என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பாறையிலிருந்து தவறி விழுந்து படுகாய மடைந்தார்.
    • மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே பெரியமாட்டாரபள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 45). குவாரி தொழிலாளியான மாதையன் எதிர்பாராத விதமாக பாறையிலிருந்து தவறி விழுந்து படுகாய மடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து மஹாராஜாக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 21,000 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
    • டெட்டனஸ் எனப்படும் தசை இறுக்க நோய் பாதிக்காமல் இருக்க சுமார் 15,533 குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமி ஒருவர் நோய் பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்தது சுகாதார துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இதையடுத்து குழந்தைகளை நோய் தாக்காத வண்ணம் தடுப்பூசிகளை போட முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 21,000 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    டிப்தீரியா எனப்படும் தொண்டை அலர்ஜி நோய் பரவாமல் தடுக்க 6,525 குழந்தைகளுக்கும், டெட்டனஸ் எனப்படும் தசை இறுக்க நோய் பாதிக்காமல் இருக்க சுமார் 15,533 குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    இது குறித்து சுகாதார துறை துணை இயக்குனர் கோவிந்தன் கூறுகையில் கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் குழந்தைகளுக்கு நோய் தொற்றுகள் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் 21,000 குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார்.

    • ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாசை, சிராவணி மற்றும் சிவசாம்பவி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • சிறப்பு விமானத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுடன் பயணம் செய்த அரசு பள்ளி மாணவர்களில் சிராவணியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள ஜொனபண்டா கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்-குணவதி தம்பதியரின் மகள்கள் சிராவணி மற்றும் சிவசாம்பவி.

    இவர்களில் சிராவணி அரசு பள்ளியில் 9-வது வகுப்பும், சிவசாம்பவி 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் செஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

    சிராவணி 4-ம் வகுப்பு முதல் 11- வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்குகொண்டு விளையாடி தொடர்ந்து பல்வேறு போட்டிகளிலும், மாவட்ட அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளையும், பதக்கங்களையும் குவித்துள்ளார்.

    மேலும் தற்போது நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட பிரதிநிதியாகவும் அவர் கலந்துகொண்டார். மேலும், செஸ் ஒலிம்பியாட் சிறப்பு விமானத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுடன் பயணம் செய்த அரசு பள்ளி மாணவர்களில் சிராவணியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாசை, சிராவணி மற்றும் சிவசாம்பவி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்கள் இருவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும், மாநில, தேசிய, சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி சாதனை புரிய வேண்டும், அதற்கு தமிழக அரசு மூலம் உரிய உதவிகளை ஏற்பாடு செய்து தருவதாக பிரகாஷ் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

    இந்த நிகழ்ச்சியின்போது, பூனப்பள்ளி தி.மு.க. கிளை செயலாளர் மஞ்சுநாதப்பா, டாண்டா அமைப்பின் மாநில தலைவர் பிரகாஷ், வேணு மற்றும் மாணவிகளின் ஆசிரியர் வினோத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஷெட்டில் தசரதன், அவரது கள்ளக்காதலி சத்யா ஆகியோர் பிணமாக கிடந்தனர்.
    • சமூக விரோதிகளுக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்கி பலியான பரிதாபம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள சுபேதார்மேட்டை சேர்ந்தவர் தசரதன் (வயது 26). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    அதே ஊரை சேர்ந்த பெண்சத்யா (25). இவருக்கு சூளகிரி அருகே பி.ஜி.துர்க்கத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தசரதன் ,சத்யா இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சத்யாவின் அண்ணன் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று வருவதாக கூறி, தனது ஒன்றரை வயது குழந்தையுடன் அவர் சுபேதார்மேடு பகுதிக்கு நேற்று முன்தினம் வந்தார்.

    பின்னர் தசரதன், சத்யாவுடன் எம்.சி.பள்ளி அருகில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார்.

    அப்போது சத்யா குழந்தையை அழைத்து சென்றார். அந்த நிலத்தில் உள்ள இரும்பு ஷெட்டில் தசரதன், தனது கள்ளக்காதலி சத்யாவுடன் இரவில் இருந்தார். அந்த நேரம் சத்யா குழந்தையை அந்த ஷெட்டில் தொட்டில் கட்டி போட்டிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சிலர் மாடு மேய்க்க சென்றனர். அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டு அவர்கள் அந்த ஷெட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது ஷெட்டில் தசரதன், அவரது கள்ளக்காதலி சத்யா ஆகியோர் பிணமாக கிடந்தனர்.

    இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் மகராஜகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் தசரதன், சத்யா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கி அவர்கள் இறந்ததாக தெரிய வந்துள்ளது.

