என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜி, பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர்கள் இருவர் மீதும் காஞ்சீபுரத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி மாவட்ட கலெக்டர் கஜலட்சுமிக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டரின் உத்தரவுப்படி ராஜி, சதீஷ் ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆலந்தூர்:
மும்பையில் இருந்து சென்னை வந்த அணு ஆராய்ச்சி கழக தலைவர் ஷேகர்பாசு விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:–
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது யூனிட்டில் அனைத்து சோதனையும் முடிந்து தயார் நிலையில் உள்ளது. அதில் இன்னும் 10 நாளில் அணு உற்பத்தி தொடங்கப்படும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது. இதை மீனவர்கள், பொது மக்கள் உணர வேண்டும். கல்பாக்கம் அனல் மின்நிலையம் 40 ஆண்டாக செயல்பட்டு வருகிறது. அங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கூடங்குளம் 3 மற்றும் 4-வது அணுஉலைகள் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. அது முழுமையாக முடிய 7 ஆண்டு ஆகும். அதுமட்டுமின்றி 5, 6-வது அணுஉலைகள் தொடங்க திட்டமிட்டு அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான பணி அடுத்த ஆண்டு தொடங்கப்படும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 6 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அதில் பாதி தமிழகத்துக்கு தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 33). இவர் கிணற்றில் பாறையை வெடி வைத்து தகர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயா (28). இவர்களுடைய குழந்தைகள் தீனதயாளன் (5), திவாகரன் (2). தீனதயாளன் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று இரவு ரவி வெளியே சென்றிருந்தார். அவருடைய குழந்தை திவாகரன் வெளியே விளையாடி கொண்டிருந்தது. வீட்டில் ஜெயா, அவருடைய அண்ணன் மோகன் (33), சிறுவன் தீனதயாளன் ஆகியோர் இருந்தனர்.
இந்த நிலையில் திடீரென ரவியின் வீட்டில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் அவருடைய வீடு இடிந்து தரைமட்டமானது. வெடிச்சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
அப்போது ரவியின் வீடு இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்த ஜெயா, மோகன் ஆகியோரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஜெயா பரிதாபமாக இறந்தார். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மோகன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் பற்றி அறிந்த மதுராந்தகம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசங்கரன் மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படைவீரர்கள் இடிபாடுகளை அகற்றிய போது அங்கு தீனதயாளன் பிணமாக மீட்கப்பட்டான்.
இது தொடர்பாக உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலிண்டர் வெடித்ததால் வீடு இடிந்து விழுந்ததா? என்ற கோணத்தில் முதலில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் சிலிண்டர் வெடித்ததற்கான அடையாளம் எதுவும் அங்கு இல்லை.
எனவே ரவி வீட்டில் வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் இச்சம்பவம் ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 1 முதல் 8-ந்தேதி வரை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சி செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது. வருவாய் கோட்ட அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், 1425–ம் பசலிக்கான வருவாய் தீர்ப்பாயத்தை (ஜமாபந்தி) தொடங்கி வைத்தார்.
பட்டா மாற்றம் முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை, புதிய ரேஷன் அட்டைக்கான மனு போன்றவைகள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
தாசில்தார் பரமளவர்தனி, சமூகநலத்துறை தாசில்தார் பாக்கியலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் உள்பட அனைத்து துறைகளை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். துணை வட்டாட்சியர் ஆறுமுகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வாரவிடுமுறை, கிருத்திகை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
இக்கோவிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அபிஷேகம் மற்றும் மொட்டை அடிப்பது, தங்கத் தேர் இழுப்பது போன்ற பல்வேறு வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
இதனால் கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு குத்தகை, முடிகாணிக்கை, அர்ச்சனை, மொட்டை டிக்கெட், சிறப்பு தரிசனம், உண்டியல் காணிக்கை உள்ளிட்ட பல்வேறு வகையினங்கள் மூலம் சுமார் 1 கோடி அளவில் வருமானம் வருகிறது.
நேற்று ஜூன் 1–ந் தேதி முதல் திருப்போரூர் முருகன்கோவிலில் புதிய அபிஷேக கட்டணம் குறித்த போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொட்டை காணிக்கை டிக்கெட் 10–லிருந்து 30 ரூபாயாகவும், காது குத்த 25–லிருந்து 50 ரூபாயாகவும், சிறப்பு தரிசனம் 10–லிருந்து 20 ரூபாயாகவும், திருமண பெண்அழைப்பு கட்டணம் 50–லிருந்து 150 ரூபாயாகவும், மூலவர் அபிஷேகம் 500–லிருந்து 1000 ரூபாயாகவும்,
உற்சவம் அபிஷேகம் கட்டணம் 750–லிருந்து 1500 ரூபாயாகவும், சக்கரஸ்தாபனம் அபிஷேகம் 1000–லிருந்து 2500 ரூபாயாகவும், தங்கத்தேர் கட்டணம் 1500–லிருந்து 2000 ரூபாயாகவும், கோயில் வளாகத்தில் திருமணம் நடத்த 1800–லிருந்து 2000 ரூபாயாகவும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டணம் அற நிலையத்துறை ஆணையர் உத்தரவின்பேரில் நேற்றிலிருந்து நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கு பாதியாக உள்ள இந்த கட்டண உயர்வால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “கோவிலுக்கு பல்வேறு வகையினங்கள் மூலம் வருமானம் வருகிறது. அபிஷேகம் உள்ளிட்ட கட்டணங்கள் அதற்கேற்ப வகையில் குறைந்த சதவீதமாக உயர்த்தலாம் ஆனால் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக” பக்தர்கள் தெரிவித்தனர். கட்டணங்களை மறுபரிசீலனை செய்யுமாறு இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நங்கநல்லூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் இன்று காலை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டாட்சியர் விமல்ராஜ் தலைமை தாங்கினார். பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுகொடுத்தனர்.
