என் மலர்
கிருஷ்ணகிரி
- 15 நாட்கள் ஆண், பெண் இருவருக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
- விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் என 305 வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் நடந்தது.
இதில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, தேக்வாண்டோ, ஜுடோ ஆகிய விளையாட்டுகளுக்கு கடந்த 2-ந் தேதி முதல் நேற்று வரை 15 நாட்கள் ஆண், பெண் இருவருக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த முகாமில், பள்ளி மாணவ, மாணவிகள், வீளையாட்டு வீரர், வீராங்கனைகள், உலகத்திறனாய்வு தடகள போட்டிகள், பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் என 305 வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.
முகாமின் நிறைவு நாளான நேற்று காலை பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பர்கூர் டி.எஸ்.பி., மனோகரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் வரவேற்றார்.
இதில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
- பாஞ்சாலி அம்மன் கோவிலில் 49-ம் ஆண்டு மகாபாரத திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
- திருமண கோலத்தில் பாஞ்சாலியம்மன், அர்ச்சுனன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே முருக்கம்பள்ளம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த பாஞ்சாலி அம்மன் கோவிலில் 49-ம் ஆண்டு மகாபாரத திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
18 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பால்குடம் எடுத்தலும், பாஞ்சாலி அம்மன், அர்ச்சுனன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முன்னதாக திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு இருவீட்டார் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து முருக்கம்பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி, காத்தாடிகுப்பம், வெண்ணம்பள்ளி, ஜோடுகொத்தூர், மாதனகுப்பம், மேல் அக்ரஹாரம், மல்லிநாயனப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த மணமகள் மற்றும் மணமகன் வீட்டில் இருந்து பெண்கள் சீர்வரிசை தட்டுகளை எடுத்து வந்தனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் பாஞ்சாலியம்மன், அர்ச்சுனன் திருக்கல்யாணம் வேதமந்திரங்கள் முழங்க நடத்தப்பட்டது. இதையடுத்து திருமண கோலத்தில் பாஞ்சாலியம்மன், அர்ச்சுனன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமணத்திற்கு மொய் எழுதி சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடு களை 9 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.
- கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் குறித்த நேரத்திற்கு கிராமங்களுக்கு செல்லமுடியாத அவலநிலை உள்ளது.
- நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை என்பதால் நெடுஞ்சாலைத் துறையினர் அவ்விடத்தில் இது ஒரு வழி பாதை என போர்டு வைக்க வேண்டும்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகரில் முக்கிய வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியாகவும், சேலம் மெயின் ரோடு, கிருஷ்ணகிரி சாலை, பனகல் தெரு மற்றும் அகரம் சாலை நான்கும் சந்திக்கும் முக்கிய இடமாக பிள்ளையார் கோவில் நான்கு ரோடு அமைந்துள்ளது.
இவைகளில் தான் துணிக்கடைகள், நகை க்கடைகள், மருத்துவ மனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும் காவேரிப்பட்டணத்தை சுற்றியுள்ள கிராம பொது மக்கள் நகருக்குள் வர வேண்டும் என்றால் இச்சாலைகளின் வழியாகத்தான் வரவேண்டும்.
இந்த சாலைகளில் பேருந்துகளை தவிர மற்ற வாகனங்களான டாடா ஏஸ், பால்வண்டிகள், லாரிகள், டிராக்டர்கள், பள்ளிபேருந்துகள், கார்கள், மேக்ஸி கேப், உள்ளிட்ட தனியார் வாகனங்கள் இந்த சாலையில் இருபுறமும் விதிகளை மீறி செல்வதால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் இரண்டு திசைகளிலும் வண்டிகள் நிற்க வேண்டியுள்ளது. பனகல் தெரு மற்றும் அகரம் சாலையை டாடா ஏஸ், பால் வண்டிகள், டிராக்டர்கள் செல்வதற்கும், வருவதற்கும் பயன்படுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் காலை நேரங்களில் அவசரமாக பணிக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இச்சாலைகளின் வழியாக கிராமங்களுக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் குறித்த நேரத்திற்கு கிராமங்களுக்கு செல்லமுடியாத அவலநிலை உள்ளது.
இதனால் இந்த சாலைகளை பயன்படுத்தி மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள், பொருட்கள் வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இச்சாலைகளில் எதிரெதிரே வரும் வாகனங்களின் ஒட்டுநர்கள் இடையேவாய்ச் சண்டை ஏற்பட்டு, வீண் தகராறுகள் ஏற்படுகிறது. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது காவேரிப்பட்டணம் நகருக்குள் வருவதை தவிர்த்து கொசமேட்டிலிருந்து ரவி தியேட்டர், ஸ்ரீராமுலுநகர், பாலக்கோடு சாலை வழியாக சேலம் மெயின் ரோடுக்கு வருவதற்கு வழி உள்ளது.
ஆனால் டிராக்டர், டாட்டா ஏஸ், பால் வண்டி, கார், மேக்ஸி கேப் போன்ற வாகனங்கள் வேண்டுமென்றே பனகல் தெருவில் வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கொசமேட்டிலிருந்து பனகல் தெருவுக்கு வருவதை தவிர்க்க கொசமேட்டிலேயே காவல் துறையினர் வைத்திருந்தனர். ஆனால் அதை தற்போது எடுத்து விட்டனர்.
