என் மலர்
கிருஷ்ணகிரி
- மின்வயரை தொட்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, மே.23-
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பெத்தசிகரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாரப்பா. இவரது மனைவி பத்மா (வயது30). இவர்களுக்கு திலாக(3) என்ற பெண்குழந்தை உள்ளது. சம்பவத்தன்று குழந்தை திலகா வீட்டில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கு இருந்த மின்வயரை தொட்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குழந்தையின் உடலை பார்த்து தாய் கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து பத்மா பேரிகை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சரயு கடந்த 1992-ம் ஆண்டு பிறந்தவர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 13-வது கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 12-வது கலெக்டராக தீபக் ஜேக்கப் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி நியமனம் செய்யப்பட்டார். அவர் 99 நாட்கள் பணியில் இருந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.எம்.சரயு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 13-வது கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய கலெக்டராக பொறுப்பேற்ற பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மலைகள் சூழ்ந்த, தொழிற்சாலைகள், விவசாய வளம் நிறைந்த மாங்கனி நகர் கிருஷ்ணகிரிக்கு கலெக்டராக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்கு முன் இந்த மாவட்டத்தின் கலெக்டராக பணிபுரிந்த தீபக் ஜேக்கப் கல்லூரியில் எனக்கு சீனியர் ஆவார். அவர் இம்மாவட்டத்தை பற்றிய குறிப்புகளை வழங்கியுள்ளார்.
கல்வி, சுகாதாரம், கிராமங்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தியும், அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடையும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சரயு கடந்த 1992-ம் ஆண்டு பிறந்தவர். பி.டெக்., எம்.ஏ., (பப்ளிக் மேனேஜ்மெண்ட்) படித்த இவர், 2015-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார்.
புதுக்கோட்டை மாவட்ட உதவி கலெக்டர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அவர், இறுதியாக பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் இணை நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில், முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சரயுவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- பொதுமக்களுக்கு சேவையாற்றுவதில் மிகவும் முக்கியமான துறை நில அளவைத் துறையாகும்.
- அரசு எந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாலும் நிலம் முக்கியமானது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஆயுதப்படை காவலர்கள் அரங்கில் நேற்று நில அளவைத்துறை சார்பில், புதிதாக பணிநியமனம் பெற்ற நில அளவர்களுக்கான பயிற்சி நடந்தது.
இதை கலெக்டர் கே.எம்.சரயு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரால் பணி நியமனம் செய்யப்பட்ட, கிருஷ்ணகிரி, தருமபுரி, மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த நில அளவர்கள், வரைவாளர்கள் உள்ளிட்ட 70 பேருக்கு, இங்கு 30 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பொதுமக்களுக்கு சேவையாற்றுவதில் மிகவும் முக்கியமான துறை நில அளவைத் துறையாகும். அரசு எந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாலும் நிலம் முக்கியமானது. அரசு ஆவணங்களில் உள்ள நிலம் நில அளவையர்களால் அடையாளம் காணப்பட்டு அதன் பிறகே தொடர்புடைய துறைகளுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.
இந்த பணி முக்கியமான பணியாகும். நில உரிமையாளர்களுக்கு தனிபட்டா, கூட்டுப்பட்டா, மற்றும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் போது சரியான முறையில் அளவீடு செய்து வழங்கவேண்டும். இப்பயிற்சியில் நில அளவை எப்படி மேற்கொள்வது, நில வரைபடம் தயார் செய்வது, டிஜிட்டல் க்ளோபல் பொசிசன் சிஸ்டம் மூலம் நிலஅளவிடு செய்வது போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
எனவே இப்பணியில் சேர்ந்துள்ள நீங்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (நிலஅளவை) சேகரன், தாசில்தார் சம்பத், கோட்ட ஆய்வாளர் கிருஷ்ணம ூர்த்தி, திட்டப் பணிகள் ஆய்வாளர்கள் பெரியசாமி, சதாசிவம், கோவிந்த ராஜ், பாண்டிச ்செல்வி உள்ளிட்ட துறைச் சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- 3 மாதங்களில் திருப்பித் தருவதாக கூறி, மூன்று ஆண்டுகள் ஆகியும் பணத்தை இன்னும் திருப்பி கொடுக்கவில்லை.
- குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவதாக கூறி மிரட்டல் விடுக்கிறார்கள்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூரில், தனியார் தொழிற்சாலை நடத்தி வருபவர் நாராயணன். இவர், மோட்டார் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரித்து பெரு நிறுவனங்களுக்கு அனுப்பும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2020- ம் ஆண்டு தனது தொழிற்சாலையை மேம்படுத்துவதற்காக கடனாக ரூ.15 லட்சத்தை தனது சகோதரியின் மகனான, பர்கூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரிடமிருந்து கடனாக வாங்கினாராம்.
3 மாதங்களில் திருப்பித் தருவதாக கூறி, மூன்று ஆண்டுகள் ஆகியும் பணத்தை இன்னும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கிருஷ்ணகுமார் தனது சேமிப்பு பணம் மற்றும் நண்பர்களிடமிருந்து பணம் வாங்கி கொடுத்த நிலையில், நாராயணன் கொடுத்த காசோலைகளை வங்கிகளில் சமர்ப்பித்த போது பணம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் செக் மோசடி வழக்கு தொடர்ந்ததை அடுத்து நாராயணனுக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த வாரண்ட் நடவடிக்கையை செயல்படுத்தாதவாறு, போலீசாருக்கு முட்டுக்கட்டையாக விழுப்புரம் மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் நாராயணனின் மகள் சுவாதி என்பவர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகுமார், தற்போது தனது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், இதனால் தனது குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து விட்டது என வேதனையுடன் தெரிவித்தார்.
இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த ,நண்பர்களுடன் அவர், நாராயணன் தம்பதியினரை அணுகும் போதெல்லாம், துணை போலீஸ் சூப்பிரண்டான நாராயணன் மகள் சுவாதி, குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவதாக கூறி மிரட்டுவதாகவும், காவல்துறையில் உயரிய பொறுப்பு வகிக்கும் இது போன்ற அதிகாரிகள் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்துவதுடன் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் கிருஷ்ணகுமார் குற்றம் சாட்டினார். மேலும் நாராயணன், தன்னை மட்டுமின்றி, தன்னைப் போலவே பலரிடமும் இதுபோன்று பண மோசடியில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் வரை ஏமாற்றி உள்ளதாக கிருஷ்ணகுமார் கூறினார்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம், தமிழக முதலமைச்சரின் குறை தீர்க்கும் பிரிவு மற்றும் பிரதமரின் குறை தீர்க்கும் பிரிவு ஆகியவற்றிற்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறும் அவர், இதில் தமிழக முதலமைச்சர் உரிய கவனம் செலுத்தி தனது வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து கொடுக்க வேண்டும் என அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
- தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுத்திருபலி நடந்தது.
- நகரின் முக்கிய வீதிகளில், சாலைகள் வழியாக நகர்வலம் வந்த தேர் பழையபேட்டையில் நிறைவடைந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ம் ஆண்டு திருத்தல தேர் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் ஆலயத்தின் பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாலை நேரங்களில், தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடந்தது. தேர்த்திருவிழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுத்திருபலி நடந்தது.
பின்னர் மாலை 7 மணியளவில், வண்ண விளக்குளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேரை அருட்திரு இருதயம் மந்திரித்து, தேர் பவனியை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளில், சாலைகள் வழியாக நகர்வலம் வந்த தேர் பழையபேட்டையில் நிறைவடைந்தது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடாக மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்நது கொண்டனர்.
- முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது.
