என் மலர்
உள்ளூர் செய்திகள்

விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகள், ஜல்லி கிரஷர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் -கலெக்டர் எச்சரிக்கை
- அமைதி பேச்சுவார்த்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
- மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியிலிருந்தும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றி தரப்படும்.
கிருஷ்ணகிரி,
தேன்கனிக்கோட்டை தாலுகா கொரட்டகிரி கிராமம் வழியாக அருகில் உள்ள கல்குவாரிகளை சேர்ந்த கனரக வாகனங்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் கல்குவாரி களின் மீது சுமத்தப்பட்டுள்ள விதிமீறல்கள் குறித்து புல தணிக்கை செய்து அறிக்கை அளிக்க ஓசூர் உதவி கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் மாசு ஏற்படுவது குறித்தும், கிரஷர் குவாரிகளிலிருந்து வெளிவரும் மாசுகளின் அளவீடுகள் குறித்தும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு பொறியாளர்கள் நேரடி தொடர் கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படை நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரட்டகிரி கிராமத்தின் வழியாக கனரக வாகனங்கள் முற்றிலும் செல்ல தடை விதிக்க இயலாது. எனவே குறைந்த அளவிலான வாகனங்களை மட்டும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பள்ளி நேரங்களை தவிர்த்து இயக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இப்பகுதிகளில் உள்ள கிரஷர்களின் வாகனங்கள் அனைத்தும் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்லாமல் பல்வேறு மாற்று பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
கொரட்டகிரி கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை, பள்ளி கட்டிட வசதிகள், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரிக்கைகளின் அடிப்படையில் கனிம நிதியிலிருந்து மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும்.
எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது மக்களின் இருப்பிடம் மற்றும் வேளாண் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகள், ஜல்லி கிரஷர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