இதனால் அனைத்து வண்டிகளும் இவ்வழியாகவே வருகின்றன. இந்த சாலை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை என்பதால் நெடுஞ்சாலைத் துறையினர் அவ்விடத்தில் இது ஒரு வழி பாதை என போர்டு வைக்க வேண்டும்.
மேலும் போக்குவரத்து காவல்துறை யினரால் அவ்விடத்தில் பேரிகார்டு வைத்தும் அந்த இடத்தில் நிரந்தரமாக காவலர்களை அமர்த்தலாம். அப்படி இல்லை என்றால் ஒரு வழிப்பாதையில் வேண்டு மென்றே வரும் வண்டிகளுக்கு சேலம் மெயின் ரோட்டில் உள்ள விநாயகர் சிலை அருகே அபராதம் விதித்தால் பனகல் தெரு வழியாக வண்டிகள் வருவது தவிர்க்கப்படும். மேலும் காவேரிப்பட்ட ணத்தில் போக்குவரத்து போலீசார் குறை வாக இருப்பதால் இந்த பகுதியில் போக்குவரத்தை சரிசெய்ய காவலர்கள் நிற்பதில்லை. எனவே அதிகமான போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என கூறினர்.
- தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பிக்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
- மீறி நடத்துபவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் அபராதமும், 3 முதல் 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றம் இல்லங்கள் (ஒழுங்கு முறை) சட்டம் 2014ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பெற்றது. அதன்படி, தனியாரால் நடத்தப்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல், உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்தும் உரிமையாளர்கள் விடுதிகைள பதிவு செய்யவும், உரிமம் பெறவும் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், உரிமம் பெற்று செயல்பட்டு வரும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பிக்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
பணிபுரியும் மகளிர் விடுதியின் உரிமம் பெற தீயணைப்பு தடையின்மை சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ், பொதுப் பணித்துறையின் கட்டிட உறுதித்தன்மை சான்றும் மற்றும் பார்ம் -டி உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும். பெண்களுக்கான விடுதி, காப்பகங்களில் விடுதிக் காப்பாளர் பெண்ணாகவும், விடுதி பாதுகாவலர் ஆண், பெண் ஆகவும் இருக்க வேண்டும்.
பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை பதிவு செய்யவும், உரிமம் பெறவும் மற்றும் உரிமத்தை புதுப்பிக்கவும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்கு முறை) சட்ட விதிகள் 2015ல் காணப்படிம் படிவம் -1, படிவம் -4 ஆகியவற்றை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிமம் பெறாமல் செயல்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி 2 வருடம் சிறை தண்டனையும் மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும், அதையும் மீறி நடத்துபவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் அபராதமும், 3 முதல் 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.21, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், தொலைபேசி எண்.04343-235717 மற்றும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓசூர் வனக்கோட்டத்தில் மொத்தம் 499 யானைகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது.
- ஓசூர் மாவட்ட வன அலுவலகத்தில் கணக்கெடுப்பு எடுப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் வனக்கோட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை மூன்று நாட்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட வனத்துறை அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓசூர் வனக்கோட்டத்தில், காவிரி வடக்கு, தெற்கு வன உயிரின சரணாலயங்களில் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. குறிப்பாக ஊடேதுர்க்கம், சானமாவு, நொகனூர், அய்யூர், ஜவளகிரி, பனை, உளிபண்டா, மகாராஜகடை, வேப்பனஹள்ளி, உடுபுராணி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஹள்ளி பகுதியில் ஏராளமான யானைகள் தற்போது முகாமிட்டுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில், ஓசூர் வனக்கோட்டத்தில் மொத்தம் 499 யானைகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது.
இந்த தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள 40 வனக்காவல் சுற்று பீட்டுகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து வந்த உயிரியலாளர் சக்திவேல் மூலம், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமையில், உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாள்களுக்கு, ஓசூர் மாவட்ட வன அலுவலகத்தில் கணக்கெடுப்பு எடுப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
பணியில் ஈடுபடுபவர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு வழிகாட்ட ஏதுவாக, வாட்ஸ் அப் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு, முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த குழுவினர் இன்று முதல் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,
- வீரமலையில் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக நாகரசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் காய்ச்சி விற்ற சக்கரவர்த்தியை கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வீரமலையில் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக நாகரசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வீரமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வீரமலையை அடுத்த காட்டுகொல்லையில் உள்ள மலையடிவாரத்தில் அதேபகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி (வயது45) என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அங்கிருந்து தயார் நிலையில் இருந்து 2லிட்டர் சாராய பாட்டில்களையும், 50 லிட்டர் சாராய ஊறல் பேரல்களையும் கீழே கொட்டி அழித்தனர். மேலும், சாராயம் தயாரிப்பதற்காக வைத்திருந்த பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் காய்ச்சி விற்ற சக்கரவர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- ஜாமீனில் திலக் வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
- கொலை சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாகியுள்ள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி பக்கமுள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் திலக் (24). ரவுடி ஆவார். கடந்த 12-ந் தேதி ஓசூர் பெரியார் நகர் டீக்கடை அருகில் இவரை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் கொலை செய்யப்பட்ட திலக் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கடந்த 1.1.2022 அன்று சொப்பட்டியை சேர்ந்த மோகன்பாபு என்பவரை கொலை செய்ததும், அந்த வழக்கில் திலக் உள்பட 6 பேரை மத்திகிரி போலீசார் கைது செய்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீனில் திலக் வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மோகன்பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை ஓசூர் டவுன் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள்.
