என் மலர்
கிருஷ்ணகிரி
- பக்கத்து வீட்டில் வசிக்கும் ரமேஷ் (37), அவரது தம்பி காந்தி(36) ஆகியோர் மீது சந்தேகப்பட்டு போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
- அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள பிச்சினம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 55).
இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ, 2 லட்சம் பணம் திருடு போனது. இது குறித்து அவர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரமேஷ் (37), அவரது தம்பி காந்தி(36) ஆகியோர் மீது சந்தேகப்பட்டு போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் திருடியதை ஒத்துக்கொண்டனர்.
அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சிங்காரப்பேட்டை அருகே ரெட்டியூரில் பொம்மி (எ) பச்சையம்மாள் (55) என்ற பெண் 10 லிட்டர் சாராயத்துடன் பிடிபட்டார்.
- காமராஜ் நகரில் முத்துசாமி என்பவரும் கள்ள சாராயம் விற்றுக்கொண்டு இருந்தவர்கள் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்து விட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள காலம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வைத்து ஒருவர் கள்ள சாராயம் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் திருப்பத்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 57) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 8 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
இதேபோல சிங்காரப்பேட்டை அருகே ரெட்டியூரில் பொம்மி (எ) பச்சையம்மாள் (55) என்ற பெண் 10 லிட்டர் சாராயத்துடன் பிடிபட்டார். அவரை கைது செய்தனர்.
மேலும் அதே பகுதியில் மங்காயி என்பவரும்,காமராஜ் நகரில் முத்துசாமி என்பவரும் கள்ள சாராயம் விற்றுக்கொண்டு இருந்தவர்கள் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்து விட்டனர்.
அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 35 லிட்டர் சாராயத்தை அழித்த போலீசார் அவர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- பேருந்துகள் மட்டுமே வந்து செல்வதால் பேருந்து நிலைய வளாகத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது.
- நகர பேருந்து வழித்தடம் அமைத்தால் மாணவர்கள் பள்ளி சென்று பயிலவும், பொதுமக்கள் தொழிற்சாலை செல்லவும் ஏதுவாக அமையும்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தை சேர்ந்த பேரிகை ஊராட்சி. இந்த ஊராட்சி கர்நாடகா , ஆந்திராவை ஒட்டியே அமைந்து உள்ளதால் தமிகத்தில் இருந்தும், பிற மாநிலத்தில் இருந்தும் பொதுமக்கள், வியாபாரிகள் வாகனம் மூலம் வருவதற்கும், செல்வதற்கும் ஏதுவாக அமைந்து உள்ளது.
மேலும் இந்த ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள், நடு நிலைப்பள்ளிகள், குடியிருப்புகள், காவல் நிலையம் , செக்போஸ்ட், அரம்ப மருத்துமனை, வருவாய் மற்றும் கிராம அலுவலகங்கள், மார்க்கெட், வணிக கடைகள், புண்ணிய ஸ்தலங்கள் என உள்ளதால் மாணவர்கள், பொதுமக்கள் தினமும் 7000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இங்கு அமைந்துள்ள பேருந்து நிலைத்தில் சில பேருந்துகள் மட்டுமே வந்து செல்வதால் பேருந்து நிலைய வளாகத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி படுகின்றனர்.
இந்த பேருந்து நிலையத்தை மையமாக கொண்டு அருகே உள்ள மாலுர், மாஸ்த்தி, அத்தி முகம், வெங்கடேசபுரம், காட்டுநாயக்கன தொட்டி, நெரிகம், கும்பளம், பி.குருபரப்பள்ளி, பண்ணப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு நகர பேருந்து வழித்தடம் அமைத்தால் மாணவர்கள் பள்ளி சென்று பயிலவும், பொதுமக்கள் தொழிற்சாலை செல்லவும் ஏதுவாக அமையும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
- பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
- இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கிருஷ்ணகிரி அணையில் குவிந்தனர்.
கிருஷ்ணகிரி,
கர்நாடகா மாநிலம் பெங்களூர், தென்பெண்ணை நீர்பிடிப்புகள், மார்கண்டேய நதி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
அதிகப்பட்சம் 20 ஆயிரம் கனஅடியை கடந்து நீர்வரத்து இருந்தது. மேலும், அணையில் இருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்டதால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், அணைக்குள் வந்து செல்ல பொதுப்பணித்துறை தடைவிதித்தனர்.
இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் இருந்து அணையை பார்வையிட்டு சென்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைந்து, அணைக்கு வரும் நீர்வரத்தும் படிபடியாக குறைந்து வருகிறது.நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு நீர்வரத்து 3,924 கனஅடியாக இருந்தநிலையில், நேற்று காலை விநாடிக்கு 3,661 கனஅடியாக சரிந்தது.
அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் அணையில் இருந்து 4,031 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருவதால், இன்று முதல் அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கிருஷ்ணகிரி அணையில் குவிந்தனர்.
- 6 முதுநிலை ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு பறக்கும் படை ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டது.
- தவறிழைத்த நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தை சிறப்பாக நடத்தும் பொருட்டு கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்ய மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தலைமையில் துணைப்பதிவாளர் சுந்தரம், 11 கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் 6 முதுநிலை ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு பறக்கும் படை ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டது.
இக்குழுவினால் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி மற்றும் பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 47 நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தவறிழைத்த நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆய்வின் போது முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பொது விநியோகத்திட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொடர்புடைய சங்க நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தண்ணீர் அதிக அளவு உள்ள இந்த தொட்டியில் மாதேஷ் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.
- மாடு, ஆடுகளுக்கு தண்ணீர் காட்ட வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பேரிகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மாலுர் பகுதியை அடுத்த பண்டப்பள்ளியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 30).இவருக்கு திருமணமாகி பரிமளா என்ற மனைவியும், ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது.
சம்பவத்தன்று மாதேஷ் வேலை தேடி பேரிகைக்கு வந்துள்ளார்.
மதியம் அதிக அளவு மது அருந்தி விட்டு பேரிகை சாலையில் அண்ணா நகர் அருகே உள்ள சுடுகாட்டில் இருந்துள்ளார். இங்கு மாடு, ஆடுகள், மக்கள் கை கால் கழுவி செல்ல தண்ணீர் தொட்டி உள்ளது.
தண்ணீர் அதிக அளவு உள்ள இந்த தொட்டியில் மாதேஷ் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.
மாடு, ஆடுகளுக்கு தண்ணீர் காட்ட வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பேரிகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் இறந்து கிடந்த மாதேஷ் உடலை மீட்டு ஒசூர் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- முன் வலது கை அபய ஹஸ்தத்தையும், இடது கை வரத முத்திரையிலும் உள்ளன.
- இக்கருங்கல் சிற்பம் பார்ப்பதற்கு ஒரு தேரில் உள்ள மரச் சிற்பம் போன்று நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
ஓசூர் அருகே பேரிகையில் உள்ள சிவன் கோயிலில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய பார்வதி சிலை உள்ளது.
இந்த சிலை குறித்து, ஆய்வு செய்த கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓசூர் அருகே உள்ள பேரிகையில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பார்வதியின் சிலை 700 வருடங்களுக்கு முந்தையது. கருப்பு நிறத்திலான கருங்கல்லால் 4.5 அடி உயரம் கொண்டதாக செய்யப்பட்டுள்ளது.
13- ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலின் எந்தப் பகுதியும் சேதப்படுத்தப்படவில்லை. பார்வதி சன்னதி மட்டும் மரம் வளர்ந்து இடிந்ததால், இடைக்காலத்தில் சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த காலத்தில் செய்யப்பட்ட அதே சிலை இன்னும் அப்படியே பாதுகாப்பாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே இன்னும் வழிபாட்டில் உள்ள பழமையான லிங்கமும், பார்வதி சிலையும் இங்கு தான் உள்ளது. கோவிலின் 700 ஆண்டுகளுக்கு முந்தைய பெயர், திருவத்தீஸ்வரமுடைய நாயனார் என்பதாகும். பார்வதி சிலைக்கு பின் உள்ள பிரபாவளி என்ற பகுதியும் அதே கருங்கல்லால் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. நான்கு கைகள் காணப்படுகின்றன.
முன் வலது கை அபய ஹஸ்தத்தையும், இடது கை வரத முத்திரையிலும் உள்ளன. பின் கைகளின் பாச அங்குசங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இக்கருங்கல் சிற்பம் பார்ப்பதற்கு ஒரு தேரில் உள்ள மரச் சிற்பம் போன்று நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், வரலாற்று ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
- அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார்.
- சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி
அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் மது என்கிற ஹேம்நாத் தலைமை தாங்கினார்.
முன்னாள் நகராட்சி துணை தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிருஷ்ணகிரி முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கோவிந்தராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் அண்ணாவின் பிறந்த நாளை அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை கழக அமைப்புகளிலும் சிறப்பாக கொண்டாடுவது. தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவிப்பது, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார்.
