என் மலர்
கிருஷ்ணகிரி
- சொத்தை தனக்கு பிரித்து தரவேண்டும் என்று சாமிநாதனிடம் சந்திரன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்தார்.
மத்தூர் ,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள மிட்டபள்ளி காமராஜநகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 59). இவரது மகன் சந்திரன் (37).
பூர்வீக சொத்தை தனக்கு பிரித்து தரவேண்டும் என்று சாமிநாதனிடம் சந்திரன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இதேபோல் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் அடைந்த சந்திரன் இரும்பு கம்பியால் சாமிநாதனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சாமிநாதன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் கொடுத்த புகாரின்பேரில் சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்தார்.
- பள்ளி மாணவியை, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூருக்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
- மாணவியை மீட்டு அவரை கடத்தி வந்ததாக வாலிபர் அப்துல் வாகாவை கைது செய்தனர்.
ஓசூர்,
அசாம் மாநிலம் காம்ருப் மாவட்டம் பகுருதியா பகுதியை சேர்ந்த அப்துல் வாகா (வயது 23) என்ற வாலிபர், அதே பகுதியை சேர்ந்த 10- ம் வகுப்பு படித்து வந்த 14 வயது பள்ளி மாணவியை, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூருக்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஓசூர் சிப்காட் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
அப்துல் வாகா, ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
பள்ளி மாணவி கடத்தல் குறித்து அவரது பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், அசாம் மாநிலம் நாகர் பெரா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்துல் வாகாவின் செல்போன் எண்ணை கண்காணித்து அவர் ஓசூர் பகுதியில் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் சிசிர் குமார் பாசுபதி தலைமையிலான.பின்னர், போலீசார் அந்த மாணவியை மீட்டு அவரை கடத்தி வந்ததாக வாலிபர் அப்துல் வாகாவை கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து இருவருக்கும் ஓசூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், அசாம் மாநிலத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
- போலீசார் பாலிகானப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
- 2 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் பாகலூர் போலீசார் பாலிகானப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அந்த ஊரை சேர்ந்த கிருஷ்ணப்பா (29), மனோகர் (29), பிரகாஷ் (32), நாகேந்திரன் (36), முனிகிருஷ்ணா (29), அமர்நாத் (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,110 மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல சூளகிரி போலீசார் தொட்டூர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய செம்பரசனப்பள்ளி அருகே உள்ள கட்டிகானப்பள்ளியை சேர்ந்த முருகேசன் (38), மாரண்டப்பள்ளி தங்கபாண்டியன் (32), ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேர் தப்பி ஓடி விட்டனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது. ஓசூர் அட்கோ போலீசார் முனிதேவி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு புறம்போக்கு நிலத்தில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த முனிதேவி நகர் ரமேஷ்குமார் (27), மாதேஷ் (34), பாலாஜி நகர் குமார் (40), முல்லைவேந்தன் நகர் சண்முகம் (33), கோவிந்தசாமி (40), முனிதேவி நகர் தங்கவேல் (47) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
- இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
- இதில் காயம் அடைந்த பாபு, பிரவீன்குமார், நாகேஷ் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ஓசூர்,
ஓசூர் சிப்காட் மூக்கண்டப்பள்ளி எம்.எம். நகரை சேர்ந்தவர் பாபு (வயது 19). எலக்ட்ரீசியன். அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (32). கடந்த 18-ந் தேதி பாபு மோட்டார்சைக்கிளில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு மெடிக்கல் கடை அருகில் சென்ற போது மோட்டார்சைக்கிள் பழுதாகி நின்று விட்டது. இதனால் பாபு மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்தினார். அந்த நேரம் அங்கு வந்த சுரேஷ் எதற்காக இங்கே மோட்டார்சைக்கிளை நிறுத்தினாய் என கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி பாபுவை சுரேஷ், பேசுவதற்காக அழைத்தார். அந்த நேரம் பாபுவும், அவரது நண்பர்கள் பிரவீன்குமார் (19), நாகேஷ் (20) ஆகியோர் சென்றனர். அப்போது சுரேஷ் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த சந்தீப் (22), சிவக்குமார் (23), பசவராஜ் ஆகியோர், பாபுவையும், அவரது நண்பர்களையும் தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த பாபு, பிரவீன்குமார், நாகேஷ் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அது தொடர்பாக பாபு கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் சுரேஷ், சந்தீப், சிவக்குமார், பசவராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை சோதனை செய்தனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி பகுதியில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள மலையாண்டஅள்ளியை சேர்ந்த ராஜ்குமார் (38) என்பது தெரியவந்தது. இவர் நாகரசம்பட்டி, வேலம்பட்டி பகுதிகளில் கடைகளுக்கு குட்கா சப்ளை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். கைதான அவரை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- இவர்களுக்குள் வழித்தட பிரச்சினை கடந்த 6 மாதங்களாக இருந்து வருகிறது.
- 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி தாலுகா காவேரிப்பட்டணம் அருகே உள்ள நெடுக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 48). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (62). இவர்கள் அருகருகில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்குள் வழித்தட பிரச்சினை கடந்த 6 மாதங்களாக இருந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி அந்த வழித்தட பாதையில் மகேஸ்வரன் சென்றார். அப்போது அங்கு வந்த வேடியப்பன் இது குறித்து கேட்டார். அந்த நேரம் ஏற்பட்ட பிரச்சினையில் மகேஸ்வரனை வேடியப்பன் தரப்பினர் கல்லால் தாக்கினார்கள். மேலும் கத்தியால் குத்தினார்கள். இதில் காயம் அடைந்த மகேஸ்வரன் சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வேடியப்பன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஏரிக்கரையில் தினந்தோறும் ஆடு, மாடுகளை மேய்ப்பது வழக்கம்.
