என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
    • விபத்தில் காரை ஓட்டிச் சென்ற முரளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கார்வேபுரம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 35). இவரும் ஹரீஷ் (32) என்பவரும் காரில், நேற்று மாலை தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி காரில் வந்த கொண்டிருந்தனர்.

    அந்த கார்தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அந்த நேரம் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற முரளி சம்பவ இடத்திலேயே பலியானார். ஹரீஷ் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே ஹரீசும் உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி அணை போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து பலியான முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அதே போல விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளனர்.
    • 2 பள்ளி மாணவிகளையும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பாராட்டினார்.

    கிருஷ்ணகிரி,

    உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜூன் 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரையில் நடைபெற்றது. தேசிய இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் நடந்த போட்டியில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கோ கோ பிரிவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளனர்.

    கைப்பந்து பிரிவில் ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளனர். இந்த 2 பள்ளி மாணவிகளையும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி நேற்று பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், ஓசூர் அரசு மகளிர் பள்ளிதலைமை ஆசிரியர் லதா, பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மாணிக்கம், திவ்யலட்சுமி, மகாலட்சுமி, அசினா பேகம், ஓசூர் பள்ளி உடற்கல்வி ஆசிரியை முருகேஸ்வரி, கைப்பந்து பயிற்சியாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • செல்போன் எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் (மெசேஜ்) வந்தது.
    • முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் இரட்டிப்பு லாபம் பார்க்கலாம்

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் வசித்து வருபவர் தாமஸ் (வயது 35). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், தரக்கட்டுப்பாட்டு பிரிவில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது ஆன்ட்ராய்டு செல்போன் எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் (மெசேஜ்) வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் இரட்டிப்பு லாபம் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணிற்கு தாமஸ் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் ரூ. 8 லட்சத்து 14 ஆயிரத்து 104-ஐ அமெரிக்கா டாராக மாற்றிட முதலீடு செய்தார். ஆனால் அதன் பிறகு அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. மேலும் தாமஸ் முதலீடு செய்த பணமும் திரும்ப வரவில்லை.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாமஸ் இது குறித்து நேற்று கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மனைவி வீட்டிற்கு வராததால் உயிரை மாய்த்த கணவர்.
    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.

    ஒசூர், 

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் கண்ணன் (27). இவர், ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில், உற்பத்தி பிரிவு அதிகரியாக பணி செய்து வந்தார்.

    இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. கண்ணனுக்கு குடிபழக்கம் இருந்ததால், அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீடு சென்றுவிட்டார். கடந்த 2 நாட்களுக்கு கண்ணன், தன் மனைவிக்கு போன் செய்து, தாரமங்கலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு அவரது மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த கண்ணன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒசூர் டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • கழிவுநீர் கால்வாய் குறித்து பேசப்பட்டது.
    • அடிப்படை வசதிகள் ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டது.

    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்அசோகன், ஒன்றிய குழு தலைவர்லாவண்யா ஹேம்நாத், ஒன்றிய குழு துணைத் தலைவர்மாதேஷ்வரன்உறுப்பினர்கள்நாகேஷ்,ரத்னம்மா, யசோதா, லஷ்மம்மா , காஞ்சனாபாக்கியவதி, புஷ்பா,தமிழ்செல்வி மஞ்சுளா, சங்கீதா, லதா, வனீதா, முனிரத்தனா, வரதன்சேட்டு, ஹரிஷ், சீதாராமன், ஜனார்தன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள அடிப்படை வசதிளான குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி பிரச்சனைகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்ட ஏற்பாடுகளை,மேலாளர் முகிலன், உமா சங்கர், மற்றும் பொறியாளர்கள் சுமதி, தீபமணி, ஆகியோர் செய்திருந்தனர்.

