என் மலர்
கிருஷ்ணகிரி
- ரூ.11 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையம்.
- ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, பணிகளை தொடங்கிவைத்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் ஒன்றியத்தில் தாவரக்கரை ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், கண்டகானப்பள்ளி ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமிபூஜை செய்து ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, பணிகளை தொடங்கிவைத்தார்.
மேலும் கண்ட கானப்பள்ளி ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு தொடங்கிவைத்தார்.
மாவட்ட கவுன்சிலர் பூதட்டியப்பா, ஒன்றிய கவுன்சிலர்கள் நாகராஜ், பிரசாந்த், ஊராட்சி மன்றத் தலைவர் பார்வதம்மா, முன்னாள் கவுன்சிலர் வீரப்பா உட்பட பலர் கலந்துக்கொண்டார்கள்.
- அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
- ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதை தீவிரப்படுத்துவதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுவதாகவும் இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து தமிழக அரசு உத்தரவுப்படி, ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அதிகாரிகளுடன் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்கள்.
கிருஷ்ணகிரி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சேலம் உட்கோட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார்.இதில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களை சேர்ந்த வட்ட வழங்கல் அலுவலர்கள், பறக்கும் படை தாசில்தார்கள், ஆகியோருடன் உண வுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு முறைகேடாக ரேஷன் அரிசி கடத்தும் குற்றவாளிகளை கண்காணிப்பது குறித்தும், ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதை தீவிரப்படுத்துவதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தன் (கிருஷ்ணகிரி), சதீஷ் (வேலூர்), கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, பறக்கும் படை தாசில்தார் கவாஸ்கர், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கி.மு. 2000 ஆண்டிலேயே தொடங்கிவிட்டன என்பதை தெரிவிக்கும் வகையில், புதிய கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியம் காணப்படும்.
- ஐகுந்தம் தேன்மலையின் வடமேற்கு பகுதியில் ஒரு குகையில் புதிய கற்கால செங்காவி ஓவியம் கண்டறியப்பட்டது.
கிருஷ்ணகிரி,
தென்னிந்தியாவில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பபடும் பெருங்கற்படைகள், இரும்புக் காலத்தை சேர்ந்தவை எனக்கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அகழாய்வு நடந்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் பகுதியில், இந்த கலாச்சாரக் கூறுகளான கருப்பு சிவப்பு பானை வகை மற்றும் பெருங்கற்படைகள் புதிய கற்காலத்திலேயே தொடங்கி விட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இது குறித்து கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சி யர் கோவிந்தராஜ் கூறுவதாவது:-
ஐகுந்தம் தேன்மலையின் வடமேற்கு பகுதியில் ஒரு குகையில் புதிய கற்கால செங்காவி ஓவியம் கண்டறியப்பட்டது. இது பெருக்கல்குறி போன்ற உடலமைப்பைக் கொண்ட மனித உருவம். இரும்பு கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் பெருங்கற்படை சின்னங்கள் மேலும் ஆயிரம் ஆண்டுகள் அதாவது கி.மு. 2000 ஆண்டிலேயே தொடங்கிவிட்டன என்பதை தெரிவிக்கும் வகையில், புதிய கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியம் காணப்படும் பாறைக்கருகிலேயே ஒரு கல்திட்டை கண்டறி யப்பட்டுள்ளது. இந்த கல்திட்டை வழக்கமான கல்திட்டை போல் இல்லாமல் மிகவும் முற்பட்டதாய் உள்ளது. இதன் காலத்தை உறுதி செய்யும் விதமாக புதிய கற்கால செஞ்சாந்து ஓவியமும் மிக அருகிலேயே காணப்படுகிறது. எனவே, மயிலாடும்பாறை அகழாய்வின் முடிவுகளும், மேற்பரப்பில் காணப்படும் செஞ்சாந்து ஓவியம் மற்றும் இந்த கல்திட்டையும், பெருங்கற்படை காலத்தின் தொடக்கம் கி.மு. 1000 என்பதிலிருந்து கி.மு. 2000 என்பதை உறுதிப்படுத்துகின்றன. அதாவது புதிய கற்காலத்திலேயே கருப்பு சிவப்பு பானை வகையும் பெருங்கற்படைகளும் தோன்றத் தொடங்கிவிட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
- 30 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- லாரியில் இருந்த 7 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
குருபரப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே ஏக்கல்நத்தம் மலைகிராமம் உள்ளது. மலைமேல் வசிக்கும் மல்லப்பா என்பவர் வீடு கட்டி வருகிறார். அவரது வீட்டிற்கு கான்கிரீட் போடுவதற்காக கிருஷ்ணகிரி பெத்ததா ளாப்பள்ளி பகுதியிலிருந்து லாரியில் கான்கிரீட் கலவை கலக்கும் எந்திரத்துடன் அதே பகுதியை சேர்ந்த பூங்கொடி (வயது 23), இந்திராணி (45), ஜோதி (30), லோகநாதன் (23), கோபி (40), ஐ.பி.கானப்பள்ளி சென்னப்பன் (29) ஆகியோர் சென்றனர்.
