என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சாணிப் பட்டி நாடார்கொட்டாய் பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (வயது 32), மினி லாரி டிரைவர். 

    இந்த நிலையில் இவர் 26ந் தேதி மத்தூரில் இருந்து மினி லாரியில் சாணிப்பட்டி பகுதிக்கு அந்த வழியே அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரும் அவரது மகள் சுஜாதா (32) என்பவரும் இருசக்கர வாகனத்தில்  வந்தனர்.

    அப்போது முன்விரோதம் காரணமாக சத்தியராஜ், நாகராஜை  தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கினார். இதை  தட்டி கேட்ட சுஜாதாவையும் கல்லால் தாக்கினார். இதில் காயம் ஏற்பட்ட சுஜாதா மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

    இதுகுறித்து சுஜாதா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மத்தூர் போலீசார் சத்தியராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    ருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் 2&வது கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் இரண்டாம் கட்டமாக  காவிரி வடக்கு வன உயிரின சரணாலய பகுதிகளிலும், காவிரி சின்னாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ள உரிகம் மற்றும் அஞ்செட்டி வனச் சரகங்களில் 16 பீட்களில் உள்ள காப்புக்காட்டிலும் பறவைகள் கணக் கெடுப்பு பணி, ஓசூர் வனக்கோட்ட   வன உயிரின காப்பாளர் கார்த்திகேயினி தலைமையில் நேற்று நடந்தது.

    இதில், 50-க்கும் மேற்பட்டவன அலுவலர்கள்  வனப் பணியாளர்கள் மற்றும் 50 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியின் போது, தொலை நோக்கு கருவி, காமிரா உள்ளிட்ட கருவிகளை பயன் படுத்தி ஏசியன் பேரடைஸ், பிளை கேட்சர், மயில்கள், புதர் காடைகள், கள்ளிப்புறா, நீலப் பைங்கிளி, சின்னான் கருத்திடு, ஊதாதேன்சிட்டு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை அடையாளம் கண்டு உரிய படிவத்தில் குறிப்பிடப் பட்டது.
    தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் யானைகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச்சரகத்திற்குட்பட்ட திம்மே தொட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரப்பா(வயது 50).

    இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது தோட்டத்தில் ராகி புல்களை போட்டு வைத்திருந்தார். அப்போது அவருடன் ஆடு, மாடுகளும் இருந்துள்ளன. இந்த நிலையில் மாரப்பா இரவில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு பெண் யானை ஒன்று வந்துள்ளது.

    இதையடுத்து சத்தம் கேட்டு அவர் எழுந்து பார்த்தபோது யானை அவரை நோக்கி வந்துள்ளது. இதனால் ஆடு,மாடுகள் மற்றும் தன்னை யானை எதுவும் செய்துவிடக்கூடாது என்று நினைத்த விவசாயி மாரப்பா தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து யானையை நோக்கி சுட்டுள்ளார். இதில் யானைக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து யானை அங்கிருந்து சென்றது. இந்தநிலையில் நேற்று பனை காப்புக்காடு பகுதியில் குண்டடிபட்ட பெண்யானை இறந்து கிடந்தது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் ஜவளகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட வனஅலுவலர் கார்த்திகேயினி, வனச்சரகர் சுகுமார், கால்நடை டாக்டர் பிரகாஷ் வனவர் செல்வராஜ் மற்றும் வனத்துறையினர் சென்று பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது யானையின் நெற்றியில் துப்பாக்கி குண்டு இருந்ததும், சுட்டு கொன்றது விவசாயி மாரப்பா என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து யானையின் உடலை அங்கேயே அடக்கம் செய்தனர்.இதை தொடர்ந்து யானையை சுட்டு கொன்ற விவசாயி மாரப்பாவை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதை தொடர்ந்து மாரப்பாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் கொண்டு அடைத்தனர். தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் யானைகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    எனவே அனுமதியி ல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்களை கண்டறிந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூகஆ ர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி சோக்காடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மேல்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 39).

    இந்த நிலையில் நேற்று இவர் சோக்காடியில் இருந்து கொத்துபள்ளி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக முனியப்பன், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே 3 மாடுகளை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே கங்கசத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 53), விவசாயி.

    இந்த நிலையில் கடந்த 25ந் தேதி இவர் வீடு அருகே கட்டியிருந்த 3 மாடுகளை காணவில்லை. யாரோ மர்ம நபர், மாடுகளை திருடி சென்றது தெரிய வில்லை. இதன் மதிப்பு ரூ.65 ஆயிரம் ஆகும்.

