என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கடந்த 7 வருடத்துக்கு முன்பு தனது சொத்துக்களை விற்றுவிட்டு உத்தனப்பள்ளியில் உள்ள தனது மாமியார் வீட்டிலேயே மாதுராஜ் வசித்து வந்தார்.
    • கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகேயுள்ள தொட்டத்திம்மலஹள்ளி ஊராட்சி எடவள்ளியை சேர்ந்தவர் மாதுராஜ் (வயது 55). இவரது மனைவி சாரதா . இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.

    கடந்த 7 வருடத்துக்கு முன்பு தனது சொத்துக்களை விற்றுவிட்டு உத்தனப்பள்ளியில் உள்ள தனது மாமியார் வீட்டிலேயே மாதுராஜ் வசித்து வந்தார்.

    இந்நிலையில் அவருக்கு கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் மாதுராஜ் திடீரென ஊரைவிட்டு வெளியேறி மாயமாகிவிட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த சூழலில் உத்தனபுள்ளி-சூளகிரி ரோட்டில் உள்ள ஒரு அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தின் பின்புறம் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மாதுராஜ் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின்பேரில் உத்தனபுள்ளி போலீசார் வழக்கு பதிந்து மாத்துராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மாதுராஜின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குத்து சண்டையில் சாதனை படைத்தனர்.
    • பாத்திமா முதலாமிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    மத்தூர்,

    திண்டுக்கல் மாவட்டம் பண்ணை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் பாக்ஸிங் அஸோஸியேஷன் நடத்திய மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் இருமத்தூர் ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பாத்திமா முதலாமிடமும், ஹேமபிரனீத்,தீபிகா, ஈஸ்வர் இரண்டாமிடமும்,கபிலன் மூன்றாமிடமும் பிடித்து சாதனை படைத்தனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முனியப்பன் ,சுகன், அர்ச்சுனன் ஆகியோரையும் பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் கோவிந்தராஜ், செயலாளர் ஜெயந்திவெங்கடேசன், பள்ளியின் முதல்வர் சண்முகவேல், துணை முதல்வர் ரகுபதி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

    • விவசாய நிலங்களில் வேலை செய்வோர் அப்படியே வந்து ஓட்டல் கடைகளில் பணிபுரிகின்றனர்.
    • சுகாதாரமற்ற நிலையில் உணவுகளை தயார் செய்தும், சப்ளை செய்தும்வருகின்றனர்.

    காவேரிப்பட்டணம்,

    காவேரிப்பட்டணம் அடுத்த டேம் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆகும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

    காவேரிப்பட்டணம் அடுத்த டேம் ரோடு, திம்மாபுரம் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலையொட்டி ஏராளமான ஓட்டல் கடைகள் உள்ளன.

    இங்கு ஓட்டல் கடைகள் இருப்பதால் தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள், கார்கள், டூரிஸ்ட் வேன்கள் நின்று அதன் டிரைவர்கள் மற்றும் அதில் வரும் பயணிகள் அங்கு உள்ள கால்வாய்களில் குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் இங்கு ஓட்டல் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஓட்டல் கடைகளில் கூட்டம் வரும்போது இந்த ஓட்டல் கடையை ஒட்டி விவசாய நிலங்களில் வேலை செய்வோர் அப்படியே வந்து ஓட்டல் கடைகளில் பணிபுரிகின்றனர்.

    அப்படி வந்து பணிபுரியும் போது சுகாதாரமற்ற நிலையில் உணவுகளை தயார் செய்தும், சப்ளை செய்தும்வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி அணையிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள் இந்த ஓட்டல் கடைகளில் எண்ணெயில் பொறித்தும், மீன் குழம்பு ,மீன் வருவல் செய்தும் விற்பனை செய்து வருகின்றனர்.

    அப்படி விற்பனை செய்யும் மீன்கள் வியாபாரம் ஆகாமல் நின்று விட்டால் அதை அப்படியே எடுத்து அடுத்த நாட்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் பலமுறை ஓட்டல் கடைக்காரர்களுக்கும் லாரி டிரைவர்களுக்கும் சண்டை நடப்பது வாடிக்கையாக உள்ளது.

    இது குறித்து லாரி ஓட்டுநர்கள் கூறும் போது, நாங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சரக்குகளை லாரியில் ஏற்றி சென்று வருகின்றோம். அப்படி வரும்போது கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் கால்வாயில் குளித்துவிட்டு இங்கு ஓட்டல் கடைகள் இருப்பதால் லாரிகளை நிறுத்திவிட்டு சாப்பிடுகின்றோம்.