லாரியை பெத்தா ளாப்பள்ளியை சேர்ந்த அஜித்குமார் (23) ஓட்டி னார். ஏக்கல்நத்தம் மலைப்பாதையில் எந்திரத்துடன் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்று சாலையோரம் உள்ள 30 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரியில் இருந்த, 7 பேரும் படுகாயமடைந்த நிலையில் அவர்களது சத்தத்தை கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குடும்ப தகராறில் உயிரை மாய்த்த பரிதாபம்.
- திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள மாமரத்து கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி பிரியா (வயது 25).
இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று இதேபோல ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பிரியா அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
- தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் எறியுள்ளான்.
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சாந்தன் உயிரிழந்தான்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரகம் பாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திம்மராயசாமி. இவரது மகன் சாந்தன் (வயது 12). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 12-ந்தேதி அன்று தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் எறியுள்ளான். எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தான்.
இதில் படுகாயமடைந்த சாந்தனை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தன் உயிரிழந்தான். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது புகார்.
- போலீசார் 2 பெண்களையும் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தனிப்பாறை பகுதியைசேர்ந்த பிளஸ்- 2 படித்துவிட்டு வீட்டில் இருந்த இளம்பெண் கடந்த 12-ந்தேதி முதல் மாயமானார்.
இது குறித்து அவரது தாய் வாசுகி அனைத்து மகளிர் போலீசில் தந்த புகாரில் சுண்டராம்பட்டியை சேர்ந்த டிரைவர் ஞானமூர்த்தி என்பவர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல செக்கனஹள்ளி பகுதியைசேர்ந்த இளம்பெண் மாயமான சம்பவத்தில் சின்னக்கண்ணு என்ற வாலிபர் மீது மாயமான பெண்ணின் தாய் மாதம்மாள் பர்கூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
- கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளின் முன்பு சாக்கடை கால்வாய்களுக்கு இடையூறு.
- பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் சாக்கடை கால்வாய்களை அகற்றி சுத்தம் செய்து ஆக்கிரமிப்புகளை அங்கிருந்து அகற்றினர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சியில் 8-வது மற்றும் 10-வது வார்டுக்குட்பட்ட சவுடேஸ்வரி கோயில் தெருவில், கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளின் முன்பு சாக்கடை கால்வாய்க ளுக்கு இடையூறாக வும்,ஆக்கிரமித்தும் கட்டிடங்களை கட்டியி ருப்பதாகவும் அதை உடனடியாக அகற்ற வேண்டுமென்று பேரூராட்சி தலைவர்தேவராஜூக்கு பொதுமக்கள் சார்பில் புகார் சென்றது.
இதையடுத்து பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் நாகேந்திர குமார்,கவுன்சிலர் மாலா நாகராஜ், வச்சலா கமல் ஆகியோர் சென்று பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் சாக்கடை கால்வாய்களை அகற்றி சுத்தம் செய்து ஆக்கிரமிப்புகளை அங்கிருந்து அகற்றினர்.பொதுமக்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய பேரூராட்சி தலைவர் தேவராஜுக்கு அப்பகுதிமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
- அனைத்து பகுதிகளிலும் எல். இ.டி. பல்புகளை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ஓசூரில், பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி அவசர கூட்டம், மாமன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், எதிர்கட்சி தலைவர் நாராயணன், மண்டல தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், புருஷோத்தம ரெட்டி, மற்றும் சிவராமன், மஞ்சுநாத், ஸ்ரீதர் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களும், நிலைக்குழு தலைவர்கள் மாதேஸ்வரன், சென்னீரப்பா மற்றும் யசஷ்வினி மோகன், நாகராஜ், மாரக்கா உள்ளிட்ட தி.மு.க.கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பகுதி தேவைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு விரிவாக பேசினார்கள்.
கூட்டத்தில் பேசிய மேயர் சத்யா, மாநகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் படிப்படியாக திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும். மேலும், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் எல். இ.டி. பல்புகளை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரபட்சமின்றி வார்டு பகுதிகளில் பணிகளுக்கேற்ப நிதி ஒதுக்கப்படுகிறது. ஓசூரில், பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.