    இதுபற்றி கோவிந்தன், குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்தூரம்மா கோவில் தேரை 2 ஆயிரம் காளைகள் இழுத்து வந்தன.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஒஸ்கூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை ராஜேந்திர சோழன் கட்டியதாக கூறப்படுகிறது.

    இக்கோவிலை திப்புசுல்தான், மைசூர் அரச வம்சத்தினரும் பராமரித்துள்ளனர். மாரியம்மனை இக்கிராம மக்கள், மத்தூரம்மா என்று வழிபடுகின்றனர். மத்தூரம்மா ஒஸ்கூருக்கு மட்டுமல்லாமல் சுற்றியுள்ள 48 கிராமங்களையும் காக்கும் தேவியாக அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவிலில் பங்குனி மாதம் தேர்த் திருவிழா நடை பெறும். விழாவில் ஒஸ்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தேர்கள் அலங்கரிக்கப்பட்டு அதில்  அந்தந்த கிராம தேவதைகள் மத்தூரம்மா தரிசனத்துக்காக எடுத்து வருவது வழக்கம். இதற்காக  ஒவ்வொரு கிராமத்தினரும் போட்டி போட்டு கொண்டு தேரை அமைத்து ஒஸ்கூருக்கு கொண்டு வருவார்கள்.

    இந்த ஆண்டு பங்குனி தேர்த் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. 12 கிராமங்களில் இருந்து பிரமாண்ட தேர்கள் செய்யப்பட்டு ஒஸ்கூருக்கு வந்தன. ஒரு தேருக்கு 200 மாடுகள் வீதம் 12 தேர் ரதத்தை 2000க்கும் மேற்பட்ட காளை மாடுகள் இழுத்து வந்தன. 

    சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் தேரோட்ட நிகழ்ச்சியில் காளைகள் மட்டுமே தேர்களை இழுத்து வந்தன. 

    தேர்களுக்கு பின்னால் பெண்கள், மாவிளக்குகளுடன் ஊர்வலமாக வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர்கள் முடிவில் கோவில் அருகே உள்ள பெரிய மைதானத்தை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபப்ட்டது.

    தேரோட்ட விழாவை முன்னிட்டு ஆனேக்கல்  பகுதியில் உள்ள ரெயில்வே பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. 

    தேரோட்ட விழாவில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வௌ¤நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 விவசாயிகள் பலியா னார்கள்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கமடுகு கிராமத்தை சேர்ந்தவர்கள் அம்சகிரி (வயது 45), ராஜன் (30). விவசாயிகள். 

    இந்த நிலையில் நேற்று மாலை மாணவரன பள்ளியில் இருந்து தங்கள் கிராமத்திற்கு  மோட்டார் சைக்கிளில்சென்று கொண் டிருந்தனர். அப்போது இருவரும்  மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற போது சாலையின் தடுப்பு சுவரில் பலமாக மோதியுள்ளனர். 

    இதில் அம்சகிரி, ராஜன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதில் அம்சகிரி தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் இறந்தார். 

    இதையடுத்து  காய மடைந்து உயிருக்கு போராடி கொண் டிருந்த ராஜனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

    இதையடுத்து இந்த விபத்து  குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வரு கின்றனர்.  

    மோட்டார் சைக்கிளில் சென்ற 2 விவசாயிகள், தடுப்பு சுவரில் மோதி பலியான சம்பவம் வேப்பனப் பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஓசூர் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் புகார் காரணமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் முருகேசன் (வயது 48).

    இவர், தேர்வுநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர் ஊதிய உயர்வு சம்பந்தமான கோப்புகளை அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்வதில் மெத்தனம் காட்டினாராம். 

    மேலும், லஞ்சம் எதிர்பார்த்ததாகவும், ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதாகவும் தெரிகிறது.இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி கல்வி இயக்குனர் நடராஜன், தேற்றுமுருகேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கீழ்வீதி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36), 

    கட்டிடத் தொழி லாளி யான இவருக்கு கோவிந் தம்மாள் (34) என்கிற மனைவியும் அர்சியா (8), சுபிஷா (5),  என்கிற2 மகள் களும்,  பிரதீஸ்வரன் 3 என்ற ஒரு மகனும் உள்ளனர். 