அதில் தனது மகன் மோகன்பாபுவை கொலை செய்ததற்கு பழிக்கு பழி வாங்கும் விதமான தான் மத்திகிரியை சேர்ந்த சசிகுமார்(24) என்பவர் மூலம் மேற்கண்ட கொலையை செய்ததாக கூறியிருந்தார்.
தொடர் விசாரணையில், திலக், டீ கடையில் இருந்த தகவலை, சசிகுமாருக்கு இவர்தான் தெரியபடுத்தினார் என்றும், திலக்கை கொல்ல சசிகுமாருக்கு திம்மராயப்பா பணம் கொடுத்ததும், தெரியவந்தது.
இதையடுத்து, திம்மராயப்பா, மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி மகன் சிவகுமார்(24) மற்றும் தின்னூரை சேர்ந்த வெங்கடேஷ் (25) ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளியான சசிகுமார், நேற்று சங்ககிரி கோர்ட்டில் சரணடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாகியுள்ள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- குட்கா பொருட்களுடன், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் செய்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.3,54,000-மதிப்பிலான 615 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் சிங் (22)மற்றும் பரத் சிங் (40) ஆகிய இருவரும், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து சேலத்திற்கு விற்பனைக்காக 2 கார்களில் கடத்தி சென்றது, தெரியவந்தது. இதையடுத்து குட்கா பொருட்களுடன், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் செய்தனர்.
- கடந்த வாரம் பேருந்து நிலையத்துக்குள் அதிவேகமாக நுழைந்த தனியார் பேருந்து இடித்து ஒருவர் பலியானார்.
- பேருந்துநிலையத்தில் புதிதாக வேகத்தடை அமைபக்கப்படடது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கிருஷ்ணகிரி , தருமபுரி , சேலம் , பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து வந்து செல்கின்றன .
பேருந்துகள், பஸ் நிலையத்திற்கு வரும்பொழுது மிக வேகமாக உள்ளே நுழைகின்றன. அப்படி நுழையும் போது பேருந்து நிலையத்திற்கு உள்ளே நுழையும் பொதுமக்கள் வேகமாக பேருந்துகளுக்கு வழி விடும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் பேருந்து நிலையத்துக்குள் அதிவேகமாக நுழைந்த தனியார் பேருந்து இடித்து ஒருவர் பலியானார்.
இதனை அடுத்து காவேரிபட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லும் வழியும் வெளியே செல்லும் வழியினை வேகத்தடை அமைக்கும் பணியினை இன்று தொடங்கினர்.
- சாலையில் காங்கிரிட் கலவைகள் உடைந்து சிதைந்த நிலையில் பள்ளமாக உள்ளது.
- காங்கிரீட்டால் அமைத்த தோரணம் சேதம் எற்படும் அபாயம் உள்ளது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பேருந்து நிைலயம் கட்டி சில ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த பேருந்து நிலையத்திக்கு சூளகிரி சுற்றுபுறப்பகுதி கிராமங்களில் இருந்து மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வெளி மாநிலத்தவர் என 10 ஆயித்திற்கு மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த பேருந்து நிலையத்திற்க்கு ஒசூர்- கிருஷ்ணகிரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு நுழைவாயில் தோரணம் உள்ளது.
அதன் அருகில் சாலையில் காங்கிரிட் கலவைகள் உடைந்து சிதைந்த நிலையில் பள்ளமாக உள்ளது. இதனால் பேருந்துகள் பள்ளத்தில் இறங்கி செல்வதால் அதிர்வு எற்படுகிறது. இதனால் அக்கம் பக்க சுவர் அதிர்கிறது.
இதனால் காங்கிரீட்டால் அமைத்த தோரணம் சேதம் எற்படும் அபாயம் உள்ளது. அதனால் பழுதான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
- மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மொத்தம் 306 மனுக்களை கொடுத்தனர்.
- மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மொத்தம் 306 மனுக்களை கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அங்கு இருந்த தண்ணீர் தொட்டி திறந்த நிலையில் இருந்தது.
- இதனை கவனிக்காத மஞ்சு தவறி தொட்டிற்குள் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் துரைபாபு. இவரது மனைவி மஞ்சு (வயது 45). இவர் நேற்று வீட்டின் முன்பு நடந்து சென்றார்.
அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டி திறந்த நிலையில் இருந்தது. இதனை கவனிக்காத மஞ்சு தவறி தொட்டிற்குள் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மஞ்சுவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து உறவினர்கள் ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மஞ்சுவின் மீட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






