என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயனாளிக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
பில்லனகுப்பம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடியில் 4 பயனாளிக்கு குடியிருப்பு ஒதுக்கீடு -கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆணைகளை வழங்கினார்
- மொத்தம் 284 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
- உதவி பொறியாளர் மோகன் சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, தையல் எந்திரம், சலவை பெட்டி, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 284 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
அதை பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம், பில்லனகுப்பம் ஊராட்சி யில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடியில், அனை வருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 4 பயனாளிக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம், பில்லன குப்பம் ஊராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 528 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 528 வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி கொண்டதாகும். ஒரு குடியிருப்புக்கான செலவு தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை தவிர்த்து பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் பயனாளிகள் வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் பயன் பெற பயனாளிகள் தனது பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ வீடு மற்றும் வீட்டுமனை இல்லாதவராக இருத்தல் வேண்டும். மாத வருமானம் ரூ. 25 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், உதவி ஆணையர் (ஆயம்) பாலகுரு, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் மோகன் சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