    • ரெயில்வே பாலத்தில் இருசக்கர வாகனங்கள் சில நேரங்களில் தண்ணீரில் சிக்கி கொண்டு வாகனங்கள் பழுதடைந்து மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
    • பாலத்தில் இருந்து நீர் வெளிவருவதற்கான வழியை சீரமைக்க வேண்டும்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே உள்ள கெரிகப்பள்ளியில் தென்னக ெரயில்வே தரைபாலம் கடந்த 2013-ம் ஆண்டு சாமல்பட்டி -அரசம்பட்டி செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தரைப்பாலத்தில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக நீர் வெளியேறும் பாதையை தண்ணீர் அடைத்துக் கொண்டதால் தரைத்தளத்தில் அதிக அளவு நீர் வெளியேற முடியாமல் அங்கேயே தேங்கி இருந்தது.

    அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் தத்தளித்து வருகின்றனர். இதனால் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். பலநேரங்களில் அவர்களின் வாகனம் தண்ணீரில் சிக்கி கொண்டு வாகனத்தை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் நடந்து

    செல்லக்கூடிய பொதுமக்கள் அவ்வழியாக கடைக்கவே முடியாத அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வழியாக செல்லும் சாம்பல் பட்டி, அத்தி வீரம்பட்டி, கெரிகப்பள்ளி கிழக்குப்பகுதி, நகரம், வெள்ளையம்பதி இந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் இருசக்கர வாகனத்தில் தான் பயணிக்கின்றனர்.

    தினந்தோறும் இப்பாதையை பல ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றன. இந்த ெரயில்வே பாலத்தில் இருசக்கர வாகனங்கள் சில நேரங்களில் தண்ணீரில் சிக்கி கொண்டு வாகனங்கள் பழுதடைந்து மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

    இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகப்பெரிய அவதிப்படுகின்றனர். பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் இவற்றை சீர்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையிலும் இதுவரை இதற்கு தீர்வு காணப்படவில்லை. இப்பகுதியில் அதிக மழை பொழியும் போதெல்லாம் தரைப்பாலம் கட்டியதிலிருந்தே இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாலத்தில் இருந்து நீர் வெளிவருவதற்கான வழியை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற போதுகட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார்.
    • தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஓசூர், 

    பெங்களூர் பொம்ம சந்திராவை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ஆகாஷ் (19) மற்றும் மாதேவ்புராவை சேர்ந்த சதாசிவம் என்பவரது மகன் சிவரஞ்சன் (29) இருவரும் உறவினர்கள் அவர்.

    இவர்கள் கடந்த 14-ம் தேதி இரவு பெங்களுரில் இருந்து சொந்த ஊரான திருப்பத்தூருக்கு டூவீலரில் சென்றனர். வண்டியை, ஆகாஷ் ஓட்டினார். இந்தநிலையில், ஒசூர், மூக்கண்டப்பள்ளி ஹோட்டல் ஹில்ஸ் அருகே, ரோட்டில் மழைநீர் தேங்கி இருந்தது தெரியாமல் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற போதுகட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது.

    இந்த விபத்தில் ஆகாஷ் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. சிவரஞ்சன் படுகாயம் அடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனும திக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஓசூர்சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.25,000-மதிப்பிலான 2.5 கிலோ கஞ்சாவை, மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் இருந்து ஓசூருக்கு கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கைது செய்து, கஞ்சா மற்றும் 50,000 ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார், நேற்று மாலை ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.25,000-மதிப்பிலான 2.5 கிலோ கஞ்சாவை, மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் இருந்து ஓசூருக்கு கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அந்த வாலிபர், அசாம் மாநிலத்தை சேர்ந்த பிங்கு பயாஸ் (22) என்பதும், இவர் ஓசூர் ஜுஜுவாடி பகுதியில் தங்கியிருந்து, ஒரு தனியார் கம்பெனியில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து, கஞ்சா மற்றும் 50,000 ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • பல்வேறு வங்கிகள் இருப்பதால் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் மக்கள் பேருந்துகளில் மக்கள் பயணித்து வருகிறார்கள்.
    • வாகனங்கள் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா வளர்ந்துவரும் நகரமாகும். சூளகிரி ஊராட்சி தலைமை ஊராட்சியாகவும் சூளகிரி தாலுகா, சூளகிரி ஒன்றியம் என பெயர்கள் இருந்தாலும் சூளகிரி ஊராட்சியில் போதிய அளவு வசதிகள் இல்லை.