    அதற்கு முறையாக பணமும் வழங்குகிறோம். ஆனால் இங்கு உள்ள ஓட்டல்களில் ஒரு இடத்தில் கூட நல்ல தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் வழங்குவதில்லை. சில நேரங்களில் கெட்டுப்போன மீன்களை எங்களுக்கு வழங்கி விடுகிறார்கள்.

    அதை சாப்பிட்டு விட்டு வண்டியில் செல்லும்போது எங்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது.

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இக்கடைகளில் முறையாக ஆய்வு செய்வது கிடையாது.

    எனவே சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பது லாரி டிரைவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • இருளர் இன குடியிருப்பு பகுதிகளுக்கு அமைச்சர் காந்தி நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • குடிநீர் வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா, தனிநபர் வீடுகள், சாலை வசதிகள் ஆகிய அடிப்படை வசதிகள் கேட்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா புதூர் புங்கனை ஊராட்சி ஒட்டம்பட்டி கிராமம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 26 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து, கல்லாவி ஊராட்சி, பனமரத்துப்பட்டி இருளர் இன குடியிருப்பு பகுதிகளுக்கு அமைச்சர் காந்தி நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    மேலும் குடிநீர் வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா, தனிநபர் வீடுகள், சாலை வசதிகள் ஆகிய அடிப்படை வசதிகள் குறித்து குடியிருப்பு பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு இருளர் இன மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு மதிய உணவுகளை பரிமாறினார்.

    இதில் ஜோலார்பேட்டை தேவ ராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம.எல்.ஏ. செங்குட்டுவன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், ஒன்றிய குழு துணை தலைவர் சத்தியவாணி செல்வம், மகளிர் ஆணைய உறுப்பினர் மாலதி, ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், மகேஷ்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கால்வாயில் மீன்கள் மற்றும் பாம்புகள் செத்து மிதந்தது.
    • தற்போது கழிவுநீர் பிரச்சனையால் ஏரியில் உள்ள மீன்கள் என்னவாகும் என குத்தகைக்கு எடுத்தவர் அச்சம் அடைந்துள்ளார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா தியாகரசனப் பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிகரளப்பள்ளி கிராமத்தில் 100-க்கும் குடியிருப்புகள் உள்ளது.

    இந்த கிராமத்தின் அருகே உள்ள இந்திரா நகரில் அட்டை தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் தண்ணீர் மாசுப்படுகிறது.

    தற்போது மழை அதிகரிப்பால் ஏரிக்கு செல்லும் பகுதியில் உள்ள கால்வாயில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் கால்வாயில் மீன்கள் மற்றும் பாம்புகள் செத்து மிதந்தது. இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கவுண்டன் ஏரியை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் 80 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்து உள்ளார். தற்போது கழிவுநீர் பிரச்சனையால் ஏரியில் உள்ள மீன்கள் என்னவாகும் என அச்சம் அடைந்துள்ளார்.

    • ஏரிக்கரை அருகே பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது.
    • ஏரிகளை பார்க்கவும், செல்பி எடுத்துக் கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.,

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் கே.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகளில் மழை நீர் நிரம்பி வருகிறது.

    இந்த நிலையில், ஏரிகளை பார்க்கவும், செல்பி எடுத்துக் கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது., ஏரிக்கரை அருகே பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள தொகரப்பள்ளி ஆடாளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது18). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தந்தை மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • 10 நாட்களுக்கு தெரு கூத்து நாடகமும் நடைபெற்றது.
    • துரியோதணன் படுகளகத்திற்கான களிமண்ணாலான உருவம் வரையப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள களர்பதி பகுதியில் கடந்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி முதல் ேநற்று (3-ந் தேதி) வரை 30 நாட்கள் மஹாபாரத சொற்பொழிவும் நடந்தது.

    மேலும் ஜூலை 24-ந் தேதி முதல் நேற்று (3-ந் தேதி) வரை 10 நாட்களுக்கு தெரு கூத்து நாடகமும் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மஹாபாரத சொற்பொழிவு நிறைவு நாளான நேற்று துரோபதியம்மன் கோவில் வளாகத்தில் துரியோதணன் படுகளகத்திற்கான களிமண்ணாலான உருவம் வரையப்பட்டது.

    இதனையடுத்து நேற்று முன்தினம் (2-ந் தேதி) இரவு முதல் நேற்று (3-ந் தேதி) பிற்பகல் 12.45 மணி வரை நாடக கலைஞர்கள் கிருஷ்ணர், தர்மர், அர்ஜூணன், நகுலன், பீமன், சகாதேவன், பாஞ்சாலி, துரியோதணன் உள்ளிட்ட வேடமணிந்து துரியோதணன் படுகளம் குறித்து நாடக சொற்பொழிவுடன் துரியோதணன் படுகளம் நடைபெற்றது.