- பலத்த காயமடைந்த கமலா மயங்கி கீழே விழுந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி பேடரபள்ளியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது30). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி கமலா (23). இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த கமலாவின் இடது கையை வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த கமலா மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை தங்கை மஞ்சுளா மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மஞ்சுளா ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்
- 12 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் மதிப்பில் குப்பைகள் எடுத்துச் செல்லும் எலக்ட்ரிக் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி தலைமை தாங்கினார்.
காவேரிப்பட்டினம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15 வது நிதிக் குழு மான்ய திட்டத்தின் கீழ் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துகுட்பட்ட 12 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் மதிப்பில் குப்பைகள் எடுத்துச் செல்லும் எலக்ட்ரிக் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன்,செந்தில் ஆகியோர் முன்னில வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வாகனங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, மகேந்திரன் பேரூர் கழக செயலாளர் பாபு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சங்கீதா கேசவன், நித்தியா சங்கர், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், அஸ்லாம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடை, 730 கிராம் மட்டுமே இருந்தது.
- விலையுயர்ந்த சிறப்பு மருந்துகளுடன், சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த பாஞ்சாலி நகரை சேர்ந்தவர் முத்துமீனாட்சி (வயது 19). திருமணமாகி கருவுற்ற இவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், முத்துலட்சுமிக்கு, 28 வார கர்ப்ப காலத்திலேய பிரசவ வலி ஏற்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடை, 730 கிராம் மட்டுமே இருந்தது.
உடனடியாக குழந்தையை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி உத்தரவிட்டார். இதையடுத்து மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகர், மகப்பேறு தலைமை மருத்துவர் கவிதா, டாக்டர்கள் மது, செல்வி, பழனி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் குழந்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
மூச்சுத்திணறல், நுரையீரல் வளர்ச்சி குறைவால் அவதியுற்ற குழந்தைக்கு 'சர்பேக்ணன்ட்' என்ற விலையுயர்ந்த சிறப்பு மருந்துகளுடன், சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குழந்தை நேற்று சுவாசக்கருவியின்றி சுவாசித்ததுடன், தாய்ப்பாலும் குடிக்க தொடங்கியது. தற்போது, ஒரு கிலோ எடையுடன் உள்ள அந்த குழந்தைக்கு, விழித்திரை, செவி, மூளைக்கு செல்லும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு அனைத்தும் சீராக செயல்படுவதும் தெரிந்தது. இதையடுத்து குழந்தையை பெற்றோரிடம் மருத்துவகுழுவினர் ஒப்படைத்தனர்.
- 2 பேர் அங்கிருந்த 85 கிலோ இரும்பு கம்பிகளை திருடிக் கொண்டு தப்ப முயன்றனர்.
- அவர்கள் 2 பேரையும் பேலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோவை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 32). இவர் பேளகொண்ட ப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்த போது உள்ளே நுழைந்த 2 பேர் அங்கிருந்த 85 கிலோ இரும்பு கம்பிகளை திருடிக் கொண்டு தப்ப முயன்றனர்.
இதை கவனித்த சம்பத்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஓசூர் கொத்தகொண்டப்பள்ளி ராபர்ட் (32), எஸ்.பி.எம். காலனி லோகேஷ்குமார் (22) என தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் பேலீசார் கைது செய்தனர்.
- தனது தந்தை ராமனிடம் செலவுக்கு பணம் கேட்டார்.
- அவர் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த தமிழரசன் தந்தையை கத்தியால் குத்தினார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மடத்தூரை சேர்ந்தவர் ராமன் (வயது 50). ஓசூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் தமிழரசன் (19). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தனது தந்தை ராமனிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த தமிழரசன் தந்தையை கத்தியால் குத்தினார்.
இதில் காயமடைந்த ராமன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர்.
- நடுகல்லில், இசைக் கலைஞர் கையில் சிறிய தப்பட்டை ஒன்றை இசைத்தவாறு உள்ளார்.
