என் மலர்
கிருஷ்ணகிரி
- அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜ் துவக்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜ் துவக்கி வைத்தார். பேரணியில் மாணவ, மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி பள்ளியில் துவங்கி பேரூந்து நிலையம் வழியாக வட்டாச்சியர் அலுவலகம் வரை சென்று மீண்டும் பள்ளியில் முடிவுற்றது. பேரணியில் மாணவர்கள் ஊனம் என்பது அடையாளம் அல்ல, மாற்றத்திற்க்கான திறன் மாற்றுத்திறன் போன்ற வாசகங்களை எழுப்பி சென்றனர்.
- நேற்று மர்ம நபர்கள் 3 பேர் ஊழலுக்கு எதிராக பொதுகூட்டம் நடத்த வேண்டும் என கேட்டுள்ளனர்.
- பணம் எதுவும் தரமுடியாது என்று கூறியுள்ளதால் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கோப்ரட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது46). இவர் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மர்ம நபர்கள் 3 பேர் ஊழலுக்கு எதிராக பொதுகூட்டம் நடத்த வேண்டும். அதனால் பணம் தாருங்கள் என்று கேட்டுள்ளனர். இதற்கு அவர் பணம் எதுவும் தரமுடியாது என்று கூறியுள்ளதால் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து கோபிநாத் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த மாணிக்கம், வெண்ணாம்பட்டியை சேர்ந்த இளங்கோவன், சோகத்தூரை சேர்ந்த மாதவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்கள் இதே போல் சூளகிரியில் உள்ள ஒரு லாட்ஜ்க்கு சென்று அங்கும் பணம் கேட்டு மிரட்டியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
- தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 3 யானைகளும் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- நேற்று இரவு யானைகளை மேலுமலை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அடித்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி அருகே பனகமுட்லுவை ஒட்டிய வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டிருந்தன. அவை பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
நேற்று முன்தினம் இரவு இந்த 3 யானைகளும் இடம் பெயர்ந்து குல்நகர் வழியாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் முகாமிட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 3 யானைகளும் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் டோல்கேட் அருகே சுற்றிதிரிந்தது.
ஒரு பக்கம் ஆறு உள்ளதாலும், மறுபக்கம் தேசிய நெடுஞ்சாலை உள்ளதாலும் எந்த பக்கமும் செல்லாமல் யானை அலைந்து கொண்டு இருந்தது.
நேற்று இரவு யானைகளை மேலுமலை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதி குடியுருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.
- ஜங்சன் பகுதியில் சென்றபோது மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
- ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்ற போது அவ்வழியாக வந்த லாரி மோதி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பில்லண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 53).இவர் தனது உறவினர் முனிராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சித்தாரிமேடு ஜங்சன் பகுதியில் சென்றபோது மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே சின்னம்மாள் உயிரிழந்தார்.காயம் அடைந்த முனிராஜ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியை சேர்ந்த அருண்குமார்(22)என்ற வாலிபர் தனது உறவினர் பிரகலாதன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்ற போது அவ்வழியாக வந்த லாரி மோதி உயிரிழந்தார்.
காயமடைந்த பிரகலாதன் தந்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
- அரசு பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வருகிறார்.
- விடுதியை விட்டு வெளியே சென்ற மணிகண்டன் அதன்பிறகு விடுதிக்கு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள போச்சாரம்பள்ளி பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 17).கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் உள்ள அரசு பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று விடுதியை விட்டு வெளியே சென்ற மணிகண்டன் அதன்பிறகு விடுதிக்கு திரும்பவில்லை.இது குறித்த தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல பர்கூர் பகுதியை சேர்ந்த ஜாஹீர் பாஷா என்பவரது மகளான 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 14-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார்.இது குறித்து பெறப்பட்ட புகாரின்பேரில் பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- அதிகாரிகள் கிருஷ்ணகிரி மகாராஜகடை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 5 மாதத்தில் மட்டும் 200 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதிகாரிகள் கிருஷ்ணகிரி மகாராஜகடை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- கடந்த 5 மாதத்தில் மட்டும் 200 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணகிரி மகாராஜகடை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேல்பட்டி அருகே உள்ள தர்மராஜா நகர் பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த காரை சோதனை செய்தனர். அதில் 2,250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. மேலும் காரின் உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது தாசில்தார் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் உணவுக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பறக்கும்படை தாசில்தார் இளங்கோ நிறுவனம்:-
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 மாதத்தில் மட்டும் 200 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுமக்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதியு ள்ளாவதாகவும் கூறப்படுகிறது.
- போரா ட்டத்தில் ஈடுபட்ட வர்களை அழைத்து கலெக்டர் அலுவ லகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதி தேன்கனிகோட்டை அடுத்த கொரட்ட கிரியில் 6 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
இந்த கல்குவாரிகளால் அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைவதாகவும், பொதுமக்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கல்குவாரிகளில் உள்ள கனரக வாகனங்கள், லாரிகள் அந்த கிராமத்தின் வழியாக செல்லும் போதும் பள்ளி குழந்தைகள் சத்தத்தினால் படிக்க முடியவில்லை.
கல்குவாரிகளில் கல் உடைக்க வைக்கும் வெடி வெடிப்பதன் மூலம் அதிகப்படியான சத்தம், நச்சு காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு கர்ப்பிணி பெண்கள் அதிகமாக பாதிக்கபடுகிறார்கள்.
கல்குவாரிகளில் இருந்து வரும் லாரிகள் கிராமத்தின் வழியாக செல்வதை தடுக்க வேண்டும். இதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியவில்லை. இதனால் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த வித பலனும் இல்லை.
இதனால் அப்பகுதி மக்கள் ஊரை விட்டு வெளியேறி ஊருக்கு வெளியே காட்டில் கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தினர்.