- காட்டுப்பன்றி வெங்கடராமப்பா மீது பாய்ந்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ள சானபோகனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடராமப்பா (வயது65).
இவர் அந்தக் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியோரம் உள்ள ஏரிக்கரையில் தினந்தோறும் ஆடு, மாடுகளை மேய்ப்பது வழக்கம். அது போல் நேற்றும் ஆடுமாடுகளுடன் சென்று மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது மாலை வனப்பகுதியிலிருந்து தீடிரென வெளியேறிய காட்டுப்பன்றி வெங்கடராமப்பா மீது பாய்ந்தது. வயதான காரணத்தினால் அவரால் ஓட முடியவில்லை.
அதனால் கீழே விழுந்தவரை கை, கால், தொடை பகுதியில் காட்டுப்பன்றி கடித்து குதறியதால் வலியால் அலறியதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவரைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காட்டு பன்றிகள் கிராமத்திற்குள் வராதவாறு அங்கேயும் முகாமிட்டு தீவிர கண்காணித்து வருகின்றனர்.
மாடு மேய்க்க சென்ற முதியவரை காட்டு பன்றி தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விஜயதசமியை முன்னிட்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது.
- தலைமை ஆசிரியரை 04343 - 234001 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) திரிவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில், குரலிசை (பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவாரம், பரத நாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியவற்றிற்கு கடந்த ஜூன் மாதம் முதல் மூன்றாண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரும் விஜயதசமியை முன்னிட்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்கு 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரும் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அரசு பஸ்களில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயணச் சலுகை, வசதி அளிக்கப்படும். மேலும் மூன்றாண்டு பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் மற்றும் கோவில்களில் பணி, அரசுப் பள்ளிகள், மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியரை 04343 - 234001 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மொத்தம் 284 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
- உதவி பொறியாளர் மோகன் சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, தையல் எந்திரம், சலவை பெட்டி, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 284 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
அதை பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம், பில்லனகுப்பம் ஊராட்சி யில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடியில், அனை வருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 4 பயனாளிக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம், பில்லன குப்பம் ஊராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 528 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 528 வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி கொண்டதாகும். ஒரு குடியிருப்புக்கான செலவு தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை தவிர்த்து பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் பயனாளிகள் வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் பயன் பெற பயனாளிகள் தனது பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ வீடு மற்றும் வீட்டுமனை இல்லாதவராக இருத்தல் வேண்டும். மாத வருமானம் ரூ. 25 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், உதவி ஆணையர் (ஆயம்) பாலகுரு, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் மோகன் சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மின்வாரிய என்ஜினியர் அசோசியேசன் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், என்ஜினி யர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன், சி.ஐ.டி.யூ., மாவட்டத் தலைவர் துரை, பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிரிதரன், அண்ணா தொழிற் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜ், அம்பேத்கர் எம்ளாயிஸ் யூனியன் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவப்பிரகாசம், சம்மேளனம் மாவட்டத் தலைவர் ரங்கநாதன், எம்ளாயிஸ் பெடரேசன் மாநில செயலாளர் டேவிட், பாட்டாளி தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சக்திவேல், ஓய்வுபெற்றோர் நலச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்திரசேகர், என்ஜினியர்ஸ் யூனியன் மாவட்டத் தலைவர் மாணிக்கம், என்.எல்.ஓ., மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினார்.
இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை தவிர மற்ற அனைத்து சங்கத்தினரும் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில், மறுபகிர்வு, அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். மின்வாரிய பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வை உடனடி யாக வழங்க வேண்டும். காலிப்பணி யிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். மின்சார மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 600-க்கும் மேற்பட்ட மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- முதன்மை நிகழ்ச்சியாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
- கணினி அறிவியல் துறை பேராசிரியர் கவிதா ஏற்பாடு செய்திருந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்ட விழாவில் முதன்மை நிகழ்ச்சியாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.
நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சென்னப்பள்ளி ஊராட்சியில் இரண்டாம் நிகழ்ச்சியாக தூய்மைப் பணியினை மேற்கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
மேலும் சூளகிரி வட்டார மாதிரி கிராமத்தில் மியோவாக்கி, மண்புழு உரம், மக்கும் குப்பை , மக்காத குப்பைகளை தரம் பிரித்து களப்பணி மேற்கொண்டனர் .
இந்நிகழ்ச்சியில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி செல்வம், ஊராட்சி மன்ற துணை தலைவர் சுசீலா திம்மராயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவின் நிறைவாக மஞ்ச பை விழிப்புணர்வினை நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஏற்படுத்தினர். திட்ட அலுவலர்கள் ஜெகன், ராமமூர்த்தி, ஸ்டீபன் விக்டர் ஆண்டனி மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியர் கவிதா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
- பா.ஜனதா பட்டியல் அணியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
- மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஆர்.கே.ரவி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்ப பிரிவின் மாநில பொறுப்பாளர் கோபி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில், கிருஷ்ணகிரியில் மாலை நேரத்திலும் உழவர் சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், பா.ஜனதா நிர்வாகிகள் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பட்டியல் அணி பொதுச் செயலாளர் திருமுகம், முருகம்மாள், கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் சந்தியா, துணை தலைவர்கள் சக்தி, பாரதி மற்றும் மாவட்ட செயலாளர் வேலன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






