என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திய அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங் ஓசூரில் பேட்டியளித்தபோது எடுத்த படம்.
அரசு அலுவலகங்களில் பிரதமர் படம் இல்லை: தி.மு.க. அரசு கூட்டாட்சி தத்துவத்தையே சிதைக்கிறது -மத்திய அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங் வேதனை
- ஜனாதிபதி படமோ, பிரதமர் படமோ இல்லாதது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.
- மக்களுக்கும், அரசுக்கும் மிகவும் நெருக்கமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓசூர்,
ஓசூரில் பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங், முன்னதாக ஓசூரில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
தமிழகத்தில் தி.மு.க. அரசு, அனைத்து வகையிலும் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. உதாரணமாக, கிருஷ்ணகிரியில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். ஆனால் அந்த அறையில் ஜனாதிபதி படமோ, பிரதமர் படமோ இல்லாதது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.
தி.மு.க. அரசு, கூட்டாட்சி அமைப்பையே உடைத்து நாசமாக்குகிறது.தமிழகத்தை பொறுத்த வரையில் மத்திய அரசு குறிப்பாக, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு, 8 ஆண்டுகளில் மக்களுக்கான நலத் திட்டங்களை பல மடங்காக உயர்த்தி வழங்கியுள்ளது. முந்தைய, காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியதை காட்டிலும், அதிகளவில் வழங்கி, தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றி வருகிறது.
எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதைப் போல், எந்த நிலையிலும், மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசாட்சியில் இருந்தபோது மத்திய மந்திரிகள்,பொது மக்களை நேரில் சந்திப்பதே அரிதாக இருந்தது. இன்று, மக்களுக்கும், அரசுக்கும் மிகவும் நெருக்கமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான அரசு, தொடர்ந்து தமிழகத்திற்கும், மற்றும் அதன் முன்னேற்றத்திற்கு நலத்திட்டங்களை வழங்கிக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
முன்னாள் எம்.பி.க்கள் நரசிம்மன், கே.பி.ராமலிங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.






