என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராயக்கோட்டை அருகே யானைகள் கூட்டமாக செல்லும் காட்சி.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு -பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
- சுமார் 250 யானைகள் முகாமிட்டுள்ளன.
- பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்கு, கர்நாடகா மாநிலத்தில் உள்ள பன்னார்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வந்த யானைகள், தளி, ஜவளகிரி, நொகனூர், தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், சானமாவு, மகராஜகடை மற்றும் வேப்பனபள்ளி பகுதிகளில் உள்ள காப்புக்காடுகளில் முகாமிட்டு, விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன.
குறிப்பாக ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடே துர்க்கம் காப்புக்காட்டில் 50 யானைகள், ஓசூர் - சானமாவு காப்புக்காட்டில் 3 யானைகள், தேன்கனிக் கோட்டை-நொகனூர், தேன்கனிக்கோட்டை, அய்யூர் காப்புக்காடுகளில் 35 யானைகள், ஜவளகிரி- தளி, ஜவளகிரி, பனை, உளிபண்டா காப்புக் காடுகளில் 65 யானைகள், கிருஷ்ணகிரி-மகா ராஜகடை, வேப்பனபள்ளி காப்புக்காடுகளில் 8 யானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளது அஞ்செட்டி- பனை, அஞ்செட்டி, உடுபுராணி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு காப்புக்காடுகளில் 35 யானைகள், உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஹள்ளி காப்புக்காடுகளில் 75 யானைகள் என மொத்தம் சுமார் 250 யானைகள் முகாமிட்டுள்ளன.
இவ்வாறு முகாமிட்டுள்ள யானைக் கூட்டமானது பகல் நேரங்களில் காப்புக் காடுகளில் தங்கியும், இரவு நேரங்களில் காப்புக் காட்டை விட்டு வெளியேறியும், சில நேரங்களில் பகல் முழுவதும் காப்புக்காட்டிற்கு வெளியில் புறம்போக்கு நிலங்களில் முகாமிட்டும், அருகிலுள்ள கிராம விவசாய பகுதிகளுக்குள் சென்று, ராகி, நெல், வாழை, தக்காளி, சோளம் மற்றும் தென்னை உள்ளிட்ட பயிர் வகைகளை உண்டும், சேதப்படுத்தியும் வருகின்றன.
யானைக்கூட்டங்களை, சம்பந்தப் பட்ட வனப் பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் அதிவிரைவு மீட்பு குழுவினர், மீண்டும் அவைகளை பாதுகாப்பாக காப்புக் காடுகளுக்கு அனுப்பி, உயிர் சேதம் மற்றும் பெருமளவு பயிர் சேதங்கள் ஏற்படாமல் தடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், வனப்பணியாளர்கள் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வேட்டைத் தடுப்பு
வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் பொதுமக்கள் காப்புக் காட்டுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும், காப்புக்காட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், விறகு போன்ற எரிபொருட்கள் சேகரிக்க செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் காப்புக்காட்டினை ஒட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் நடமாட வேண்டும் எனவும், இரவு நேரங்களில் வீட்டின் வெளியில் மின் விளக்குகளை ஒளிரச் செய்யுவும், மேற்படி காப்புக்காடுகளைச் சுற்றியுளள கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் குறித்து அறிவிப்பு செய்து பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், விவசாய நிலங்களை சுற்றி மின்வேலி அமைப்பதை தவிர்க்கவும், அவ்வாறு மின்வேலி அமைப்பது கண்டுபிடிக்கப்பட்டால், வன உரியின பாதுகாப்பு சட்டத்தின்படி, வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். வன உயிரினங்களால் ஏற்படும் பயிர் சேத விவரங்களை, சம்பந்தப்பட்ட வனச்சரக சரக அலுவலகங்களில் தெரிவிக்கும்பட்சத்தில், வனத்துறை மூலம் விரைவில் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