    அந்த இரும்பு ஷெட்டில் இரவு நேரத்தில் சிலர் வந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அதன் காரணமாக அங்கு யாரும் வராமல் இருக்க ஷெட்டை சுற்றி மின்சாரம் கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், அதில் அவர்கள் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர்.
    • புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் மற்றும் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், சுகாதார மேற்பார்வையாளர் ஏகாம்பரம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ராயக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர்.

    அப்போது பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கும் பள்ளி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    புகையிலை பாதிப்பு குறித்து கொப்பகரை பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஆய்வில் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில், இளங்கோ, தருமன், நவீன், நந்தகுமார் ஆகியோர் ஈடுபட்டனர்.

    • ஆகஸ்டு 30-ந் தேதி வரை செலுத்தப்படுகிறது.
    • 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வருகிற ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வரை செலுத்தப்படும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வருகிற ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி வரை செலுத்தப்படும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது அரசு அறிவித்துள்ளவாறு, இரண்டாம் தவணை செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வருகிற ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வரை செலுத்தப்படும். மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்படவில்லை.

    அவ்வாறு நோய் தொற்று உறுதியானாலும் உயிர் சேதம் மற்றும் தீவிர நோய் தொற்று ஏதும் ஏற்படுவதில்லை. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தங்கள் வீட்டையும், சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்துத்துறை அலுவ லர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலா ளர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள் 128 நாட்கள் / 6 மாதம்/ 26 வாரம் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்திக்கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்துவிட்டார்.
    • கிருஷ்ணனின் இருசக்கரவாகனம் அந்த லாரி மீது வேகமாக மோதியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள நல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 75). மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    தற்போது நல்லூரில் தனது மகனுடன் வசித்து வந்தார். இவரது மனைவி கடந்த 3 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு திதி கொடுப்பதற்காக கிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    காரியத்தை முடித்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். பெரியாம்பட்டி சமத்துவ புரம் அருகே கிருஷ்ணன் சென்றபோது அவருக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்துவிட்டார்.

    இதனால் கிருஷ்ணனின் இருசக்கரவாகனம் அந்த லாரி மீது வேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • மனிதக்கடத்தல் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி வினா விடை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
    • அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ஆராதனா தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பயிற்சி முகாமினை நடத்தின.

    ஓசூர் ரயில்நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த முகாமிற்கு ஓசூர் சப்-கலெக்டர் தேன்மொழி தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட சமூக நல குழந்தை பாதுகாப்பு அலுவலர் சிவகாமி, வக்கீல் சந்திரா, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், சைல்ட் லைன் பிரசன்னகுமாரி , 181 மைய நிர்வாகி சர்வகலா, மற்றும் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களும்,மனித கடத்தல் குறித்தும், எவ்வித செயல்களெல்லாம் மனித கடத்தல் என்பது பற்றியும் தெளிவாகவும், விளக்கமாகவும் பேசினர். மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மனிதக்கடல் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி வினா விடை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில், கல்லூரி, ஐ.டி.ஐ. மாணவ, மாணவியர், தனியார் பாரா மெடிக்கல் மாணவியர், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில், ஆராதனா அறக்கட்டளை நிறுவனர் ராதா நன்றி கூறினார்.

    • 207 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
    • சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்தேகவுடா தலைமையில் நடைபெற்றது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் அரசு ஆரம்பள்ளிகள் 134, நடுநிலைப் பள்ளிகள் 41, உயர்நிலைப் பள்ளிகள் 20, மேல்நிலைப் பள்ளிகள் 10, உண்டு உறைவிடப் பள்ளிகள் 2, என மொத்தம் 207 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சி சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்தேகவுடா தலைமையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றியதை திரையில் ஒளிபரப்பினர். சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மை குழு தலைவர் கனிமொழிபி.டி.ஏ.தலைவர் ராமன், துணைத்தலைர் ஷானு மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் வெங்கடேஷ், உதவி தலைமை ஆசிரியர்கள் சதிஷ், கோவிந்தராஜ், ராமசந்திரன், ஆசிரியர்கள் கணேசன், ரங்கநாயகி, மற்றும் மேலாண் குழு உருப்பினர்கள் பி.டி.ஏ. நிர்வாகிகள் கலந்து கொண்டு கல்வி வளர்ச்சி, சுகாதாரம், மாணவர்கள் ஒழுக்கம், பள்ளியில் வகுப்பறை சீர்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • கிருஷ்ணகிரி நகர தி.மு.க செயலாளராக மூன்றாவது முறையாக நவாப் தேர்வு செய்யப்பட்டு, திமுக தலைமை அறிவித்துள்ளது.
    • கடந்த 2008 முதல், 14 ஆண்டுகளாக தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரசெயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளராக மூன்றாவது முறையாக நவாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி நகர தி.மு.க செயலாளராக மூன்றாவது முறையாக நவாப் தேர்வு செய்யப்பட்டு, திமுக தலைமை அறிவித்துள்ளது. இவரது மனைவி பரிதாநவாப், திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும், நகர்மன்ற தலைவராகவும் உள்ளார்.

