என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார்.
    • 157 குழந்தைகளுக்கு ரத்தம் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தேன்கனிக்கோட்டை ஜீவன் மருத்துவமனை இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே முதல் முறையாக 5 வயதிற்குட்பட்ட குழைந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் கெலமங்கலம் அடுத்த நாகமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரும், ஊட்டச்த்து நிபுணருமான ஹரிஹரன் குழந்தை வளர்ப்பு மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து ஆலோசனை வழங்கினார்.

    முகாமில் கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 வயதிற்குட்பட்ட 157 குழந்தைகளுக்கு ரத்தம் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இதில் 80 குழந்தைகளுக்கு ரத்த சோகை மற்றும் மூளை வளர்ச்சியின்மை போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

    முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சிவகுருநாதன், நவீன், அசோக், இளங்கோ ஆகியோர் செய்திருந்தினர். முகாமில் பள்ளி சிறார் நலத்திட்ட மருத்துவர்கள் சங்கீதா, மணிகண்டன், கெலமங்கலம் ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளார் சேகர் நன்றி கூறினார்.

    • கடந்த 16-ந்தேதி அன்று மாணவி எலி பேஸ்ட் தின்றார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள மகாதேவகொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகள் நித்யா (வயது15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி அன்று மாணவி எலி பேஸ்ட் தின்றார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் ஸ்டாண்ட் வரை செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றம வாலிபர் வீடு திரும்பவில்லை.
    • ஓசூர் சென்றுவிட்டு வருவதாக போன மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போலீஸ் சரகம் காந்திநகர் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் குபேரன். இவரது மகன் மகேஷ்(25). இவர் கடந்த 14-ந்தேதி அன்று பஸ் ஸ்டாண்ட் வரை செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் ஓசூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மகேஷை தேடி வருகின்றனர்.

    இதேபோல சூளகிரி அருகே உள்ள மருள தேவரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ். இவரது 17 வயது மகள் கடந்த 25-ந் தேதி ஓசூர் சென்றுவிட்டு வருவதாக போனவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் தரப்பட்டு உள்ளது.

    • தொடர்ந்து விளைநிலங்களை அட்டகாசம் செய்து வருகிறது.
    • ஊருக்குள் யானை வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் பீதியில் உள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனபள்ளி மற்றும் எப்ரி, சிகரலப்பள்ளி வனப்பகுதிகளில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டுயானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் காட்டு யானைகளை தமிழக வனத் துறையினர் கடந்த வாரம் மகாராஜகடை மற்றும் ஏக்கல்நாத்தம் மலைப்பகுதிக்கு விரட்டிவிட்டனர். இந்த நிலையில் இரண்டு யானைகள் மட்டும் திரும்பி வந்து கொங்கனப்பள்ளி வனப்பகுதிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள நந்த கோபால் என்பவருடைய விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள் மா மரங்களை உடைத்து அட்டகாசம் செய்துள்ளது.

    சத்தம் கேட்டு சென்ற அப்போது கிராம மக்கள் இரண்டு காட்டு யானைகளையும் வெடிகள் பட்டாசுகள் மூலம் வனப்பகுதிக்கு விரட்டினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 காட்டு யானைகள் ஊருக்குள் வந்து நாய்களை துரத்தி சென்றதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கொங்கனபள்ளி, கே. கொத்தூர் கிராமம் மற்றும் மலைப்பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

    மேலும் காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த இரண்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • ரூ.10 லட்சம் கேட்டு போனில் அந்த கும்பல் மிரட்டியது.
    • கடத்தல்காரர்கள் சிவசம்புவின் கண்ணை கட்டி விட்டு அவரை சாலையோரமாக இறக்கி விட்டு சென்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அவதானப்பட்டி அடுத்த முனியன்கொட்டாயை சேர்ந்தவர் சிவசம்பு (வயது 35). இவர் மளிகை பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்று வந்தார்.

    மேலும் நாம் தமிழர் கட்சியில் மாவட்ட வணிகர் பிரிவு பாசறை செயலாளராக இருந்து வந்தார். கடந்த 21-ந் தேதி இரவு இவர் இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் அவரது மனைவி பிரியாவுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகில் சென்றபோது, பின்னால் காரில் வந்த சுமார், 25 முதல், 30 வயது மதிக்கத்தக்க, கும்பல் சிவசம்புவை மடக்கியது.