- இடது புறம் ஒரு தூண் போன்று காணப்படுகிறது, இந்த நடனமானது ஒரு அரங்கில் நடைபெறுவதாகக் கொள்ளலாம்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் பண்ணந்தூர் அருகே புளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரிச்சந்திரன் கோவிலில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த கோவிலில் இசைக் கலைஞர், நடனக் கலைஞரும் இடம்பெற்றுள்ள அரியவகை நடுகல் உள்ளது. இது 200 முதல் 300 ஆண்டுகள் பழமையானது. நடுகல்லில், இசைக் கலைஞர் கையில் சிறிய தப்பட்டை ஒன்றை இசைத்தவாறு உள்ளார்.
அவர் மேல்சட்டை, வேட்டி, காதுகளில் பெரிய குண்டலங்களை அணிந்துள்ளார். மேலும், இசைக்கும் போதே, இவருடைய கால்களும் சிறிது அசைந்து ஆடுவதுபோல உள்ளது. இதன் அருகில் உள்ள மற்றொரு ஆண் சேவை ஆட்டம் எனப்படும் குருமன் பழங்குடி மக்களின் நடனத்தை ஆடுவதுபோல உள்ளது.
இந்த நடுகல்லில் ஆடை, ஆபரணங்கள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. நடனக் கலைஞரின் வலது கை மேல்நோக்கி நடன அசைவுகளை விளக்குவதுபோலவும், இடது கை கீழ் நோக்கி வளைந்து குட்டை பாவாடை நுனியை இருவிரல்களில் பிடித்து நளினமாக நடனம் ஆடுவதுபோலவும் உள்ளது.
மேலும், இவர் அணிந்துள்ள உடையானது, கழுத்திலிருந்து இடுப்பு வரை தற்கால தெருக்கூத்து கலைஞர்கள் அணிவது போன்ற ஒரே ஆடையாக காட்டப்பட்டுள்ளது. இடது புறம் ஒரு தூண் போன்று காணப்படுகிறது, இந்த நடனமானது ஒரு அரங்கில் நடைபெறுவதாகக் கொள்ளலாம்.
பொதுவாக இசைக் கலைஞருடைய நடுகல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இசைக் கலைஞர் இசைப்பது போன்றும், நடனக் கலைஞர் நடனம் ஆடுவது போன்றும் ஒரே கல்லில் இருப்பது இங்கே காண முடிகிறது. இத்தகைய நடுகல் கண்டறிவது இதுவே முதல்முறையாகும்.
தப்பட்டை மற்றும் சேவை ஆட்டம் போன்றவை குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். இது குருமன்ஸ் இன மக்களுடைய நடுகல் என கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- வேளாண்மை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
- பல்வேறு துறைகளை ஒப்பீடு செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூரில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் அருள், மாநில செய்தி மற்றும் ஊடகப்பிரிவு ரவிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 16- வது அறிவிப்பாக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 2.0 என்ற அறிவிப்பு மூலம் 3 அல்லது 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண்மை விரிவாக்க அலுவலர் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சருக்கும், வேளாண்மை துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் படிப்புக்கு கல்வி தகுதியாக பிளஸ்-2 உடன் 2 வருட டிப்ளமோ படிப்பு தோட்டக்கலைத்துறை ஆகியவையுடன் 4428 பணியிடங்களுக்கு தமிழ்நாடு தேர்வு ஆணையம் மூலம் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
துணை வேளாண்மை அலுவலர், துணை தோட்டக்கலை அலுவலர் என்ற பதவிகளை வேளாண்மை அலுவலர் நிலை 2, தரம் 2 என மாற்றி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆகிய பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும் அதனை அரசு விதிகளின்படி பல்வேறு துறைகளை ஒப்பீடு செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், தமிழகத்தில் பல அரசு துறைகளில் 5 அடுக்கு பதவி உயர்வு உள்ளது. தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு குறைநதபட்சமாக 3 அடுக்கு பதவி உயர்வாகு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவே–ற்றப்பட்டது. இதில்,தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






