனியார், அரசு பஸ்கள் இயக்கப்படாததால் ரெயில் நிலையம் சென்று ரெயில்களில் பயணம் மேற்கொண்டனர். இதன் காரணமாக ரெயில்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் நிரம்பி வழிந்தது.
முதியவர்கள், பெண்கள் கூட்ட நெரிசல் காரணமாக மிகவும் சிரமப்பட்டனர் மயிலாடுதுறையில் இன்று காலையும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருநதன. பெட்ரோல் பங்குகள் செயல்படாததால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன் புலம் -3 பஞ்சாயத்து சிங்கன் குத்தகை பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (77). அ.தி.மு.க. உறுப்பினர்.
ஜெயலலிதா உடல் நலம் குறித்து அறிந்த அவர் தன் மனைவி பொன்னம்மாளிடம் அம்மாவே இல்லை. நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கவலையுடன் கூறிக் கொண்டு இருந்துள்ளார்.
மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் காளியப்பன் வீட்டுக்கு வெளியே சென்று பூச்சி கொல்லி மருந்தை தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்து இறந்தார்.காளியப்பனுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு காரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன். இவரது மனைவி பார்வதி (55). எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் தீவிர தொண்டர். இவர் நேற்று மாலை டி.வி.பார்த்து கொண்டிருந்த போது முதல்-அமைச்சர் உடல் நலம் குறித்து அறிந்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.
அவரது வீட்டிற்கு அ.தி.மு.க. பிரமுகர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சை மாவட்டம் மேல மருத்துவக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது59). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்துள்ளார். அப்போது ஜெயராமன் தனது நண்பரின் பக்கத்து வீட்டை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளாள். அதைதொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கடந்த மே மாதம் 3-ந்தேதி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயராமனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நாகை மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் அமிர்பீவி ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வசுந்தரி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக ஜெயராமனுக்கு 5 ஆண்டுசிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், இதை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
வங்கக்கடலில் உருவான நாடா புயல் நேற்று காலை கரையை கடந்தது. இதனால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. நாகை மீனவர்கள் கடந்த 30-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதை தொடர்ந்து மீனவர்கள் தங்களது படகுகளை நாகை கடுவையாற்றிலும், புதிய மீன்பிடி துறைமுகத்திலும் நிறுத்தி வைத்துள்ளனர். நாகை மீனவர்கள் இன்று 4-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை நாகை கடுவையாற்று கரையில் வரிசையாக நிறுத்தி மீன்பிடி வலைகளை சரி செய்யும் பணியிலும், புதிய வலைகள் பின்னும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை முதல் நாகை பகுதிகளில் மழை பெய்யவில்லை. நேற்றுமுன்தினம் நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. பின்னர் மதியம் 5-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. இந்தநிலையில் புயல் வலுவடைந்ததால் மாலை 3-எண் கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று காலை புயல் கரையை கடந்ததால் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.
புயல் காரணமாக நடுக்கடலில் தத்தளித்த நாகை மீனவர்களை இலங்கை மீனவர்கள் மீட்டனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த நடராஜன், சங்கர், செல்வம் உள்பட 5 பேர் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது நடா புயல் காரணமாக கடலில் தத்தளித்தனர். இந்த நிலையில் அவர்களது படகின் என்ஜின் பழுதானது.
அவர்கள் இலங்கை கடல் பகுதிக்கு சென்றனர். அப்பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் நாகை மீனவர்கள் 5 பேரையும் மீட்டு இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
அவர்களிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.