    இதனை காண வந்த சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு துரியோதணன் படுகளம் நாடக நிகழ்ச்சியை கண்டுகளித்தும், துரோபதியம்மனின் அருள் பெற்று சென்றனர்.

    பின்னர் அன்று மாலை கோவில் வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த அக்னி குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திகடனை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஊர்கவுண்டர் ஊர் மூப்பர், ஊர் நாய்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1308 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
    • தென்பெண்ணை ஆற்றில் கால்நடைகளை குளிப்பாட்டவோ, கால்நடைகளுடன் ஆற்றை கடக்கவோ கூடாது

    ஓசூர்,

    கர்நாடக மாநில நீர் பிடிப்பு பகுதிகளிலும், ஓசூர் பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று, அணைக்கு வினாடிக்கு 1370 கன அடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1308 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி ஆகும். தற்போது அணையில் நீர் இருப்பு 42.15 அடியாகும்.

    அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், தாழ்வான பகுதிகளிலும், கரையோரத்திலும் மற்றும் அணையை சுற்றி உள்ள பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் கால்நடைகளை குளிப்பாட்டவோ, கால்நடைகளுடன் ஆற்றை கடக்கவோ கூடாது என வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதனிடையே, அணை நீருடன், கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளும் கலந்து நுரை பொங்கி குவியல், குவியலாக வெளியேறு வதால், விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை அடைந்து உள்ளனர்.

    • கனமழை பெய்து, பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது.
    • வகுப்பறையில் இருந்த ஜன்னலை பிடித்தவாறு உயரமான இடத்தில் தொங்கி நின்றனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே கொலதாசபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று கொலதாசபுரத்தில் கனமழை பெய்து, பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது.

    மாணவ, மாணவியரின் முழங்கால் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் அவர்கள், வகுப்பறையில் இருந்த ஜன்னலை பிடித்தவாறு உயரமான இடத்தில் தொங்கி நின்றனர். இதனால், ஆசிரியை செய்வதறியாது திகைத்தார்.

    பின்னர், குழந்தைகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த பின், அவர்கள் பள்ளிக்கு வந்து குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

    • திம்மைய்யா (40), தளி கொத்தனூரை சேர்ந்த மாதய்யா மகன் சிவமலா (27) என்பதும், நரசிம்மமூர்த்தியை இருவரும் அடித்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.
    • இதுகுறித்து ரவி (எ) திம்மையா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாரவேந்திரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் நரசிம்மமூர்த்தி (46). பி.பி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவர் கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இந்த கொலை குறித்து தளி இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம் விசாரணை நடத்தினார்.

    தேன்கனிக் கோட்டை தாலுகா, பி.பி. பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணை தலைவரான சாத்தம்மாவின் மகன் ரவி என்கிற திம்மைய்யா (40), தளி கொத்தனூரை சேர்ந்த மாதய்யா மகன் சிவமலா (27) என்பதும், நரசிம்மமூர்த்தியை இருவரும் அடித்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து போலீஸ் தேடுவதை அறிந்து திம்மைய்யா, சிவமலா ஆகிய இருவரும் ஓமலூர் போலீசில் சரண் அடைந்தனர். பின்னர் தளி போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து ரவி (எ) திம்மையா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறுகையில் தாரவேந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் நரசிம்ம மூர்த்தியிடம், எனது 3 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய கொடுத்தேன்.

    அவர், அதை 775 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். ஆனால், எனக்கு 713 லட்சம் மட்டுமே கொடுத்தார். பணம் கேட்டு சென்றபோதெல்லாம், பணத்தை கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு, எனது குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க 750 ஆயிரமாவது கொடுக்குமாறு கெஞ்சியும், அவர்கொடுக்கவில்லை. நிலத்தை விற்றும், எனது மகளுக்கு சிகிச்சை கூட அளிக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில், சிவமலாவுடன் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்தேன். இவ்வாறு ரவி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    • வினாடிக்கு 2,800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
    • காவேரிபட்டணம் ஆற்றில் இருகரைகளும் தொட்டபடி வெள்ளம் செல்கிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து வினாடிக்கு 2,800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதனையடுத்து தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் 2800 கன அடி நீரும் பிரதான மதகு வழியாக ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    இதனால் இன்று காவேரிபட்டணம் ஆற்றில் இருகரைகளும் தொட்டபடி வெள்ளம் செல்கிறது.

    இதனை ஏராளமான பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றில் பாலத்தின் மீது நின்று பார்த்து செல்கின்றனர். மேலும் ஏராளமான மக்கள் செல்பியும் எடுத்து செல்கின்றனர்.

    ×