என் மலர்
கிருஷ்ணகிரி
- கவர்னர் இங்கு தமிழக அரசிற்கு எதிராக ஒரு அரசியலை செய்து கொண்டிருக்கிறார்.
- தலித் மக்களுக்கு என கொடுக்கப்பட்ட காலிமனை பட்டாக்களில் குடியேற முடியவில்லை.
கிருஷ்ணகிரி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று மாலை கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டிசம்பர் 6-ந் தேதி புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். இந்த நாளில் அம்பேத்கருக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து கட்சி தலைவர்களும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும்.
தமிழ் மண்ணில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு எதிராக இடம் கொடுக்ககூடாது. மக்களவையில் வருகிற 6-ந் தேதி கூடும் குளிர்கால கூட்டத்தொடரில், தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேச இருக்கிறோம்.
குறிப்பாக நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடைசெய்யக்கூடிய சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
கவர்னர் இங்கு தமிழக அரசிற்கு எதிராக ஒரு அரசியலை செய்து கொண்டிருக்கிறார். அவரை தமிழகத்தில் இருந்து திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆணவ கொலைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆணவ கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். மேலும், மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்பவர்களுக்கு அவரவர் மாநிலத்தில் மட்டுமே வாக்குரிமை அளிப்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.
தி.மு.க. அரசு மக்களுக்கான அரசு. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்புகிறேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கிராமங்களில் தலித் மக்களுக்கு என கொடுக்கப்பட்ட காலிமனை பட்டாக்களில் குடியேற முடியவில்லை. கோர்ட்டில் வழக்கு போட்டு காலம் கடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கனியமுதன், தர்மபுரி, கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் பொ. மு நந்தன், தர்மபுரி சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்தி (எ) சமத்துவன், மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- 13 நாளே ஆன பெண் குழந்தை ஒன்று திடீரென இறந்து விட்டது.
- லாவண்யா கல்லாவி போலீசில் குழந்தையின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகேயுள்ள ஒன்னக்கரை பகுதியை சேர்ந்தவர் லாவண்யா (வயது 23). இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் உள்ளன.
இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பிறந்து 13 நாளே ஆன பெண் குழந்தை ஒன்று திடீரென இறந்து விட்டது.இது குறித்து அதிர்ச்சியடைந்த லாவண்யா கல்லாவி போலீசில் குழந்தையின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
- வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றுவிட்டதாக மாணவியின் தந்தை புகார் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள கூத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
இவர் கடந்த 3-ந்தேதி முதல் மாயமாகி விட்டார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராஜ் (வயது 30) என்ற வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றுவிட்டதாக மாணவியின் தந்தை கெலமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி கடந்த 20-ந்தேதி புறப்பட்டுள்ளார்.
- மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மோகன்குமாரை தேடி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள வேங்கனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை.இவரது மகன் மோகன்குமார் (வயது 20). இவர் புதுச்சேரியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
கடந்த மாதம் மோகன்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி கடந்த 20-ந்தேதி புறப்பட்டுள்ளார்.
இதையடுத்து மோகன்குமாரின் தம்பி உடன் சென்று அவரை திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் ஊருக்கு சென்ற மோகன்குமார் அதன்பிறகு யாரையும் தொடர்பு கொண்டு பேசவில்லை.இதையடுத்து புதுச்சேரியில் அவர் வேலை செய்யும் இடத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது மோகன்குமார் அங்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மோகன்குமாரின் தந்தை தங்கதுரை கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மோகன்குமாரை தேடி வருகின்றனர்.
- அதிக அளவில் யூரியா விற்பனை செய்த சில்லரை உர விற்பனையாளர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது.
- 19 சில்லரை உரக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) அறிவழகன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:-
சென்னை வேளாண்மை இயக்குநர் அறிவுரை களின்படி, கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து காரீப் மற்றும் ராபி பருவங்களில் மாதந்தோறும் ஒரே நபருக்கு அதிக அளவில் யூரியா விற்பனை செய்த சில்லரை உர விற்பனையாளர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது.