தேர்பேட்டையில் உள்ள தெப்பக்குளம், இந்து அறநிலையத்துறையின் கீழ் வருவதால், மாநகராட்சி சார்பில் அதனை சுத்தம் செய்யவோ, தூர்வாரவோ இயலாது. ஓசூர் பஸ் நிலையம் அருகேயுள்ள பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தை இடித்து, ரூ.18 கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்டவும், வசந்த்நகர், எம்.ஜி.ஆர்.மார்க்கெட் மற்றும் பழைய பெங்களூரு சாலையில், பழைய பஸ் நிலைய பகுதியில் மற்றும் எம்.ஜி.ரோட்டில் காந்தி சிலை பின்புறம் உள்ள பழைய நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வணிக வளாகங்களை அமைக்க அரசுக்கு, முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
மழைக்காலத்திற்கு முன்பாகவே, அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மேலும், உறுப்பினர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் விரிவாக விளக்கமளித்து, பேசினார். இந்த கூட்டத்தில், மொத்தம் 154 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- டீ குடிக்க வந்த சசிகுமார், யோகப்பிரியன் ஆகிய 2 பேருக்கும் ரஞ்சித்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- சசிகுமார்,யோகப்பிரியன் 2 பேரையும் கைது செய்தனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள கண்ணம்பட்டியை சேர்ந்தவர். ரஞ்சித்குமார்.
இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அந்த கடைக்கு டீ குடிக்க வந்த சசிகுமார், யோகப்பிரியன் ஆகிய 2 பேருக்கும் ரஞ்சித்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் 2 பேரும் சேர்ந்து ரஞ்சித்குமாரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ரஞ்சித்குமார் தந்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து சசிகுமார்,யோகப்பிரியன் 2 பேரையும் கைது செய்தனர்.
- வகுப்பறையில் மது அருந்துவது, போதைப்பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்கள் மிகவும் வேதனை அளிக்கிறது.
- ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் கொண்டுவரவேண்டும்.
ஓசூர்,
ஓசூரில் பா.ம.க.கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வகுப்பறைகளில் மாணவர்கள், ஆசிரியர்களை திட்டுவதும், தாக்குவதும், மிரட்டுவதும் மற்றும் வகுப்பறையில் மது அருந்துவது, போதைப்பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதே போல், ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் கொண்டுவரவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர், நானும் சட்டமன்றத்தில் பேசினேன். பா.ம.க. சார்பில், போராட்டமும் நடத்தப்பட்டது.
தமிழக அரசு இதனை ஏற்று,இது தொடர்பாக , ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் விசாரணை குழு அமைத்து, 2 வாரத்திற்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ததும், நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பதை பா.ம.க.வரவேற்கிறது.
ஓசூர் பகுதியில் மலர்கள், காய்கறிகள் சாகுபடி அதிகளவில் இருந்து வருகிறது. விவசாயி களுக்கு கூடுதல் மானியம் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினால், உற்பத்தியும் பெருகும், ஏற்றுமதி மேலும் அதி கரிக்கும். ஓசூர் பகுதியில் விமான போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்
புதிதாக ஓசூர் மாந கராட்சி உருவாக்கப்பட்டு, மேயர், மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள னர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஓசூர், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்ததே நான் தான். ஓசூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கானல் நீராகவே உள்ளது. இதனை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
மேகதாது அணை திட்டத்தை, கர்நாடக அரசு செயல்படுத்தக்கூடாது. தேர்தலை மனதில் வைத்து கர்நாடக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கக்கூடாது.பா.ம.க.வை பொறுத்த வரை, தமிழ்நாட்டில் ஆக்க பூர்வமான எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். பேட்டியின்போது மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன், பா.ம.க. வக்கீல்கள் சமூக நீதி பேரவையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் கனல் கதிரவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- படகில் மக்கள் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
- காதல் ஜோடிகள் மரத்தடியில் ஆங்காங்கே அமர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மிக முக்கிய சுற்றுலாமாக கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் பொழுதுபோக்க அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லத்தில் குவிந்தனர்.
பகல், 1 மணி முதல் மக்கள் கூட்டம் அப்பகுதியில் அதிகரித்தது. அவ்வாறு வந்த மக்கள் அணை எதிரிலுள்ள ஆற்றில் குளித்தும், மீன்கள் பிடித்தும் விளையாடினர்.
அதேபோல் அணை பகுதி பூங்காவில் குடும்பத்துடன் வந்து விடுமுறையை கொண்டாடினர்.
இதேபோல் அவதானப் பட்டி சிறுவர் பூங்காவில் குவிந்த பொதுமக்கள், அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் தங்கள் குழந்தைகளை ஆட வைத்து மகிழ்ந்தனர்.
அத்துடன் படகு இல்லத்திற்கும் சென்று படகு சவாரி மேற்கொண்டனர். சிறுவர் பூங்கா வெளியே ஏராளமான கார்கள், டூவீலர்கள் நிறுத்தப் பட்டிருந்தன.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்ப தால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சமைத்து வைத்த உணவுகளை எடுத்து வந்து பூங்காக்களில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
காதல் ஜோடிகள் மரத்தடியில் ஆங்காங்கே அமர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர். நேற்று வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகம் காணமுடிந்தது.
இதேபோல் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் சாவாரி செய்தும் மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் பூங்காக்களில் மீன்சாப்பாடு வாங்கி சாப்பிட்டனர்.






