என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • இரவு நேரத்தில் படிக்காமல் இருந்ததால் இவருடைய மாமா எச்சரித்துள்ளார்.
    • சந்தியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி டேம் அருகே உள்ள கண்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் கோவிந்தசாமி (வயது 17). இவர் கே.ஆர்.பி.டேம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தங்கை சந்தியா. இருவரும் இரவு நேரத்தில் படிக்காமல் இருந்ததால் இவருடைய மாமா எச்சரித்துள்ளார்.

    இதனால் சந்தியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் மனமுடைந்த அண்ணன் கோவிந்தசாமி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கே.ஆர்.பி டேம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 45 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில், ஒன்றரை கிலோ மீட்டர் இரண்டு அடுக்கு தார்சாலை அமைக்கப்படுகிறது.
    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து இரண்டு பணிகளையும் துவக்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஒன்றியம் திப்பனப்பள்ளி ஊராட்சி கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை முதல், திப்பனப்பள்ளி வழியாக கோடியூர் கிராமத்திற்கு, 45 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில், ஒன்றரை கிலோ மீட்டர் இரண்டு அடுக்கு தார்சாலை அமைக்கப்படுகிறது.

    அதே போல், தாசரப்பள்ளி சாலை முதல் திப்பனப்பள்ளி வரை 45 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒன்றேகால் கிலோ மீட்டர் தார்சாலை என மொத்தம், 90 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து இரண்டு பணிகளையும் நேற்று துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் தலைவர் அம்சாராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கவுன்சிலர்கள் மகேந்திரன், ஜெயராமன், வங்கித் தலைவர் தாபா வெங்கட்ராமன், ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன், முன்னாள் தலைவர் தீர்த்தகிரி, கிளைச் செயலாளர்கள் ராமன், சத்தியசீலன், வேடியப்பன், வங்கி துணைத் தலைவர் ரமேஷ், வேடியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது.
    • எண்ணே கொள்புதூர் அரசு உயர்நிலை ப்பள்ளியில் ரூ.18.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் கட்டிடத்தை மதியழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பனப் பள்ளி ஒன்றியம் எண்ணே கொள்புதூர் ஊராட்சியில் ரூ.1 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. இதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து எண்ணே கொள்புதூர் அரசு உயர்நிலை ப்பள்ளியில் ரூ.18.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் கட்டிடத்தை மதியழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து வேப்பனப்பள்ளி ஒன்றியம் எண்ணே கொள்புதூர், சென்றா கவுண்டர் கிராமத்திற்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டுதல், கரிக்கல் நத்தத்தில் ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் நீர் தேக்க தொட்டி அமைத்தல், பெரிய புளியரசி கிராமத்தில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அமைத்தல், பெரிய புளியரசி கிராமத்தில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மதியழகன் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் கோவிந்தன், அன்பரசன், மேற்கு மாவட்ட பிரதிநிதி மாதேஸ்வரன், எண்ணே கொள்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 7-ந் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
    • மாவட்டத்தை சார்ந்தவர்கள், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்தும், மனுக்களாக சமர்ப்பித்தும் பயனடையலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7-ந் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை வகிக்கிறார். எனவே, மாவட்டத்தை சார்ந்தவர்கள், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்தும், மனுக்களாக சமர்ப்பித்தும் பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 1 கோடியே 18 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் திட்ட பணிக்கு பூமி பூஜை நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் பாக்கியலட்சுமி ஜெயராமன் தலைமை வகித்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம் குந்துகோட்டை ஊராட்சியில் குந்து கோட்டை கிராம கூட்டு சாலை முதல் ஈரு செட்டி ஏரி கிராமம் வரை உள்ள 3.5 கிலோமீட்டர் வரை கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 18 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் திட்ட பணிக்கு பூமி பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் பாக்கியலட்சுமி ஜெயராமன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் மூர்த்தி, ரத்தினம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தளி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் விமலா திமுக ஒன்றிய செயலாளர்கள் திவாகர், ராஜா மற்றும் வார்டு உறுப் பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றிய ஒன்றிய குழு தலைவருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

    • மாங்கனி கண்காட்சி விழாவையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வருகிற 5-ந் தேதி 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்க உள்ளது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாங்கனி கண்காட்சி விழாவையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, தோட்ட கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதியது.
    • அறிவழகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள குட்டியான் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது38). இவர் தருமபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் பெங்களூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடு ஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதியது.

    இதில் அறிவழகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
    • வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்தாள்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர், அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் 29 வயது கம்பி கட்டும் தொழிலாளி சிறுமியின் தாயாரை திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து அவர், சிறுமி மற்றும் அவரது தாயார் ஆகியோருடன் வசித்து வந்தார். மேலும் சிறுமியை அவர் வளர்ப்பு தந்தைபோல் கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

    இதையடுத்து அவரது தாயார் சிறுமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரணை நடத்தினார். அப்போது வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில், போலீசார் போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு தந்தையை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை அஞ்சலக வளாகத்தில் வருகிற 12-ந் தேதி காலை, 10.30 மணிக்கு நடக்கிறது.
    • ஓய்வூதியர்கள், ஓய்வூதிய கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும் முழுமையாக குறிப்பிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    அஞ்சல் துறை சார்பில், கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- கிருஷ்ணகிரியில் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அஞ்சல் துறை சார்பில் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் சார்ந்த குறை தீர்க்கும் நாள் கூட்டம் கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை அஞ்சலக வளாகத்தில் வருகிற 12-ந் தேதி காலை, 10.30 மணிக்கு நடக்கிறது.