அதன்படி, யூரியா ரசாயன உரத்தின் பயன்பாட்டை குறைக்கவும், மண் வளத்கை பாதுகாக்கவும் மற்றும் யூரியா, ரசாயன உரம் விவசாயம் தவிர பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தபடாமல் இருக்கவும், வேளாண்மை துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு காரீப் பருவத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) மாதந்தோறும் ஒரே விவசாயிக்கு அதிகப்படி யான யூரியா உரங்களை விற்பனை செய்த 19 சில்லரை உரக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, விதிகளை மீறும் உர விற்பனை நிலையங்களின் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படு கிறது.
இவ்வாறு தனது செய்திக் குறிப்பில் வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) அறிவழகன் தெரிவித்துள்ளார்.
- கன்னியாகுமரி முதல் டெல்லி வரை 3,000 கிமீ தூரம் ஒற்றுமை சுடர் ஓட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
- பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் பத்வாரை வாழ்த்தி வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.
ஓசூர்,
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் கே.எஸ் பத்வார். இவர் உத்தரபிரதேச பட்டாலியனில் என்.சி.சி கமெண்டிங் அலுவலராக பணியாற்றி வருகிறார். தேச ஒற்றுமை, நாட்டு நலன், இளைஞர்களிடையே நாட்டுப்பற்றுஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக, பத்வார் கன்னியாகுமரி முதல் டெல்லி வரை 3,000 கிமீ தூரம் ஒற்றுமை சுடர் ஓட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
தேசிய மாணவர் படை உதயமாகி 75 ஆண்டு களானதை கொண்டாடும் வகையில் இந்த சுடர் ஓட்டத்தை அவர் மேற்கொண்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி கன்னியாகுமரியில் தனது சுடர் ஓட்டத்தை தொடங் கிய பத்வார் தினமும் 50 கிலோமீட்டர் தூரம் ஓட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
சுடர் ஓட்டம் தொடங்கிய 13 நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை கடந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக ஓசூர் வந்தார். கர்நாடகம் நோக்கி சென்ற அவரை, மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியில் பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி ஏந்தி அவரை வரவேற்றனர். பின்னர், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் துணைமேயர் ஆனந்தய்யா ஆகியோர் பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் பத்வாரை வாழ்த்தி வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்வார் பேசினார். இதில், கர்னல் ஏ.கே. சிங்,லெப்டினென்ட் கர்னல் தாகூர், சூரஜ் நாயர், உள்பட பலர் கலந்து கொண்டனர். அடுத்த (ஜனவரி) மாதம் 18-ந்தேதி டெல்லியில் தொடர் ஓட்டத்தை நிறைவு செய்யும் பத்வார், ஜோதியை பிரதமர் மோடியிடம் வழங்குகிறார்.
- சட்ட ஆலோசகர் பதவி தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
- மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டுக்கு நீதிமன்ற பணிகள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளவும், ஆலோசனை வழங்கவும் சட்ட ஆலோசகர் பதவி தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், தகுதி வாய்ந்த பல்கலைக்கழகம் மூலமாக பி.எல்., அல்லது அதற்கு நிகரான சட்டம் சம்மந்தப்பட்ட பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகள் உயர்நீதிமன்றம் அல்லது நீதிமன்றம் குறித்த பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் வழங்கப்படும். விண்ணப்பதாரருடைய பணி திருப்தி அளிக்காத பட்சத்தில் போலீஸ் சுப்பிரண்டு சம்மந்தப்பட்டவருடைய ஒப்பந்தத்தை ரத்து செய்து, வேறு ஒருவரை நியமிக்க அதிகாரம் உடையவர் ஆவார். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு விரைந்து அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
- ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு முகாமினை நடத்த இருக்கிறது.
- அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் நாளை (5ம் தேதி) 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட மேலாளர் (108 ஆம்புலன்ஸ் சேவை) ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
108 சேவை ஒரு கட்டணமில்லாத மருத்துவம், காவல் மற்றும் தீ ஆகிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாகும். இந்த சேவை பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்க கூடிய முற்றிலும் இலவச சேவையாகும். தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ஈ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனத்துடன் அவசரகால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து தமிழக மக்களுக்காக செயலாற்றுகிறது. இந்த ஈ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு முகாமினை நடத்த இருக்கிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் நாளை (5ம் தேதி) 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஓட்டுனர் பணிக்கு, நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும், 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். உயரம் 162.5 செ.மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதி யுடைய விண்ணப்ப தாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பார்ப்பதற்காக கொண்டு வரவேண்டும்.