    அவர்கள் சிவசம்புவை கத்தியை காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்றனர். மேலும் அவரது மனைவியிடம் ரூ.10 லட்சம் கேட்டு போனில் அந்த கும்பல் மிரட்டியது. இது குறித்து பிரியா கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கடத்தப்பட்ட சிவசம்புவை மீட்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமையில், டேம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கபிலன், போலீசார் விஜயகுமார், தங்கராஜ், அன்பழகன், சுகேல் ஆகியோர் கொண்ட படையினர் சிவசம்புவை தேடி வந்தனர். அவரது செல்போன் லோகேசனை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என விசாரித்தனர்.

    அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா ஒப்பதவாடி அருகே உள்ள லட்சுமிபுரம் பக்கமாக இருப்பது தெரிய வந்தது. போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த கடத்தல்காரர்கள் சிவசம்புவின் கண்ணை கட்டி விட்டு அவரை சாலையோரமாக இறக்கி விட்டு சென்றனர். அவரை போலீசார் மீட்டனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் திருப்பத்தூர் மற்றும் ஜெகதேவி பகுதியை சேர்ந்த நபர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிவசம்புவை பணம் கேட்டு கடத்தியதாக திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள எஸ்.மோட்டூரை சேர்ந்த பழனி (வயது 32), முருகன்வட்டத்தைச் சேர்ந்த குமரவேல் (28), பர்கூர் ஜெகதேவி விக்ரம் (21), திருப்பத்தூர் மாவட்டம் புதுபூங்குளம் மணி என்கிற மணிகண்டன் (34), தோரணம்பதி மணி (30), ஜெகதேவி முரளி (42) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • எனது சொந்த இடத்தில் கழிவுநீர் கால்வாய் எதற்கு அமைத்துள்ளீர்கள் என வாக்குவாதம் செய்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் சீனிவாசனை கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள பெருகோபனபள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது52). இவரது மனைவி அலமேலு (41).

    இந்த நிலையில் பெருகோபனபள்ளி கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய் கட்டியுள்ளனர். அப்போது சீனிவாசன் மற்றும் அவரது மனைவி அலமேலு ஆகியோர் தனது வீட்டின் முன்பு எனது சொந்த இடத்தில் கழிவுநீர் கால்வாய் எதற்கு அமைத்துள்ளீர்கள் என வாக்குவாதம் செய்தனர். பின்னர் கால்வாயை இடித்து தள்ளி உள்ளனர்.

    இது குறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். தலைமறைவான அலமேலுவை தேடி வருகின்றனர்.

    • கடந்த 22-ந் தேதி, அலுவலக பணி சம்பந்தமாக பள்ளியின் தலைமையாசிரியர் அன்னையப்பா என்பவர் பொன்னம்பலத்திடம் தகராறு செய்துள்ளார்.
    • தலைமையாசிரியர் அன்னையப்பாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் தாலுக்கா, பாகலூர் அருகே தேவீரப் பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக இருந்து வருபவர் பொன்னம்பலம்.

    கடந்த 22-ந் தேதி, அலுவலக பணி சம்பந்தமாக பள்ளியின் தலைமையாசிரியர் அன்னையப்பா என்பவர் பொன்னம்பலத்திடம் தகராறு செய்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், தாக்கி காயப்படுத்தினராம்.

    இந்த சம்பவம் குறித்து பொன்னம்பலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு புகார் அனுப்பினார்.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன், மாவட்ட கல்வித்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாவதி ஆகியோர் பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணைக்கு பின்னர் தலைமையாசிரியர் அன்னையப்பாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

    • 2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாததால் அவதிக்குள்ளாகினர்.
    • வட்டார திட்ட அலுவலர்களிடம், ஊழியர்கள் ஒப்படைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூரில் உள்ள சி.ஐ.டி.யு. அலுவலகத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின், மாவட்ட கோரிக்கை பேரவை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு, மாவட்ட நிர்வாகி தேவி தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் கஸ்தூரி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தம்மாள் ஆகியோர் கூட்டத்தில் பேசினார்கள்.

    இந்த கூட்டத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் உள்ள அரசு கொடுத்த செல்போன்களை, இன்று (29-ந்தேதி) அந்தந்த வட்டார திட்ட அலுவலர்களிடம், ஊழியர்கள் ஒப்படைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

    மேலும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் உதவியாளர்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பல முறை மாவட்ட இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நாளை (30-ந் தேதி) இந்த கோரிக்கைகள் குறித்து இயக்குனர்கள் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தவும், மாநில தலைமை இயக்குனர் அலுவலகம் முன்பு நடத்தப்படும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் மாவட்டத்தில் இருந்து திரளாக ஊழியர்கள் சென்று கலந்து கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்க நிர்வாகி பார்வதி நன்றி கூறினார்.

    • பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது.
    • உடன் சென்றவர் படுகாயம் அடைந்தார்.

    கிருஷ்ணகிரி,

    வேலூர் மாவட்டம் நவநீதம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (20). இவர் தனது நண்பரான பெங்களூருவை சேர்ந்த பிரதீப் (29) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    சென்னை-கிருஷ்ணகிரி சாலையில் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த அடிபட்ட லோகேசையும், படுகாயமடைந்த பிரதீப்பையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே லோகேஷ் உயிரிழந்தார். பிரதீப்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது.
    • விபத்தில் சிக்கியவரை மீட்க முயன்றனர். ஆனால் பரிதாபமாக பழனி உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள புலியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது45). விவசாயியான இவர் டிராக்டர் சொந்தமாக வைத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இவர் டிராக்டரில் புலியம்பட்டி வளைவு பகுதியில் சென்று ெகாண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுபாட்ைட இழந்து சாலையில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே விபத்தில் சிக்கியவரை மீட்க முயன்றனர். ஆனால் பரிதாபமாக பழனி உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் பலியான பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேசிய திறனாய்வுத்தேர்வில் 9 பேர் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • தேர்வு தொடங்கி 8 ஆண்டுகளில், இதுவரை இப்பள்ளியில் படித்து 70 பேர் இத்தேர்வில் கல்வி ஊக்கத்தொகை பெற்றுள்ளது.

    ஓசூர்,

    ஓசூர் பேடரப்பள்ளி அரசுப்பள்ளியின் மாணவ, மாணவியர், 9 பேர் தேசிய திறனாய்வு தேர்வில்,மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, 9-ஆம் வகுப்பு முதல், பிளஸ் -2 வரை மாதந்தோறும், 1,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    2021-22ம் கல்வி ஆண்டில், கடந்த மார்ச் மாதம், 5-ந்தேதி ஓசூர் ஆர்.வி.அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில், ஓசூர் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 15 பேர் பங்கேற்றனர்.

    தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேசிய திறனாய்வுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப்பள்ளிகளில், மாவட்ட அளவில் 2 -ஆம் இடத்தை பெற்று மாணவியர் பாக்கியலட்சுமி, ஹேமாவதி, காவியா, ஓவியா, ராஜேஸ்வரி, ரோஷினி, யோகலட்சுமி மற்றும் மாணவர்கள் சுபாஷ் , ரோஷன் ஆகிய, 9 பேர் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    தேர்வு தொடங்கி 8 ஆண்டுகளில், இதுவரை இப்பள்ளியில் படித்து 70 பேர் இத்தேர்வில் கல்வி ஊக்கத்தொகை பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது. சாதனை மாணவ, மாணவியரையும், தலைமையாசிரியர் பொன்.நாகேஷ் மற்றும் மாணவ-மாணவியருக்கு பயிற்சி அளித்த ஆசிரியையர் மற்றும் ஆசிரியர்களையும், ஓசூர் வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார், பள்ளிக்கு நேரில் சென்று பாராட்டி வாழ்த்தினார்.

    • பெண்ணை வழிமறித்து நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
    • பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்துள்ள மிட்டபள்ளி பகுதியை சேர்ந்த கணவன்-மனைவிக்கு இடையே நேற்றிரவு குடும்ப தகராறு ஏற்பட்டது.

    இதனால் அந்த பெண் கோபித்து கொண்டு கை குழந்தையுடன் லட்சுமி கொட்டாய் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த நாட்றம்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது28) என்பவர் அந்த பெண்ணை வழிமறித்து நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

    அதற்கு அந்த பெண் நான் லட்சுமி கொட்டாய் கிராமத்திற்கு செல்கிறேன் என்றார். உடனே அந்த வாலிபர் என் பைக்கில் ஏறுங்கள் நான் உங்களை கொண்டு விடுகிறேன் என்றார். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.

    ஆனாலும் அந்த வாலிபர் பைக்கை நிறுத்திவிட்டு வந்து அந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. உடனே அந்த பெண் கூச்சல் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் அந்த பெண் தனது உறவினர் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை எல்லாம் கூறி அழுதார்.

    இது குறித்து அந்த பெண் சிங்காரபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.

    ×