    இந்நிலையில் நேற்று சக்தி வேலுக்கும் அவரது மனைவி கோவிந்தம்மாளுக்கும்  குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    இதில் மன விரக்தியில் இருந்த சக்திவேல் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
    இது குறித்து அக்கம் பக்கத்தினர் மத்தூர்  போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சக்திவேலின் உடலை கைபற்றி மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைக் கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
    கிருஷ்ணகிரியில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, அகில இந்திய கிராமிய அஞ்சல்ஊழியர் சங்கம் சார்பில், அதிகாரிகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். 

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் கோவிந்தன் தலைமைதாங்கினார். கோட்ட செயலாளர் சாந்தமூர்த்தி, கோட்ட பொருளாளர் ராஜப்பா,சங்க தணிக்கையாளர் லோகநாதன், உதவி செயலாளர்கள் திருமால், சக்திவேல்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், தகாத வார்த்தைகளை பேசிவரும் அதிகாரிகளை  கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    ஓசூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் புரோக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலபள்ளி பகுதியை சேர்ந்தவர் ஹரிநாத். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தங்களுக்கு சொந்தமான நிலத்தை அளந்து, உட்பிரிவு செய்து தர, அந்த பகுதி சர்வேயர் வடிவேல் என்பவரை அணுகினார். 

    இந்த பணிக்காக, வடிவேல் தனது புரோக்கரான தமீஸ் என்பவர் மூலம் ரூ.50 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர், ரூ.30 ஆயிரத்தை  ஹரிநாத் வழங்க சம்மதம் தெரிவித்தார். 

    மேலும் இது குறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கும் அவர் தகவல் தெரிவித்தார். போலீசாரின் ஆலோ சனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, நேற்று, ஓசூர் பாகலூர் சாலையில், ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள வடிவேலின் வீட்டுக்கு ஹரிநாத் கொண்டு சென்றார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் அவரை பின் தொடர்ந்தனர்.

    இந்த நிலையில், வடிவேல் வீட்டுக்குள் சென்ற ஹரிநாத், பணத்தை அவரிடம் வழங்கினார். அதை வடிவேல் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுல்தான் தலைமையிலான  போலீசார், வடிவேலை கையும், களவுமாக பிடித்து லஞ்சப்பணத்தை கைப்பற்றி அவரை கைது செய்தனர். 

    மேலும் இரவு வரை 8 மணி வரை அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், அங்கு வடிவேலுடன் இருந்த புரோக்கர் தமீசும் கைது செய்யப் பட்டார். 

    லஞ்சம் வாங்கி சர்வேயர், மற்றும் புரோக்கர் கைதான சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சான்றிதழில் திருத்தம் செய்து 31 ஆண்டுகளாக வேலை பார்த்த தலைமை ஆசிரியையை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்த சோபனூர் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 56).  இவர் கடந்த, 1991ம் ஆண்டு ஜூன் மாதம் காவேரிப்பட்டணம் அடுத்த சாத்தனூர் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பிறகு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று பாறையூர், திம்மேநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றினார். 

    இவர் பணிப்பதிவேட்டில், 10, பிளஸ்2, ஆசிரியர் பட்டயப்பயிற்சி சான்றிதழ்களை முன்னிலைபடுத்தி பதிவுசெய்ய பலமுறை அறிவுறுத்தியும் இவர் ஒத்துழைப்பு அளிக்க வில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணகிரி அரசுத் தேர்வுகள் இயக்குனர் ராகினி, காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலர் சபிக்ஜானுக்கு, சுமதி, 10ம் வகுப்பு சான்றிதழ் நகலில் போலியாக திருத்தம் செய்து பணியில் சேர்ந்துள்ளது கண்டு பிடிக்கப்பட் டுள்ளதாகவும், துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யுமாறும் கடந்த, 10ந் தேதி கடிதம் அனுப்பினார். 

    இதையடுத்து இந்த தகவலை வட்டாரக்கல்வி அலுவலர் சபிக்ஜான், மாவட்ட கல்வி  அலுவலர் பொன்முடிக்கு கடந்த, 14ந் தேதி கடிதமாக அனுப்பினார். இந்த நிலையில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிய சுமதி உரிய விளக்கம் அளிக்காமலும், கடந்த பிப்ரவரி 3ந் தேதி முதல் தொடர் மருத்துவ விடுப்பும் எடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, சுமதியை தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தர விட்டார். மேலும், கடந்த 31 வருடங்களாக போலி ஆவணத்தை சமர்பித்து அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய சுமதி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×