அவர் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாங்கள் அவருடன் இருக்கிறோம். நிச்சயமாக அ.தி.மு.க. ஒன்றுபடும். சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவர் இணைவார் என தெரிவித்தார்.
இதில் முன்னாள் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வம், முன்னாள் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராதா கார்த்திக், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், ஸ்ரீராமுலு, நிர்வாகிகள் நாகரத்தினம், ராமு, ராஜேந்திரன், கிருபானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தால் அவற்றை வருகின்ற 19-ம் தேதிக்குள் வனத்துறை அல்லது ஊர் பிரமுகர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
- உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும்.
வேப்பனபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளியில் வனத்துறை சார்பில் கிருஷ்ணகிரி வனக்காப்பாளர் சம்பத்குமார் தலைமையில் கள்ள துப்பாக்கியை ஒழிப்போம், யானைகளை காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேப்பனப்பள்ளியிப் கொங்கனப்பள்ளி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தால் அவற்றை வருகின்ற 19-ம் தேதிக்குள் வனத்துறை அல்லது ஊர் பிரமுகர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும். மேலும் கடுமையான நவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வனகாப்பாளர்கள் அண்ணா துரை, தேவனந்தன், வெங்கடாசலம் மற்றும் வனக்காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உயிரிழந்து கிடந்த குரங்கை ஊர்வலமாகக் கொண்டு சென்று, ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே இந்து மத முறைப்படி இறுதி சடங்குகள் செய்தனர்.
- 6 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி உள்ளே குரங்கின் உடலை இறக்கி அடக்கம் செய்து பின்னர் இறுதி மரியாதை செலுத்தினர்.
ஓசூர்,
ஓசூரில், போஸ் பஜார் பகுதியில் குரங்கு ஒன்று இறந்து கிடப்பதாக விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அமைப்பின் நிர்வாகிகள் அங்கு சென்று உயிரிழந்து கிடந்த குரங்கை ஊர்வலமாகக் கொண்டு சென்று, ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே இந்து மத முறைப்படி இறுதி சடங்குகள் செய்தனர்.
பின்னர் 6 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி உள்ளே குரங்கின் உடலை இறக்கி அடக்கம் செய்து பின்னர் இறுதி மரியாதை செலுத்தினர். இதில், விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உனிசெட்டி என்ற இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தவுடன் சாலை வசதி சரியில்லை என்று கூறி ஆம்புலன்ஸ் டிரைவர் பெண்ணை கீழே இறக்கிவிட்டு சென்று விட்டார்.
- இரவு 7 மணியளவில் வந்த வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் மலைக்கிராமத்துக்கு சென்று சேர்ந்துள்ளார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கோடகரை பகுதியை சேர்ந்த 27 வயது பழங்குடியின பெண் ஒருவர் தனது 4-வது பிரசவத்துக்காக கடந்த 8-ந்தேதி ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் 10-ந்தேதி கருத்தடை ஆபரேசன் செய்துள்ளனர். இதையடுத்து நேற்று மதியம் அந்த பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனது தாய் மற்றும் குழந்தையுடன் அரசு ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
உனிசெட்டி என்ற இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தவுடன் இதற்கு மேல் சாலை வசதி சரியில்லை என்று கூறி ஆம்புலன்ஸ் டிரைவர் அவர்களை கீழே இறக்கிவிட்டு சென்று விட்டார்.
பழங்குடியினர் நலத்துறை சார்பில் தேன்கனிக்கோட்டை-கோடகரை இடையே இயக்கப்படும் வாகனமும் 3 மணிக்கு புறப்பட்டு சென்று விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் பச்சிளங்குழந்தையுடன் அவர்கள் தவித்துள்ளனர்.
பின்னர் தங்களது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் சுகாதார துறை இணை இயக்குனர் பரமசிவனுக்கு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரது ஏற்பாட்டில் இரவு 7 மணியளவில் வந்த வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் மலைக்கிராமத்துக்கு சென்று சேர்ந்துள்ளார்.
உனிசெட்டியிலிருந்து கோடகரை செல்வதற்கு 15 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பச்சிளம் குழந்தையுடன் நடு வழியில் ஆம்புலன்சிலிருந்து இறக்கிவிட்டு சென்ற இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட டிரைவரை உயர் அதிகாரிகள் அழைத்து எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.






