என் மலர்
கிருஷ்ணகிரி
- ஜனாதிபதி படமோ, பிரதமர் படமோ இல்லாதது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.
- மக்களுக்கும், அரசுக்கும் மிகவும் நெருக்கமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓசூர்,
ஓசூரில் பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங், முன்னதாக ஓசூரில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
தமிழகத்தில் தி.மு.க. அரசு, அனைத்து வகையிலும் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. உதாரணமாக, கிருஷ்ணகிரியில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். ஆனால் அந்த அறையில் ஜனாதிபதி படமோ, பிரதமர் படமோ இல்லாதது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.
தி.மு.க. அரசு, கூட்டாட்சி அமைப்பையே உடைத்து நாசமாக்குகிறது.தமிழகத்தை பொறுத்த வரையில் மத்திய அரசு குறிப்பாக, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு, 8 ஆண்டுகளில் மக்களுக்கான நலத் திட்டங்களை பல மடங்காக உயர்த்தி வழங்கியுள்ளது. முந்தைய, காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியதை காட்டிலும், அதிகளவில் வழங்கி, தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றி வருகிறது.
எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதைப் போல், எந்த நிலையிலும், மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசாட்சியில் இருந்தபோது மத்திய மந்திரிகள்,பொது மக்களை நேரில் சந்திப்பதே அரிதாக இருந்தது. இன்று, மக்களுக்கும், அரசுக்கும் மிகவும் நெருக்கமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான அரசு, தொடர்ந்து தமிழகத்திற்கும், மற்றும் அதன் முன்னேற்றத்திற்கு நலத்திட்டங்களை வழங்கிக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
முன்னாள் எம்.பி.க்கள் நரசிம்மன், கே.பி.ராமலிங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சுய உதவி குழுவினரின் பொருளாதாரத்தை தன்னிறைவு அடையும் வகையில் செய்யப்பட்டு வருகிறது.
- நெல் நடவு இயந்திரம், கதிர் அடிக்கும் இயந்திரங்கள், போன்றவை மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. என அமைச்சர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரியில் 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வரவிழா நேற்று நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துகொண்டு பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கி வைத்தும், நிறைவு பெற்ற திட்டங்களையும், புதிய கட்டிடங்களையும், புதிய நியாய விலைக் கடைகளை திறந்து வைத்தும், சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் அகில இந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன், விவசாய நகை கடன், சிறு வணிக கடன், மகளிர் சுய உதவி கடன், போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரின் பொருளாதாரத்தை தன்னிறைவு அடையும் வகையில் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 199 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பு ஆண்டு பயிர் கடன் இலக்காக ரூபாய் 220 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் ரூ.13 லட்சத்து 99 விவசாயிகளுக்கு ரூபாய் 111.35 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புக்கான நடைமுறை மூலதன கடனாக 3997 விவசாயிகளுக்கு ரூபாய் 13.6 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர டிராக்டர், பவர் டிரில்லர், நெல் நடவு இயந்திரம், கதிர் அடிக்கும் இயந்திரங்கள், போன்றவை மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. என அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பயிர் கடன், மகளிர் சுய உதவி கடன், மாற்றுத் திறனாளிகள் கடனுதவி, சிறு வணிக கடன், என 578 பயனாளிகளுக்கு ரூபாய் 5 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன், பிரகாஷ், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மின்குறைப்பாட்டினால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
- திறன் உயர்த்தப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மரை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள பச்சிக்கானப்பள்ளி கிராமத்தில் மின்குறைப்பாட்டினால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
அந்த பகுதியில் மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 11 கே.வி.யில் இருந்து 16 கே.வி. ஆக திறன் உயர்த்தப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது-. அதன் திறப்பு விழா நடந்தது.
இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, திறன் உயர்த்தப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மரை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதில் மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர்கள் கோவிந்தராஜ், கந்தசாமி மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், சோக்காடிராஜன், கண்ணியப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஜெயாஆஜி, ஜெயராமன், முன்னாள் பச்சிகானப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் சூரியா பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது.