இதில் தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அங்கு தி.மு.க. பேனரும் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ராமன் தலைமையில் கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்கள், அரசு நிகழ்ச்சியில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட தி.மு.க. பேனரை அகற்ற வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் படம் இல்லாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நங்கநல்லூர் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசினர்.
ஆனால், தி.மு.க. பேனரை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்று கூறி அ.தி.மு.க.வினர் நங்கநல்லூர் மெயின் ரோட்டில் திரண்டனர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கட்டப்பட்டிருந்த தி.மு.க. பேனர் அகற்றப்பட்டது.
அ.தி.மு.க.- தி.மு.க.வினர் போட்டி போட்டு ஜமாபந்தி நிகழ்ச்சியில் அமர்ந்து இருந்தனர். அப்போது, அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் முதல்-அமைச்சரின் படத்தை கையில் பிடித்தவாறு நின்றார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்து வருகிறது.
சென்னை:
மறைமலைநகர் புவனேஸ்வரி அம்மன் நகரை சேர்ந்தவர் மோகன் (50). இவர் அந்த பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
நகராட்சிக்கு உட்பட்ட பாகம் எண் 181, வரிசை எண்.446–ல் வாக்காளர் பட்டியலில் மோகனின் பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை. இறந்தவர் பெயர் பட்டியலில் மோகன் பெயர் இருந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன் தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு அனுப்பி இருக்கிறார்.
அதில் எந்த பதிலும் வராததால் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட தகவல் ஆணையருக்கு விளக்கம் கேட்டு மனு அனுப்பி உள்ளார்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் 2-வது வருகை நுழைவு வாயிலில் ஒரு பை அனாதையாக கிடந்தது. இதைப்பார்த்து பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மோப்ப நாயுடன் போலீசார் அங்கு வந்து சோதனை செய்தனர். பையை திறந்து பார்த்தபோது அதில் துணிகள் இருந்தது. பையை பயணி ஒருவர் தவற விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.
காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஜரிகை ஆலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு மேற்கொண்டார். ஆலையின் செயல்பாடுகள் மற்றும் ஜரிகை தயாரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்து தங்கமுலாம் பூசும் கூடத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் பட்டுசேலை வடிவமைப்பினை பார்வையிட்டதுடன் விற்பனை மற்றும் பொது மக்கள் சேவை குறித்து நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே விசைதறி தொழிலாளர்கள் அத்தொழிலை கைவிட்டு வேறு தொழில்களுக்கு சென்று விட்டதால் அவர்களுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் இத்தொழிலை அவர்கள் தொடங்கினால் அவர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார். கைத்தறி துணி நூல் மற்றும் கதர்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், கோ-ஆப்டெக்ஸ் மாநில துணை தலைவர் ஜெயந்தி சோம சுந்தரம், முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் வள்ளிநாயகம், கேயுஎஸ். சோமசுந்தரம், கைத்தறி மற்றும் துணிநூல்துறை கூடுதல் இயக்குனர் கர்ணன், சப் கலெக்டர் அருண்தம்பு ராஜ், இணை இயக்குனர் மோகன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆலந்தூர்:
பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் சிப்பாயாக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவரிடம் அங்கு முடிதிருத்தும் தற்காலிக ஊழியராக பணியாற்றும் அனில் சோனால் 2 செல்போன், ரூ. 500 திருடினார்.
இது குறித்து பரங்கிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அனில் சோனாலை கைது செய்தனர்.
கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர் டி.டி.சி. நகரை சேர்ந்தவர் கலாவதி. நேற்று இரவு அவர் கணவருடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு நடத்து வந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென அவர்களை வழிமறித்தனர்.
நகை - பணம் கேட்டு தம்பதியை மிரட்டினர். அவர்கள் கொடுக்க மறுத்ததால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் கலாவதி அணிந்து இருந்த 9 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
ஆலந்தூர் சிமெண்ட் ரோடு, ஜி.எஸ்.டி. சாலையில் வசித்து வருபவர் லலிதா. வீட்டின் முன் பகுதியில் சிறிய அம்மன் கோவிலும் கட்டி இருந்தார். இவர் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாகவும், அதனை அகற்றவும் அதிகாரி கள் உத்தரவிட்டு இருந்தனர்.
இதையடுத்து இன்று காலை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ரவி, அண்ணாமலை மற்றும் ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் லலிதாவின் குடிசை வீட்டை அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை அங்கு பாது காப்பு இருந்த பரங்கிமலை போலீசார் சமாதானம் செய்தனர்.
இதற்கிடையே வீட்டு முன்பு இருந்த கோவிலையும் அதிகாரிகள் அகற்றினர். அப்போது லலிதா, சாமி சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் சிலையை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இதனை பார்த்து அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் சாமி சிலையை அகற்றாமல் சென்றனர்.