இது பற்றி அறிந்த கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி நேற்று மாலை போரட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து கலெக்டர் அலுவ லகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஆனால் பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஏற்க மறுத்து, தங்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி இன்று 6-வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போலீசார் அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கோஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது.
3 சதவீத அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியர் உள்பட அனைவருக்கும் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியருக்கு தமிழகம் முழுவதும் ஒரே சீரான ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய ஊழியருக்கு பின்பாக்கி ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மத்திய அமைப்பு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆத்மநாதன், மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் சங்க பொறுப்பாளர்கள் செந்தில்குமார், விஜயன், கோவிந்தராசன், சிவலிங்கம், சிவா, சிவசங்கர், அழகேசன், வீராஜி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மல்லையன் நன்றி கூறினார்.
- அமைதி பேச்சுவார்த்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
- மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியிலிருந்தும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றி தரப்படும்.
கிருஷ்ணகிரி,
தேன்கனிக்கோட்டை தாலுகா கொரட்டகிரி கிராமம் வழியாக அருகில் உள்ள கல்குவாரிகளை சேர்ந்த கனரக வாகனங்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் கல்குவாரி களின் மீது சுமத்தப்பட்டுள்ள விதிமீறல்கள் குறித்து புல தணிக்கை செய்து அறிக்கை அளிக்க ஓசூர் உதவி கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் மாசு ஏற்படுவது குறித்தும், கிரஷர் குவாரிகளிலிருந்து வெளிவரும் மாசுகளின் அளவீடுகள் குறித்தும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு பொறியாளர்கள் நேரடி தொடர் கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படை நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரட்டகிரி கிராமத்தின் வழியாக கனரக வாகனங்கள் முற்றிலும் செல்ல தடை விதிக்க இயலாது. எனவே குறைந்த அளவிலான வாகனங்களை மட்டும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பள்ளி நேரங்களை தவிர்த்து இயக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இப்பகுதிகளில் உள்ள கிரஷர்களின் வாகனங்கள் அனைத்தும் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்லாமல் பல்வேறு மாற்று பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
கொரட்டகிரி கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை, பள்ளி கட்டிட வசதிகள், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரிக்கைகளின் அடிப்படையில் கனிம நிதியிலிருந்து மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும்.
எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது மக்களின் இருப்பிடம் மற்றும் வேளாண் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகள், ஜல்லி கிரஷர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.
- கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை மற்றும் நடமாடும் மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 போட்டித் தேர்வு நடைபெறுவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு 19 தேர்வு கூடங்களில் 5,512 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வை கண்காணிக்க 19 முதன்மை கண்காணிப்பாளர்களும், 2 பறக்கும்படையும், 6 நடமாடும் அலகு, 19 ஆய்வு அலுவலர்கள், 20 வீடியோ கிராபர்கள், 6 ஆயுதம் ஏந்திய காவலர்கள், 19 தேர்வு கூட காவலர்கள் என மொத்தம் 91 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாசில்தார்கள் மூலம் தேர்வு மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தளவாடங்கள் இல்லை எனும் பட்சத்தில் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வழித்தட வரைபடமும், கிருஷ்ணகிரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சார்பில் 19 தேர்வு கூடங்களுக்கு தேர்வாளர்கள் செல்ல ஏதுவாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்கவும், தீயணைப்புத்துறை சார்பாக பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டள்ளன. இதைத் தவிர நகராட்சி ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மூலம் தேர்வு நாளன்று குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நலப்பணிகள் இணை இயக்குனர் சார்பாக கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை மற்றும் நடமாடும் மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஸ்குமார், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, போக்குவரத்து துறை, கல்வித்துறை, தீயணைப்புத்துறை, பேரூராட்சிகள் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், கருவூலத்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 2022 - 23-ம் ஆண்டிற்கு மீன்பிடிப்பதற்கான ஏலம் நடத்தப்பட்டது.
- 10 மடங்கிற்கு அதிகமாக ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் தோட்ட திம்மனஹள்ளி, கொப்பகரை, பிள்ளையார் அக்ரஹாரம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு உள்பட்ட ஏரிகளில் 2022 - 23-ம் ஆண்டு மீன்பிடிக்க ஏலம் நடத்தப்பட்டது.
முன்வைப்பு தொகை செலுத்தி 15-க்கும் மேற்பட்டோர் இந்த ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் கடந்த முறை ஏலம் விடப்பட்டதை விட 10 மடங்கிற்கு அதிகமாக ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டதால் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அதிகாரிக ளுடன் ஏலம் எடுக்க வந்தவர்கள் வாக்குவாதத்தில் முதலிடம். அப்போது பேசிய கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி, இது ஏலத்தொகை நாங்கள் செய்தது அல்ல.கிருஷ்ணகிரியிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை இயக்குனர் மூலம்தான் ஏலத்தொகை முடிவு செய்யப்பட்டது.
ஏலத்தொகை அதிகம் என்று கூறப்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மீண்டும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து ஏலம் எடுக்க வந்தவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.இதையடுத்து மறு தேதி குறிப்பிடாமல் ஏலம் தள்ளி வைக்கப்பட்டது.
- சிறப்பு அழைப்பாளராக, ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா கலந்து கொண்டு பேசினார்.
- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூரில் தேன்கனிக் கோட்டை சாலையில் உள்ள புனித ஜான் போஸ்கோ அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் ஆஞ்சலா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக, ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா கலந்து கொண்டு பேசினார். மேலும், ஆராதனை சமூக சேவை மைய நிறுவனர் ராதா, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கி கூறினார்.
விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில், பள்ளி தலைமையாசிரியை ஜெயந்தி, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் பார்வதி நாகராஜ், இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.