கோடியக்கரையில் இருந்து 22 படகில் மீன் பிடிக்க சென்ற 95 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்கள் புயல் காரணமாக நடுக்கடலில் படகை நங்கூரம் போட்டு நிறுத்தி உள்ளதாகவும் விரைவில் கரைக்கு திரும்ப உள்ளதாகவும் அக்கரைபேட்டை மீனவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனவே மீனவ குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வங்க கடலில் உருவான நடா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் நடா புயல் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
புயல் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பலத்த மழை பெய்தது. நேற்று இரவும் மழை நீடித்தது. காற்றும் வீசியது.இன்று காலை தூறல் அடித்தது. உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
அவர்களில் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாகையில் இன்று காலை தூறல் அடித்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
திருவாரூர் மாவட்டத்திலும் இன்று மழை பெய்தது. திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப் பூண்டி, வலங்கைமான், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
தஞ்சை மாவட்டத்திலும் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்தது. கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, அதிராம் பட்டினம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
சீர்காழி:
சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம் அருகே ஜனநாயக தொழிற்சங்க மையம் சார்பில் மாநில துணைத்தலைவர் என்.குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ சங்க நாகை மாவட்ட செயலாளர் விஜயக்குமார், மாவட்ட துணை தலைவர் சேட்டு, சீர்காழி ஆட்டோ சங்க பொறுப்பாளர்கள் முருகேசன், சரவணன், ராஜா, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கரும்பு விவசாய சங்க தலைவர் இமயவரம்பன், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை மாவட்டகுழு இளங்கோவன், சி.பி.ஐ.ஒன்றிய செயலாளர் செல்லப்பா, தொழிங்சங்க கவுரவத்தலைவர் மா.ஈளவளவன், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கை கவன ஈர்ப்பு உரையாற்றினர்.
நாகை மாவட்டம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பர்மிட் முறையை உடனே நடைமுறைப் படுத்தவேண்டும், ஆட்டோ பயண அனுமதியை மாவட்ட முழுமைக்கும் உறுதிப்படுத்த வேண்டும்,கொள்ளிடம் கடைவீதியில் மக்கள் பயன்பெறும் வகையில் ஆட்டோ நிறுத்தம் செய்ய அனுமதியும்,பாதுகாப்பும் வழங்கவேண்டும், ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் அனைவரையும் நலவாரிய உறுப்பினர்களாக அறிவிக்கவேண்டும், அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும் விண்ணப்பபடிவங்களை தமிழிலேயே வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டன.
முடிவில் ஆட்டோ ஓட்டுனர் எம்.பிரபாகரன் நன்றி கூறினார்.
வங்க கடலில் உருவாகி உள்ள நடா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளது.
இம்மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மைக்கென 5 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அளவில், தாலுகா அளவில், வட்ட அளவில் மற்றும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழுக்களானது வட கிழக்கு பருவமழை காலங்களில் மக்களுக்கு எவ்வித பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் பல துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் துணை தாசில்தார் நிலையிலான அலுவலர்கள் அடங்கிய 31 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 40 பேர் நாகை மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
அவசர நடவடிக்கைகள் தேவைப்படும் போது இந்த மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார்கள். 92 படகுகள் 4 மிதவை கப்பல்கள், மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளன.
மாவட்டத்தில் 218 இடங்கள் அதிகமாக பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டு அங்கு பொது மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேவையான மின் வசதியும், தேவையான இடங்களில் மாற்றுப்பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. 523 கிராமங்களிலும் பேரிடர் மேலாண்மை குழு, கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது.
மின்சார துறையினர் அவரவர் பகுதிகளில் மழை காலங்களில் மின் கம்பிகள் அறுந்து விழாத வண்ணமும், தாழ்வாக செல்லா வண்ணமும் பார்த்து கொள்ள வேண்டும்.
அவசர காலத்திற்காக நீர்புகாத பையில் வெதுவெதுப்பான ஆடைகள், அடிப்படை மருந்துகள், விலையுயர்ந்த பொருட்கள், படுக்கைகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொதுமக்கள் வெளியேற நேர்ந்தால் சென்றடையும் முகவரியை உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
பொது மக்கள் அவசர காலத்திற்கு மாநில அவசர கால நடவடிக்கை மையம் - 1070, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம்- 1077 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு நாகை-திருவாரூர் மாவட்ட குடிக்காணி மற்றும் குத்தகை சாகுபடிதாரர்கள் விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. மா.மீனாட்சி சுந்தரம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். சங்க செயலாளர் கலிதீர்த்தான் வரவேற்றார்.