எழுத்து தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, மனிதவள துறை நேர்காணல், கண் பார்வை மற்றும் மருத்துவம் சம்மந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படுவர் களுக்கு மாத ஊதியமாக ரூ.15,235 வழங்கப்படும். 10 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். இதே போல் மருத்துவ உதவியாளர் பணிக்கு, பி.எஸ்.சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. (12ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் தகுதியானவர்கள் ஆவர்.
வயது 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இரவு மற்றும் பகல் என சுழற்சி முறையில் பணியாற்ற விருப்பமுள்ளவர்களாக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகத் தேர்வு, உடற்கூறியல், முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பான தேர்வு, மனிதவள துறை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,435 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். (பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்). மேலும், விவரம் அறிய விரும்புவோர் 044-28888060, 75, 77 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட மேலாளர் ரஞ்சித் (செல்போன் எண்.7550061108) தெரிவித்துள்ளார்.
- சுமார் 250 யானைகள் முகாமிட்டுள்ளன.
- பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்கு, கர்நாடகா மாநிலத்தில் உள்ள பன்னார்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வந்த யானைகள், தளி, ஜவளகிரி, நொகனூர், தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், சானமாவு, மகராஜகடை மற்றும் வேப்பனபள்ளி பகுதிகளில் உள்ள காப்புக்காடுகளில் முகாமிட்டு, விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன.
குறிப்பாக ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடே துர்க்கம் காப்புக்காட்டில் 50 யானைகள், ஓசூர் - சானமாவு காப்புக்காட்டில் 3 யானைகள், தேன்கனிக் கோட்டை-நொகனூர், தேன்கனிக்கோட்டை, அய்யூர் காப்புக்காடுகளில் 35 யானைகள், ஜவளகிரி- தளி, ஜவளகிரி, பனை, உளிபண்டா காப்புக் காடுகளில் 65 யானைகள், கிருஷ்ணகிரி-மகா ராஜகடை, வேப்பனபள்ளி காப்புக்காடுகளில் 8 யானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளது அஞ்செட்டி- பனை, அஞ்செட்டி, உடுபுராணி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு காப்புக்காடுகளில் 35 யானைகள், உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஹள்ளி காப்புக்காடுகளில் 75 யானைகள் என மொத்தம் சுமார் 250 யானைகள் முகாமிட்டுள்ளன.
இவ்வாறு முகாமிட்டுள்ள யானைக் கூட்டமானது பகல் நேரங்களில் காப்புக் காடுகளில் தங்கியும், இரவு நேரங்களில் காப்புக் காட்டை விட்டு வெளியேறியும், சில நேரங்களில் பகல் முழுவதும் காப்புக்காட்டிற்கு வெளியில் புறம்போக்கு நிலங்களில் முகாமிட்டும், அருகிலுள்ள கிராம விவசாய பகுதிகளுக்குள் சென்று, ராகி, நெல், வாழை, தக்காளி, சோளம் மற்றும் தென்னை உள்ளிட்ட பயிர் வகைகளை உண்டும், சேதப்படுத்தியும் வருகின்றன.
யானைக்கூட்டங்களை, சம்பந்தப் பட்ட வனப் பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் அதிவிரைவு மீட்பு குழுவினர், மீண்டும் அவைகளை பாதுகாப்பாக காப்புக் காடுகளுக்கு அனுப்பி, உயிர் சேதம் மற்றும் பெருமளவு பயிர் சேதங்கள் ஏற்படாமல் தடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், வனப்பணியாளர்கள் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வேட்டைத் தடுப்பு
வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் பொதுமக்கள் காப்புக் காட்டுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும், காப்புக்காட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், விறகு போன்ற எரிபொருட்கள் சேகரிக்க செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் காப்புக்காட்டினை ஒட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் நடமாட வேண்டும் எனவும், இரவு நேரங்களில் வீட்டின் வெளியில் மின் விளக்குகளை ஒளிரச் செய்யுவும், மேற்படி காப்புக்காடுகளைச் சுற்றியுளள கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் குறித்து அறிவிப்பு செய்து பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், விவசாய நிலங்களை சுற்றி மின்வேலி அமைப்பதை தவிர்க்கவும், அவ்வாறு மின்வேலி அமைப்பது கண்டுபிடிக்கப்பட்டால், வன உரியின பாதுகாப்பு சட்டத்தின்படி, வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். வன உயிரினங்களால் ஏற்படும் பயிர் சேத விவரங்களை, சம்பந்தப்பட்ட வனச்சரக சரக அலுவலகங்களில் தெரிவிக்கும்பட்சத்தில், வனத்துறை மூலம் விரைவில் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- 2 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தாதா ராவ் ஏரியும் முழுவதுமாக நிரம்பியது.
- நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனவும்அப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில்,கீரை வகைகள், முள்ளங்கி,கத்தரிக்காய், பீட்ரூட், வாழை மற்றும் கொத்தமல்லி உள்ளிட்டவிவசாய பயிர்களை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தாதா ராவ் ஏரியும் முழுவதுமாக நிரம்பியது.
ஆனால், உபரி நீர் வெளியே செல்ல வழியின்றி, சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்களில் 3 அடிக்கு மேல் ஏரி நீர் சூழ்ந்துவிட்டது. 2 மாதங்களாகியும் விளை நிலங்களில் உள்ள தண்ணீர் வற்றவோ, வெளியேறவோ வழி இல்லாமல் விளைநிலங்களில் தேங்கி நிற்பதால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து மிகுந்த நஷ்டத்திற்கு தள்ளப்பட்டதாக, அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை என்றும், தற்போது இரண்டு மாதங்களாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பயிர்கள் மழை நீரில் அழுகி தற்போது அந்த தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன் புழுக்கள் உற்பத்தியாகி வருவதாகவும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனவும்அப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறினர்.
மேலும், 25 வருடங்களாக நிரம்பாத ஏரி தற்போது பெய்த மழையினால் நிரம்பியிருப்பது, ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும் மறுபுறம் ஏரியின் உபரி நீர் வெளியேற வழியின்றி, விவசாய பயிர்களை சூழ்ந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையை தருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
எனவே இனியாவது மாவட்ட நிர்வாகம், உடனடியாக ஏரியின் உபரி நீரை வெளியேற்ற வழிவகை செய்து, விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மினி வேனில் தடை செய்யப்பட புகையிலை பொருட்கள் 342 கிலோ இருந்தது.
- ரூ.2.15 லட்சம் மதிப்பிலான அந்த பொருட்களை ,ரூ.7 லட்சம் மதிப்பிலான மினி வேனுடன் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசார் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் அழகுப்பாடி என்ற இடத்தருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.அந்த மினி வேனில் தடை செய்யப்பட புகையிலை பொருட்கள் 342 கிலோ இருந்தது.
ரூ.2.15 லட்சம் மதிப்பிலான அந்த பொருட்களை ,ரூ.7 லட்சம் மதிப்பிலான மினி வேனுடன் பறிமுதல் செய்தனர்.
பெங்களூருவிலிருந்து சிவகாசிக்கு புகையிலை பொருட்களை கடத்த முயன்ற நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த டிரைவர் முத்து (வயது 28) என்பவரை கைது செய்தனர். பெரியசாமி என்பவரை தேடி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத பெண் உடலை ஹட்கோ போலீசார் கைப்பற்றி ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
- காவேரிப்பட்டனம் போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் ஹட்கோ அருகேயுள்ள தென்னசந்திரம் கிராம நிர்வாக அதிகாரி முருகன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் கெலவரப்பள்ளி டேம் பகுதியில் நீரில் மூழ்கி இறந்து கிடந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உடலை ஹட்கோ போலீசார் கைப்பற்றி ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதேபோல காவேரிபட்டணம் அருகேயுள்ள சுண்டே குப்பம் கிராம நிர்வாக அதிகாரி சரண்யா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சுண்டே குப்பம் கிருஷ்ண கோவில் அருகே வாகனம் மோதி இறந்து கிடந்த 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் உடலை காவேரிப்பட்டனம் போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