    இந்த ஊராட்சியில்தான் கடை வீதிகள், வணிக வளாகங்கள், சூளகிரி ஊராட்சி மன்றம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார மருத்துவமனை, பத்திரபதிவு அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வருவாய் அலுவலகம், கிராம அலுவலகம், அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலை பள்ளிகள் இயங்கி வருகிறது.

    மேலும் ஆரம்ப பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிப்காட் வருவாய் அலுவலகம் தோட்டகலை அலுவலகம், வேளாண்மை அலுவலகம், வட்டார குழந்தைகள் நல அலுவலகம், பேருந்து நிலையம், தினசரி மார்க்கெட் மற்றும் பல்வேறு வங்கிகள் இருப்பதால் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் மக்கள் பேருந்து மற்றும் வாகனங்களில் வந்துசெல்வதால் நெரிசல் அதிகரித்து விபத்துகள் அதிகரித்து வருகிறது.

    விபத்துகளை தவிர்க்க ஓசூரில் இருந்து சூளகிரி நுழைவுவாயில், கிருஷ்ணகிரியில் இருந்து சூளகிரி நுழைவுவாயில் வரையிலான ஒசூர்- கிருஷ்ணகிரி சாலையில் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரை நீட்டிக்க வேண்டும். அப்படி நீட்டித்தால் விபத்துகள் வாகன நெரிசல், வீதி மீறல், வாகன நிறுத்தம் பிரச்சனைகள் ஏற்படாது. மேலும் முக்கியமான பகுதிகளில் வேகதடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நெறிமுறைகளை கடைபிடித்து, அனைத்து அரசு துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.

    கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நெறிமுறைகளை கடைபிடித்து, அனைத்து அரசு துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோபு (பொது), குமரேசன்(நிலம்), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

    • உரிய கட்டணத்துடன் தங்களது விருப்பமனுக்களை வழங்கப்பட்டது.
    • பர்கூர் சட்டமன்ற உறுப்பி னருமான மதியழகன் முன்னிலை வகித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க.வில் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, பர்கூர் வடக்கு, தெற்கு, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வடக்கு, தெற்கு, மத்திய, காவேரிப்பட்டணம் கிழக்கு, மேற்கு, மத்தூர் வடக்கு, தெற்கு ஆகிய 12 ஒன்றியங்கள் உள்ளது.

    இதில் ஒன்றிய அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிக்கான உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள், தலைமை கழகம் அளித்து மனுவை பெற்று, அதை பூர்த்தி செய்து, உரிய கட்டணத்துடன் தங்களது விருப்பமனுக்களை வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி வெங்க டேஸ்வரா காம்ப்ளக்சில் உள்ள சுபம் மகாலில் நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணை தலைவரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பி னருமான மதியழகன் முன்னிலை வகித்தார்.

    இதில் தலைமை கழக பிரதிநிதியும், முன்னாள் எம்எல்ஏ.வுமான ரவிச்சந்திரன் பங்கேற்று, விருப்ப மனுக்களை பெற்றார். இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர செயலாளர் நவாப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

    • கூட்டம் கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
    • வேட்புமனு பெற்று பூர்த்தி செய்து தேர்தல் அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கர்நாடகா மாநில முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான தர்மசேனா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், கிராம காங்கிரஸ் கமிட்டி, வட்டார கமிட்டி, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு ஆகியவற்றிற்கான கட்சி தேர்தல் நடைபெற உள்ளன.

    இந்நிலையில் அந்தந்த வட்டார, நகர காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவரிடம், வேட்புமனு பெற்று பூர்த்தி செய்து தேர்தல் அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கலாம் என்றார்.

    இதில், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, நாராயணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சேகர், மாவட்ட பொருளாளர் உமர்பாஷா, வக்கீல் அசோகன், மாவட்ட துணைத்தலைவர் விவேகானந்தன், கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் காலய்யா, மகளிரணி ராதா, பன்னீர்செல்வம், கோவிந்தராஜ் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் சூரியகணேஷ், மாவட்ட சேவாதள முன்னாள் தலைவர் நாகராஜ், வட்டார தலைவர்கள் அயோத்தி, ஊத்தங்கரை ரவி, கிருஷ்ணகிரி நகர துணைத்தலைவர் ஹரி, மாவட்ட செயலாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×