- ஆன்லைனில் கடன் வாங்குவதற்கு முன்பணம் கட்ட சொன்னால் அவர்களும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆன்லைனில் புதுப்புது வழிகளில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்ள் அதிகரித்துள்ளன. குறைந்த முதலீட்டில் அதிக லாபம், பணம் இரட்டிப்பு, செயல்முறை கட்டணம் என பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, 1,200 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஆன்லைன் கடன் வழங்குவதாக கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டதாக, 160 புகார்கள், குறைந்த முதலீட்டுக்கு அதிக பணம் எனக்கூறி 140, போலி வாடிக்கையாளர் சேவை மையம் எனக்கூறி, 116, 'பான் கார்டு அப்டேட்', செயல்முறை கட்டணம், ஜி.எஸ்.டி., இவற்றிக்கு முன் பணம் கட்டினால் பெரிய கடன் தொகை எனக்கூறி, 92 புகார்களும் பெறப்பட்டுள்ளன.
இது போன்ற மோசடிகளில் ஏமாறாமல் இருக்க செல்போனில் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும்போது செயலின் நம்பகத்தன்மை, அதில் சுயவிவரங்களை கொடுக்கலாமா என ஆராய வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்யும் முன் நிறுவனத்தின் உண்மைதன்மையை அறிய வேண்டும்.
ஆன்லைனில், 99 சதவீத நிறுவனங்கள் போலியாக உள்ளன. நாம் செலுத்தும் பணத்திற்கு முதலில் லாபம் தருவது போல் பணம் கொடுத்து, முதலீடு செய்யும் பெரிய தொகையை ஏமாற்றி விடுவார்கள். எனவே ஆன்லைன் முதலீட்டை தவிர்ப்பது நல்லது. ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள அவர்களது இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
'கூகுள் கஸ்டமர் கேர்' என தேடி அந்த எண்களை தொடர்பு கொண்டால் மோசடி நிகழ வாய்ப்புள்ளது. 'பான்கார்டு' விவரங்களை பதிய செல்போனுக்கு எந்த வங்கியும்
குறுஞ்செய்தி அனுப்புவதில்லை. அவ்வாறு வருபவை அனைத்தும் போலியானது. கடன் தருவதாக கூறும் நிறுவனத்தின் உண்மை தன்மையை அறிந்த பின்னரே கடனுக்குமுயற்சிக்க வேண்டும். ஆன்லைனில் கடன் வாங்குவதற்கு முன்பணம் கட்ட சொன்னால் அவர்களும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது.
மேற்கண்ட வகைகளில் பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்தால், 1930 என்ற 'டோல்பிரி' எண் அல்லது இணையதள முகவரியில் புகார் அளிக்கவும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசிலும் நேரில் புகார் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04343-294755 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜூடோ விளையாட்டு போட்டி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.
- தாவரவியல் பிரிவின் 3-ம் ஆண்டு மாணவி அனிதா 63 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.
கிருஷ்ணகிரி,
சேலம் பெரியார் பல்கலைக் கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஜூடோ விளையாட்டு போட்டி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாவரவியல் பிரிவின் 3-ம் ஆண்டு மாணவி அனிதா 63 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.
வெற்றி பெற்ற விளை யாட்டு வீராங்கனைக்கு கல்லூரியின் முதல்வர் தனபால் வாழ்த்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மேலும் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் மாணவிக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி பேராசிரியர் விஜய் ஆனந்த் மற்றும் பிரேமா ஆகியோரையும் கல்லூரி முதல்வர் பாராட்டினார். சாதனை படைத்த மாணவியை கல்லூரி பேராசிரியர்கள் வாழ்த்தினார்கள்.
- 12 வீடுகளில் திடீரென மின்பெட்டிகள் (மீட்டர் பாக்ஸ்) தீ பிடித்து சேதமடைந்தன.