    நேற்று முன்தினம் தமிழகம் முழுவதிலும் மாவட்ட வாரியாக தி.மு.க. உட்கட்சி நிர்வாகிகளை அக்கட்சி தலைமை அறிவித்தது.

    அதன்படி கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளராக நவாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து நவாப் கூறியதாவது:-

    கடந்த 1989 முதல் 1998 வரை 9 ஆண்டுகள் நான்கு முறை மாவட்ட பிரதிநிதி, வட்டச்செயலாளர். 1998 முதல் 2003 வரை 5 ஆண்டுகள் மாநில பொதுக்குழு உறுப்பினர். 2003 முதல் 2008 வரை 5 ஆண்டுகள் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை தி.மு.க தலைமை எனக்கு வழங்கியுள்ளது.

    கடந்த 2008 முதல், 14 ஆண்டுகளாக தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரசெயலாளர் பொறுப்பில் இருந்து வரும் நிலையில், தற்போது தலைமை மீண்டும் மூன்றாவது முறையாக என்னை நகர செயலாளராக அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழியில் என்னென்றும் நின்று கிருஷ்ணகிரி நகர வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புத்தகங்கள் மாயமாகிவிட்டன.
    • பி.இ.ஓ. மாதம்மாள் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அரசு பள்ளிகளுக்கு விநியோகம் செய்வதற்காக கடந்த 20.10.2021 அன்று 29 ஆயிரத்து 225 புத்தகங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் பல்வேறு அரசு பள்ளிகளுக்கு 17 ஆயிரத்து 225 புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 12,000 புத்தகங்கள் இ.ஓ. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில் அந்த புத்தகங்கள் மாயமாகிவிட்டன. இதுகுறித்து பி.இ.ஓ. மாதம்மாள் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்துள்ளார். அலுவலக ஊழியர்களான தங்கவேல், திருநாவுக்கரசு ஆகிய இருவர் மீது அந்த புகாரில் மாதம்மாள் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

    காணாமல் போன புத்தகங்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் என்று கூறப்படுகிறது. பள்ளி பாட புத்தகங்கள் மாயமான சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பொதுமக்கள் போக்குவரத்திற்காக தரைப்பாலம் கட்டப்பட்டது.
    • வெள்ள நீரால் பாலம் முழுவதும் உடைந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அருகே உள்ள கதவணி புதூர் செல்லும் சாலை பாம்பாற்று ஓடையின் மேல் அமைந்துள்ள தரைப்பாலம் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் பாலம் உடைந்து அப்பகுதியில் உள்ள மக்கள் பாலத்தை கடந்து காரப்பட்டு வர முடியாமலும் காரப்பட்டு பகுதியில் உள்ளவர்கள் கதவணை புதூர் பகுதிக்கு செல்ல முடியும் அவதிக்குள்ளா கியுள்ளனர்.

    2 வருடங்களுக்கு முன்பு ஆற்றுப்பாலம் அமைக்க வழி சீரமைத்து புதியதாக பொதுமக்கள் போக்குவரத்திற்காக தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்து நகர் பகுதிக்கு வர அருகே உள்ள்ள மயிலாடுபாறை, எம்.ஜி.ஆர். நகர், அண்ணா நகர், என சிறு சிறு ஊர்களில் சுமார் 1000 வீடுகளில் வசித்து பொது மக்கள் இந்த பாலத்தை கடந்து சென்றே ஆக வேண்டும். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் இந்த ஆற்றை கடந்து ஆபத்தான நிலையில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இவர்கள் மருத்துவமனைக்கு, உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வாங்க ஆற்றை கடந்து ஊத்தங்கரைக்கு சென்று வர பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.இப்போது தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக ஓடிய வெள்ள நீரால் பாலம் முழுவதும் உடைந்து முற்றிலும் மக்கள் சென்று வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

    அந்த பகுதி பொதுமக்களின் நலன் கருத்தி மாவட்ட நிர்வாகம் உடைந்த பாலத்தை அகற்றப்பட வேண்டும். புதியதாக தரைப்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×