கோவில் மனை குடியிருப்போர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், சங்க மாநில பொதுச்செயலாளர் சிவபுண்ணியம், பொருளாளர் ஏழுமலை, திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ., ஆடலரசன் முன்னாள் எம்.பி. செல்வ ராசு, பட்டணம் மனை குடியிருப்போர் நல சங்க செயலாளர் சங்கரவடிவேலு, சங்க மகளிரணி பூங்கொடி, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றியச் செயலாளர் சிவகுருபாண்டியன், ஆர்.எஸ்.மணி, ம.தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். உண்ணாவிரத்தை இந்திய கம்யூனிஸ்டு தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் முடித்து வைத்து சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தில் கோவில் மனையில் குடியிருக்கும் அனைவருக்கும் முதற்கட்டமாக வீட்டு மனை பட்டாவும், படிப்படியாக சாகுபடி நிலங்களுக்கு நிரந்தர பட்டாவும் வழங்கவும், பட்டாயின்றி குடியிருப்போருக்கு மின் இணைப்பு உடன் வழங்கவும், அறநிலையத்துறை புதிதாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் குடிக்காணி குத்தகை நிலங்களுக்கு மனைப்பகுதி வாடகை முறை, நன்கொடை முறைகள் ரத்து செய்து வழக்கம் போல் நிலவரி வசூல் செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.
முடிவில் சங்க பொருளாளர் அருள்ஜோதி நன்றி கூறினார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த புதுப்பட்டினம் அருகே உள்ள மடவாமேடு கடற்கரை பகுதியில் இன்று காலை 15 வயது மதிக்கத்தக்க சிறுவனின் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி இருந்தது.
இதனை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசாருக்கும், கடலோர காவல்படைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த சிறுவன் இறந்து 4 அல்லது 5 நாட்கள் இருக்கும் என கூறப்படுகிறது. உடலை மீன்கள் கொத்திதின்றிருப்பது தெரியவந்தது. அவனது உடலை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த அந்த சிறுவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன்? கொலை செய்யப்பட்டானா? அல்லது தற்கொலை செய்து கொண்டானா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள கீழையூரை சேர்ந்தவர் மாரிமுத்து (66) விவசாயி. இவர் தன்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்வதற்காக நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்து போன நிலையில் இந்த ஆண்டு சம்பா கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் ஆற்றில் தண்ணீர் வராததாலும், பருவமழை கைவிட்டதாலும் பயிர்கள் முளையிலே கருகின.
இதனால் கடந்த சில நாட்களாக மாரிமுத்து மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் தனது இளம் வயது முதல் நண்பராய் இருந்து பயிர் கருகியதால் இறந்த ராஜ் குமாரின் இறுதி சடங்கிற்கு சென்றார்.
பின்னர் வீடு திரும்பிய அவர் மயங்கி விழுந்து இறந்தார். பயிர் கருகியதால் அடுத்தடுத்து 2 விவசாயிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இறந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும்.
இந்த புயல் வருகிற 2-ந் தேதி சென்னை-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பி வருகிறார்கள்.
நாகை தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
மோடி அரசு கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டிற்கு எதிரான புனித போர் எனக்கூறி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் இந்திய பொருளாதாரம் 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்று விட்டது. 120 கோடி மக்களை கொண்ட இந்திய நாட்டில் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை மறந்து மக்களை பிரதமர் மோடி துன்புறுத்துகிறார்.
இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுகூடி போராடி வெற்றி பெற வேண்டும். புதிய ரூபாய் நோட்டு வினியோகம் செய்ததில் குளறுபடிகள் உள்ளன. இந்த திடீர் அறிவிப்பால் ஏழை, எளிய மக்கள், வர்த்தகர்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தா.பாண்டியன் வந்து கோவில் இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு அதே இடத்தில் நிரந்தரமாக பட்டா வழங்கிடகோரி கோரிக்கை மனுவை கலெக்டர் பழனிசாமியிடம் வழங்கினார்.