- தனியார் குடியிருப்பு பகுதிக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெத்த குள்ளு பகுதியில் நந்தவனா என்ற தனியார் லேஅவுட் உள்ளது. இங்கு 30 வீடுகள் உள்ளன. இந்த நிலையில், அப்பகுதி வழியாக செல்லும் உயர் அழுத்த ஒயர் அறுந்து விழுந்து அருகிலுள்ள மின்கம்பத்தில் உள்ள ஒயருடன் உராய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் 12 வீடுகளில் திடீரென மின்பெட்டிகள் (மீட்டர் பாக்ஸ்) தீ பிடித்து சேதமடைந்தன.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு மக்கள் உடனடியாக தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தாமதமின்றி மின்பெட்டிகள் வழங்கவும் மற்றும் இருட்டில் தவிக்கும் அந்த தனியார் குடியிருப்பு பகுதிக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாகனத்தை திருடி கொண்டு தப்ப முயன்ற 2 பேரை பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார்.
- இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது35). கூலி தொழிலாளியான இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தை கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு ஓட்டன் முன் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு தப்ப முயன்ற 2 பேரை பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பாஞ்சாலியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் கிருபாகரன் (வயது16). பூவத்தியை சேர்ந்த முத்துராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
- சாந்தி நிகேதன் குடியிருப்பு பகுதியில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி 23-வது வார்டுட்பட்ட சாந்தி நிகேதன் குடியிருப்பு பகுதியில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வார்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் அவர் கேட்டறிந்தும், மழைக்காலங்களில் கொசு உற்பத்தியாவதை தடுக்கும் விதமாகவும் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
பின்னர், குடியிருப்பு மக்களின் குறைகளையும் சத்யா கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது மாநகராட்சி பொறியாளர்கள் ராஜேந்திரன், பிரபாகரன், ஸ்ரீகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
- போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- காரை மறித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 299 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஜங்சன் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பட்டு தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 299 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் 2.56 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவர் தெலுங்கானா மாநிலம், ஹதராபாத்தை சேர்ந்த நாகேஷ் தேவசி (வயது32) என்பவரை கைது செய்தனர். கார் மற்றும் குட்காவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
- தொரப்பள்ளி பகுதியில் வந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக புல்லட் வாகனம் மீது மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே நக்சம்மா உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் நக்சம்மா (வயது67). இவரது மகன் சீனிவாசு ஆகியோர் இருசக்கர வாகனம் புல்லட்டில் ஒன்னல்வாடி-பேரண்டப்பள்ளி சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது தொரப்பள்ளி பகுதியில் வந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக புல்லட் வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நக்சம்மா உயிரிழந்தார்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி டோல்கேட்டை இடமாற்றம் செய்ய வேண்டும்
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டோல்கேட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என பர்கூர் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சஞ்சீவி மகாலில், பர்கூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வரவேற்பு ரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் போச்சம்பள்ளி சாந்தமூர்த்தி, பர்கூர் தெற்கு அறிஞர், பேரூர் செயலாளர்கள் வெங்கட்டப்பன், பாபு, பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய பொருளாளர் பிரான்சிஸ், மாவட்ட பிரதிநிதிகள் மாதவன், காந்தி, ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி.யுமான சுகவனம், முன்னாள் எம்எல்ஏ., கோவிந்தசாமி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், நாகராஜ், அஸ்லம், கோதண்டன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.
கூட்டத்தில், இரண்டாம் முறையாக திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துகொள்வது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக மதியழகன் எம்எல்ஏ.வை படேதலாவ் ஏரி கால்வாய் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்து, நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வது.
பர்கூர் தொகுதியில் படேதலாவ் கால்வாயை தனது சொந்த செலவில் சீரமைத்து கொடுத்த மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகனுக்கு நன்றி தெரிவித்துகொள்வது.
பர்கூர் பகுதி மக்கள் தினமும் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போன்ற இடங்களுக்கு சென்று வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறை செல்லும் போதும் கிருஷ்ணகிரி டோல்கேட்டில் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இவருக்கு தீராதவயிற்று வலி பிரச்சினை இருந்து வந்தது.
- விரக்தியடைந்து நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அடுத்துள்ள உழிரனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது54). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இவருக்கு தீராதவயிற்று வலி பிரச்சினை இருந்து வந்தது. இதனால் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் விரக்தியடைந்து நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதே போல் பாகலூர் அடுத்துள்ள பாலவள்ளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். டிரைவரான இவருக்கு மது அருந்து பழக்கம் உள்ளது.
இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று மது அருந்தி வந்த சந்தோசை மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தோஷ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.