    அஞ்சலக ஓய்வூதியர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தங்கள் புகார்களை பென்சன் அதாலத் என்று தபால் உறையின் மீது எழுதி அஞ்சல் துறை கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி கோட்டம், கிருஷ்ணகிரி 635 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    ஓய்வூதியர்கள், ஓய்வூதிய கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும் முழுமையாக குறிப்பிட வேண்டும். அனுப்பும் புகார்களில் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை முழுமையான விவரங்களுடன் குறிப்பிட்டு எழுத வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த அந்த பெண்ணிடம் திருமால் தகாத முறையில் பேசி, பலாத்காரம் செய்ய முயன்றார்.
    • கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து பெண்ணை மீட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி அடுத்த படதா சம்பட்டியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த வருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் பெண்ணின் உறவினர் கூர்சம்பட்டியை சேர்ந்த தொழிலாளியான திருமால் (வயது 48) என்பவர், தனது அண்ணி முறையான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் அவரிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்தார்.

    கடந்த 6.12.2021 அன்று படதாசம்பட்டியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த அந்த பெண்ணிடம் திருமால் தகாத முறையில் பேசி, பலாத்காரம் செய்ய முயன்றார்.

    அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து பெண்ணை மீட்டனர்.

    இதில் மனமுடைந்த அந்த பெண் எலி மருந்தை குடித்தார். அவரை உறவி னர்கள் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் 12.12.2021 அன்று அப்பெண் இறந்தார்.

    இதுதொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமாலை கைது செய்தனர்.

    இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இதையடுத்து விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    அதன்படி குற்றம்சாட்ட ப்பட்ட தொழிலாளி திருமாலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்கள மேரி ஆஜராகி வாதாடினார்.

    • நோயாளிகளை அழைத்துச் செல்ல உதவியாளர்கள் போதிய அளவில் இல்லை.
    • உயர் கோபுர மின் விளக்கு பழுதாகி 2 மாதங்களைக் கடந்தும், இதுவரை புதிய மின் விளக்குப் பொருத்த நடவடிக்கை இல்லை.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற 325 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு 56 செவிலியர்கள், 26 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற தினசரி ஓசூர் மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், விபத்து, மகப்பேறு உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை ஆம்புலன்ஸ்சில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 'ஸ்ட்ரெச்சர்' வசதி உள்ளது. ஆனால், நோயாளிகளை அழைத்துச் செல்ல உதவியாளர்கள் போதிய அளவில் இல்லை.

    இதனால், அவசர சிகிச்சை மற்றும் பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் பரிசோதனை செய்ய நோயாளிகளை அவர்களது உறவினர்களே 'ஸ்ட்ரெச்சரில்' அழைத்துச் செல்லும் நிலையுள்ளது.

    இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உரியப் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. எனவே, கூடுதல் உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக மருத்துவ ஊழியர்கள் கூறுகையில் ஓசூர் மருத்துவமனைக்குத் தினசரி கர்ப்பிணிகள் மற்றும் பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சை பெற 500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

    நடக்க முடியாமல் மருத்துவ மனைக்கு வரும் நோயா ளிகளை, 'ஸ்ட்ரெச்சரில்' படுக்க வைத்து அழைத்துச் செல்ல உதவியாளர்கள் இல்லை. இதனால், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, முன் அனுபவம் இல்லாத அவர்களது உறவினர்கள் பாதுகாப்பற்ற முறையில் அழைத்துச் செல்லும் நிலையுள்ளது.

    அதேபோல, மருத்துவமனை வளாகத்தில் உயர் கோபுர மின் விளக்கு பழுதாகி 2 மாதங்களைக் கடந்தும், இதுவரை புதிய மின் விளக்குப் பொருத்த நடவடிக்கை இல்லை இதனால், இரவு நேர ங்களில் மருத்துவமனை வளாகம் இருளில் மூழ்கும் நிலையுள்ளது. கண்காணிப்புக் கேமராவும் செயல்படாமல் உள்ளது.

    நோயாளிகளின் நலன் கருதி உதவியாளர்கள் நியமனம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    • அங்குள்ள மின்கம்பத்தை தொட்டதாக தெரிகிறது.
    • இதில் மின்சாரம் தாக்கி அந்த சிறுவன் உயிரிழந்தான்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகன் பூவேந்தர் (வயது6). இந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள மின்கம்பத்தை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி அந்த சிறுவன் உயிரிழந்தான்.

    இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×