என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • நகர செயலாளராக நவாப் மீண்டும் தேர்ந்தெ டுக்கப்பட்டதையொட்டி, அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள்.
    • 5 ரோடு ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளராக நவாப் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதையடுத்து அவர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதையொட்டி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு நகர தி.மு.க. செயலாளர் நவாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரியில் பெங்களூர் சாலையில் தி.மு. க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று, 5 ரோடு ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    முன்னதாக நகர செயலாளராக நவாப் மீண்டும் தேர்ந்தெ டுக்கப்பட்டதையொட்டி, அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள். மேலும், அவருக்கு நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கிருஷ்ணகிரியில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவினை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், அமீர்சுஹேல் உள்ளிட்ட வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் செயலாளர்கள், அமைப்பாளர்கள், தி.மு.க. நகராட்சி கவுன்சிலர்கள், கட்சி தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு அனுமதியின்றி கிரானைட் கற்கல் கடத்தல்
    • லாரியை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பம் போலீஸ் சரகம் சின்ன மட்டாரப்பள்ளி பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி தலக்கோட்டை (வயது 42) என்பவர் பசவனப்பள்ளி பகுதியில் அரசு அனுமதியின்றி கிரானைட் கற்களை லாரி ஒன்றில் கடத்தி சென்றபோது தான் மடக்கியதாகவும், அப்போது லாரியை நிறுத்திவிட்டு அதில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டதாகவும் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் அங்கு சென்று லாரியை பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில் தப்பி ஓடியவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் சிவசங்கர், டிரைவர் ராஜசேகர் என்பது தெரிய வந்தது.

    2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • நான் மாற்றுக் கட்சியில் சேரப்போகிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.
    • என் கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ்காரனாகத்தான் இருப்பேன்.

    ஓசூர்,

    ஓசூர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.கோபிநாத், பா.ஜ.கவில் சேரப்போவதாக வதந்தி கிளம்பியதையடுத்து, ஓசூரில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மூத்த, தீவிர காங்கிரஸ்காரனாகிய நான் மாற்றுக் கட்சியில் சேரப்போகிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ்காரனாகத்தான் இருப்பேன். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    கட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் எனது ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்த்துள்ளனர்.

    ஆனால் அவர்களை மாநில பொதுக்குழு உறுப்பினர், நகர தலைவர், வட்டார தலைவர் போன்ற பதவிகளுக்கு பரிசீலிக்கப்படாதது எனக்கு மன சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    • விளையாட சென்ற சந்தீப் எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டி ஒன்றில் தவறி விழுந்துள்ளான்.
    • நீச்சல் தெரியாத சந்தீப் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

    கிருஷ்ணகிரி.

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி போலீஸ் சரகம் மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சந்தீப் (வயது15).

    தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அப்பகுதியில் விளையாட சென்ற சந்தீப் எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டி ஒன்றில் தவறி விழுந்துள்ளான். நீச்சல் தெரியாத சந்தீப் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

    இது குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • டிசம்பர் மாதம் 19-ந்தேதி இவர் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போய் விட்டார்.
    • நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவர் கோவை அன்னூர் பகுதியில் தங்கியிருந்ததை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து மீட்டு, அங்கிருந்து அழைத்து வரப்பட்டு நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நேரு நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் விஸ்வகுமார்(23), பி. இ படித்துள்ள இவர், கட்டிட பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி இவர் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போய் விட்டார்.

    இது குறித்து அவரது பெற்றோர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    ஆனால் 8 மாதங்களாக எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், விஸ்வகுமாரின் பெற்றோர், சென்னையில் டி.ஜி.பி.சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்து முறையிட்டனர்.இதனையடுத்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக் கூருக்கு, இதுதொடர்பாக கடிதம் எழுதி விஸ்வகுமாரை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளு மாறு அறிவுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து, அவரை கண்டுபிடிக்க மேற்கொண்ட நடவடி க்கைகள் மற்றும் இளைஞர் கண்டுபிடிக்கப்பட்ட விதம் குறித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    விஸ்வகுமார் காணாமல் போன வழக்கில், டி.ஜி.பி.சைலேந்திரபாபுவின் உத்தரவையடுத்து எனது மேற்பார்வையில், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில், அட்கோ இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்- இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு அந்த இளைஞரை கண்டு பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    அவரது செல்போன்கள் சுவிட்ச்-ஆப் செய்ய ப்பட்டிருந்த நிலையில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவர் கோவை அன்னூர் பகுதியில் தங்கியிருந்ததை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து மீட்டு, அங்கிருந்து அழைத்து வரப்பட்டு நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில், போலீஸ் ஏட்டு மற்றும் தி.மு.க. பிரமுகர் ஒருவர் இடையே நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சி.எஸ்.ஆர். போடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் கூறினார்.

    • வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்த முனிராஜ் விஷம் குடித்து விட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகேயுள்ள அகல கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 18). நர்சரி கார்டன் ஒன்றில் வேலை பார்த்து வந்த முனிராஜுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் தரவில்லை. இதனால் மனமுடைந்த முனிராஜ் விஷம் குடித்து விட்டார்.

    அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோசலை விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • விழாவினையொட்டி, கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், அனுபவ பகிர்வுகளும் நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    ஐ.வி.டி.பி. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 16 ஆண்டுகளாக ஐ.வி.டி.பி. கோசலை விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான கோசலை விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

    இந்த விழாவிற்கு ஐ.வி.டி.பி. நிறுவனத் தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் தலைமை வகித்தார்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், சியோன்மலை ஆரோக்கிய அன்னை முதியோர் இல்லத்தின் இயக்குனர் இருதயராஜ் ஆகியோர் பங்கேற்று, 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 3 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.19,250 மதிப்பிலான 4 கிராம் தங்க நாணயங்கள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற 5 மாணவர்களுக்கு தலா ரூ.35,250 மதிப்பிலான லேப்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 1000 மாணவர்களுக்கு தலா ரூ.4,880 மதிப்பிலான ஒரு கிராம் தங்க நாணயங்களை விருதாக வழங்கினர். இதன் மொத்த மதிப்பு ரூ.52 லட்சம் ஆகும்.

    இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பத்மாவதி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் துணை வட்டார மேலாளர் பிரின்ஸ், தமிழ்நாடு கிராம வங்கியின் வட்டார மேலாளர் சீராளன் மற்றும் வங்கி கிளை மேலாளர்கள், ஜாய் ஆலுகாஸ் நிறுவன ஊழியர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கினர்.

    இதுவரை ஐ.வி.டி.பி. சோசலை விருது திட்டத்திற்காக மட்டும் ரூ.4.29 கோடி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்வி பணிக்காக ரூ.32.97 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    விழாவினையொட்டி, கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், அனுபவ பகிர்வுகளும் நடந்தது. இதில், விருது பெற்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஐ.வி.டி.பி. நிறுவன ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஐ.வி.டி.பி. நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜோஸ்வா மற்றும் நந்தினி ஜோஸ்வா ஆகியோர் செய்திருந்தனர்.

    • சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
    • 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி.

    கிருஷ்ணகிரி பழைய ஹவுசிங் போர்டு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் மற்றும் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.

    அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அந்த வாலிபர் பழைய ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் ராகுல் (வயது 23) என்பதும். அவர் கஞ்சா விற்பதும் தெரியவந்தது.

    அவரை கைது செய்த போலீசார் 110 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • வேலைநிறுத்த விளக்க வாயிற்கூட்டம் ஓசூர் ஏ.எஸ்.டி.சி.டெப்போ முன்பு நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு கிளை தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு) வேலைநிறுத்த விளக்க வாயிற்கூட்டம் ஓசூர் ஏ.எஸ்.டி.சி.டெப்போ முன்பு நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு கிளை தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கலையரசன்,நஞ்சுண்ட ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை பொருளாளர் தங்கவேல் வரவேற்றார்.

    இதில் மண்டல பொதுச்செயலாளர்முரளி கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். கிளை நிர்வாகிகள் குமார்,அருண், பிரபாகரன், கோவிந்தன் ஆகியோர் பேசினார்கள். முடிவில் சுபாஷ் நன்றி கூறினார்.

    • அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்துதான் தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் கடத்தபடுகிறது.
    • குட்கா விற்பவர்கள், கடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தால்தான் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் ஒருங்கிணைந்த பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. குட்கா விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோ, மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போது தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளிலும் குட்கா விற்பனை நடக்கிறது. இதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்துதான் தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் கடத்தபடுகிறது.

    குட்கா விற்பவர்கள், கடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தால்தான் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மேகநாதன், பா.ம.க. தொழில் நுட்ப பிரிவு மாநில தலைவர் ஓசூர் வக்கீல் கனல் கதிரவன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ், சிவானந்தம், நிர்வாகிகள் வெங்கடேச செட்டியார், பழனிவேல், ராஜா, மாதப்பன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.யில் சிறுத்தை உலாவரும் காட்சி பதிவாகி இருந்தது.
    • நேற்றிரவு வீட்டில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள பன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறியுள்ளது. அந்த சிறுத்தை நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி அளவில் ஓசூர் பைரப்பனஅள்ளி கிராமத்திற்குள் புகுந்தது.

    பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தை அங்குள்ள ஒரு வீட்டின் காமவுண்டு சுவர் மீது ஏறி குதித்து உள்ளே புகுந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த சிறுத்தை வெளியே வந்தது. பின்னர் வந்த வழியே சிறுத்தை திரும்பி சென்றது. இந்த காட்சி அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது. இதனை பார்த்த அந்த வீட்டின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதனால் நேற்றிரவு வீட்டில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • துணி துவைத்தபோது எதிர்பாராத விதமாக லாவண்யா தடுமாறி ஏரிக்குள் விழுந்துள்ளார்.
    • லாவண்யா பிணமாக மிதப்பது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு தகவல் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரகம் கொடிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் லாவண்யா (வயது 18).

    இவர் துணி துவைப்ப தற்காக அருகேயுள்ள கரடிமலை ஏரிக்கு சென்றுள்ளார். அங்கு துணி துவைத்தபோது எதிர்பாராத விதமாக லாவண்யா தடுமாறி ஏரிக்குள் விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது.

    இதனால் நீரில் மூழ்கி லாவண்யா உயிரிழந்தார். துணி துவைக்க சென்ற பெண்ணை காணவில்லை என்று அவரது வீட்டில் தேடிவந்த நிலையில் ஏரியில் லாவண்யா பிணமாக மிதப்பது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ×