என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் தொழிற்சாலை உரிமையாளர் பண மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்
- 3 மாதங்களில் திருப்பித் தருவதாக கூறி, மூன்று ஆண்டுகள் ஆகியும் பணத்தை இன்னும் திருப்பி கொடுக்கவில்லை.
- குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவதாக கூறி மிரட்டல் விடுக்கிறார்கள்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூரில், தனியார் தொழிற்சாலை நடத்தி வருபவர் நாராயணன். இவர், மோட்டார் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரித்து பெரு நிறுவனங்களுக்கு அனுப்பும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2020- ம் ஆண்டு தனது தொழிற்சாலையை மேம்படுத்துவதற்காக கடனாக ரூ.15 லட்சத்தை தனது சகோதரியின் மகனான, பர்கூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரிடமிருந்து கடனாக வாங்கினாராம்.
3 மாதங்களில் திருப்பித் தருவதாக கூறி, மூன்று ஆண்டுகள் ஆகியும் பணத்தை இன்னும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கிருஷ்ணகுமார் தனது சேமிப்பு பணம் மற்றும் நண்பர்களிடமிருந்து பணம் வாங்கி கொடுத்த நிலையில், நாராயணன் கொடுத்த காசோலைகளை வங்கிகளில் சமர்ப்பித்த போது பணம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் செக் மோசடி வழக்கு தொடர்ந்ததை அடுத்து நாராயணனுக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த வாரண்ட் நடவடிக்கையை செயல்படுத்தாதவாறு, போலீசாருக்கு முட்டுக்கட்டையாக விழுப்புரம் மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் நாராயணனின் மகள் சுவாதி என்பவர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகுமார், தற்போது தனது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், இதனால் தனது குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து விட்டது என வேதனையுடன் தெரிவித்தார்.
இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த ,நண்பர்களுடன் அவர், நாராயணன் தம்பதியினரை அணுகும் போதெல்லாம், துணை போலீஸ் சூப்பிரண்டான நாராயணன் மகள் சுவாதி, குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவதாக கூறி மிரட்டுவதாகவும், காவல்துறையில் உயரிய பொறுப்பு வகிக்கும் இது போன்ற அதிகாரிகள் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்துவதுடன் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் கிருஷ்ணகுமார் குற்றம் சாட்டினார். மேலும் நாராயணன், தன்னை மட்டுமின்றி, தன்னைப் போலவே பலரிடமும் இதுபோன்று பண மோசடியில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் வரை ஏமாற்றி உள்ளதாக கிருஷ்ணகுமார் கூறினார்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம், தமிழக முதலமைச்சரின் குறை தீர்க்கும் பிரிவு மற்றும் பிரதமரின் குறை தீர்க்கும் பிரிவு ஆகியவற்றிற்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறும் அவர், இதில் தமிழக முதலமைச்சர் உரிய கவனம் செலுத்தி தனது வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து கொடுக்க வேண்டும் என அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.






